Sunday, November 28, 2010

கேணிவனம் - சில கேள்வி பதில்கள்


அனைவருக்கும் வணக்கம்,


ஆகஸ்டு 6ஆம் தேதி நான் 'கேணிவனம்' எழுத ஆரம்பித்திலிருந்து, நவம்பர் 24ஆம் தேதி வரை மொத்தம் 111 நாட்கள் தொடர்ந்து இக்கதையை பொறுமையாக காத்திருந்து 30 பாகங்களையும் படித்து வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..!

கேணிவனம் குறித்து சில வாசக நண்பர்கள் மறுமொழியில் தொடர்ந்து கேட்ட கேள்விகளை இங்கு தொகுத்து பதிகிறேன்.

கேணிவனம் குறித்து உங்களது விமர்சனங்களையோ அல்லது வேறு சந்தேகங்களோ இருந்தால் தவறாமல் கேளுங்கள்..! (Email:- imhareeshnarayan@gmail.com)

கேணிவனம் குறித்து சில பொதுவான கேள்விகளும் அதற்கான பதில்கள்

கேள்வி:- தாஸூக்கு வயசாகும்போது அவர் மறுபடி டைம் டிராவல் செய்வாரா..? அவருடைய பிரதிதான் தாத்தா என்றால், அவர் இறந்தபின் அந்த வயதை எப்படி தாஸால் எட்ட முடியும்..? அல்லது சுருக்கமாக, 64 வயதுக்குப்பின் தாஸின் வாழ்வில் என்ன நடக்கும்?

 
விடை:- தாஸின் 64ஆவது வயதில் மீண்டும் இதே நடக்கும் என்று அர்த்தமில்லை..! ஏனென்றால், இப்போது நாம் கதையில் 1ஆம் மற்றும் 2ஆம் காலக்கட்டத்தை பார்த்ததுபோல், தாஸ் தாத்தாவாக பின்னோக்கி பயணித்து வந்தது என்பது மறைமுகமான 3ஆவது காலக்கட்டம். இப்போது நீங்கள் க்ளைமேக்ஸை தெரிந்து கொண்டு மீண்டும் இந்த கதையைப் படித்துப் பார்க்கும்போது, உங்களுக்கு இந்த மறைமுக காலக்கட்டம் பற்றி நன்றாகவே தெரியவரும். தாத்தாவின் ஒவ்வொரு வசனமும் இந்த 3ஆம் காலக்கட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவை...!


கேள்வி:- கேணியில் விழுந்து தொலைந்து போன ப்ரொஃபஸர் கணேஷ்ராம் என்னவானார்..? அவர் இப்போது எந்த காலக்கட்டத்தில் இருக்கிறார்..?

விடை:-  ப்ரொஃபஸர் கணேஷ்ராம் (1ஆம் காலக்கட்டத்தில் இருந்தவர்) தப்பான நோக்கத்தோடு வெற்றி பெற முயன்றபோது, கேணிக்குள் விழுந்து தொலைந்து போய்விட்டார்..! Lost in Time..! அவர் திரும்பி வருவது அசாத்தியம்.


கேள்வி:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகர வர்மனைப் பற்றியும் தாஸிடம் சொன்ன சித்தர், தாத்தாவைப்பற்றிய இரகசியத்தை சொல்லாமல் விட்டது ஏன்?
விடை:- நள்ளியைப் பற்றியும் இராஜசேகரவர்மனைப் பற்றியும் சொன்ன சித்தர், தாத்தாவை பற்றி சொல்லாததற்கு காரணம், நள்ளிக்கும்-தாஸூக்கும், இராஜசேகரவர்மனுக்கும்-தாஸூக்கும், எந்த ஒரு உணர்ச்சிகரமான சொந்தமுமில்லை..! அவனது முந்தைய பிறவிகளைப் பற்றி தெரிந்து கொள்வதில் தாஸூக்கு ஆச்சர்யமே தவிர வேறு எதுவும் உணர முடியாது. ஆனால், தாத்தாவைப் பற்றி சித்தர் சொன்னால், அவனுக்கு தாத்தாவுக்குமான Emotional Bonding பாதிக்கப்படும், இதனால், தாத்தா உயிருடன் இருக்கும்போதே அவன் அனாதையாக உணரக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று முக்காலமும் உணர்ந்த சித்தர் ஊகித்திருந்ததால் இதைப்பற்றி தாஸிடம் கூறவில்லை...


கேள்வி:- தாத்தாவாகவும் தாஸே இருந்தும், தனது இளைய தாஸிடம் கேணிவனத்தை பற்றி முழுமையாக கூறாததற்கு காரணம் என்ன..?

விடை:- இதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு,
1.  தாத்தா எதிர்காலத்தைப் பற்றி எதையும் கூறக்கூடாது என்று உறுதியெடுத்துக் கொண்டதனாலும்.
2. எதையும் தேடிக்கண்டுபிடிப்பதுதான் தாஸின் இயல்புத்தன்மை. அது மாறாமல் இருக்கவும் வேண்டும் என்றும்.
இருந்தாலும், தாத்தா பூடகமாக சில விஷயங்களை அவனுக்கு உணர்த்தி வந்திருப்பார் என்பது நீங்கள் மீண்டும் படித்துப் பார்த்தால் புரியும்.


கேள்வி:- தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தாரா அல்லது தன் காலத்துக்கு தசதரனை எடுத்துக் கொண்டு வந்தாரா?

விடை:- தசரதன் தாஸ் காலத்துக்கு பின்நோக்கி வந்து வாழ்ந்தார்.







கேள்வி:- தசரதன் மற்ற ஏழு கேணிகளையும் கண்டுபிடித்துவிட்டார் என்றால் அது அத்தனையுமே இந்தியாவில்தான் இருக்கிறதா..?

விடை:- இந்த கேள்விக்கு விடை அடுத்த பாகத்தின் கதை..!


கேள்வி:- மற்ற கேணிகளை உருவாக்கியவரும் சித்தர் தானா?

விடை:- ஆம், இந்த சித்தர்தான் அமைத்தார்... ஆனால் எப்படி என்பதற்கு விடை முந்தைய கேள்வியின் விடையே..!



கேள்வி:- அடுத்த பாகம் எப்போது..?

விடை:- இந்த பாகத்தை எழுத நான் எடுத்துக் கொண்ட 111 நாட்களில் பெரும்பாலும் முழுநேரமாக தகவல் சேகரிப்பு செய்திருக்கிறேன். ஆனால், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை துவங்கவிருப்பதால் (திரைப்படத்தின் விவரங்களை விரைவில் வெளியிடுகிறேன்), ஒரு நியாயமான இடைவெளிக்கு பிறகு, மே-2011-ல் அடுத்த தொடர்கதையை கண்டிப்பாக கேணிவனத்தைப் போலவே சுவாரஸ்யமாக எழுதுகிறேன்.

மேலும் கேள்விகள் திரண்டால், அதையும் தொகுத்து போடுகிறேன். அடுத்த பதிவில் வாசகர்கள் இமெயிலில் அனுப்பிய விமர்சனங்களை தொகுத்து போடுகிறேன்.

இக்கதைக்கான தகவல் சேகரிப்பில் எனக்கு பேருதவியாய் இருந்த புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள், நண்பர்கள் போன்றவற்றின் தொகுப்பையும் விரைவில் போடுகிறேன்.

நட்புடன் இணைந்திருப்போம்..! நன்றி வணக்கம்..!


-
DREAMER



Signature

Wednesday, November 24, 2010

"கேணிவனம்" - பாகம் 30 - [இறுதிபாகம்]




இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26          பாகம்-27          பாகம்-28          பாகம்-29

--------------------------------------------------------------------


பாகம் - 30

ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்த காலை வேலையில் தாஸ், சந்தோஷ், லிஷா மூவரும் காரில் சீறிக்கொண்டிருந்தனர். தாஸின் கையில், முன்னாள் இரவு, சந்தோஷ் வீடியோவில் கண்டெடுத்த சித்தரின் பாடல் ப்ரிண்ட் அவுட் இருந்தது. அதை தாஸ் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான்.

என்கண் நிறையிறை யவன்
எண்கண்ணு வுடையவனா ஆனதில்
நான் முகனவன் முகமதில்
நாரெண் டெட்டாம் கண்
நீகண்ட ததுவொன்றெனி
லெஞ்சியுள தேழென வெடுத்துரைத்தேன்
எனதா ஆசனுக்கு


என்று சித்தர் எழுதிய இப்பாடலை பார்த்தபடி தாஸ் காரில் சீறிக்கொண்டிருந்தான். தாஸ் அந்த பாடலுக்கு மனதினில் உரையெழுதிக் கொண்டிருந்தான்.

'பாஸ்..? இந்த பாடலோட பொருள் உங்களுக்கு ஏதாவது புரியுதா..?' என்று கேட்டான்

'புரியற மாதிரித்தான் இருக்கு கொஞ்சம் டைம் கொடு... சொல்லிடுறேன்..'

'நான் வேணும்னா ஹெல்ப் பண்ண்டடுமா..?' என்று லிஷா கேட்டாள்

'இல்ல லிஷா... ஜஸ்ட் கிவ் மி ஃப்யூ மினட்ஸ்..' என்று மீண்டும் பாட்டில் லயித்தான்.

சில நிமிடங்கள், சாலையோடு சேர்ந்து கரைந்தது...

சந்தோஷ், தான் கொண்டு வந்திருந்த புது பேட்டரியை தாஸின் செல்ஃபோனில் பொருத்திக் கொண்டிருந்தான்.

தாஸூக்குள் ஒரு தெளிவு... பாடலின் பொருளை பிடித்துவிட்டான். சித்தர் கூறிவிட்டு சென்ற மாபெரும் ரகசியமது என்று தெரிந்து கொண்டான்.

ஆனால் கார் தாஸின் ஆஃபீசை இதற்குள் நெருங்கி விடவே, மூவரும் இறங்கி... நீண்ட நாட்களாக பூட்டியிருந்த தாஸின் 'Ancient Park'-இனுள் நுழைந்தனர்.

தாஸின் ஆஃபீஸறையில் நுழைந்து, ஏஸியை போட்டு, மிதமான ஆரஞ்சு வெளிச்சத்தில் அமர்ந்தனர்.

'என்ன பாஸ்... பாட்டு என்னன்னு தெரிஞ்சுதா..?' என்று மீண்டும் சந்தோஷ் ஆவர்மாய் கேட்க, சூழலை சுவாரஸ்யமாக்கும்பொருட்டு தாஸ் சிரித்தபடி லிஷாவிடம்...

'பாட்டுல என்ன இருக்குன்னு சொல்லணும்னா, லிஷா நீ போய் 3 பேருக்கும் காஃபி கொண்டுவா...' என்று கூற, லிஷா அந்த பாடலின் பொருளை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் எழுந்து சென்றாள்.

அடுத்ததாக சந்தோஷிடம் திரும்பி, 'நீ என்ன பண்றேன்னா, இந்த சித்தர் பாட்டோட ப்ரிண்ட் அவுட்-ஐ ஸ்கீர்ன்ல ப்ரொஜெக்ட் பண்ணு..' என்றான். சந்தோஷ் எழுந்து தனது பெண்-டிரைவில் இருந்த அந்த சித்தர் பாடல் கொண்ட ஸ்க்ரீன்ஷாட் ஃபோட்டோவை  லேப்டாப்பினில் இணைத்து, சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பெரிய திரையில் ரிஃப்ளெக்ட் ஆகும்படி ப்ரொஜெக்ட் செய்தான்...


லிஷா இதற்குள், காஃபி மெஷினிலிருந்து, சுடச்சுட 3 காஃபியை கொண்டு வந்து கொடுத்தாள்.

மூவரும் அமர்ந்து காஃபியை குடித்தனர். தாஸ் எழுந்து சென்று ஒரு போர்டு மார்க்கர் எடுத்துக் கொண்டான்.

திரையில் தெரிந்து கொண்டிருக்கும் சித்தர் பாடலை அந்த போர்டிலேயே மார்க் செய்தபடி கீழ்கண்டவாறு எழுதி காட்டியபடி பொருள் உரைத்தான்.

என் கண் நிறை இறை அவன் (பிரம்மா)

'என் கண் நிறைந்த கடவுள் அப்படின்னு தன்னோட கடவுள் பிரம்மாவைப் பத்தி சொல்றாரு..' என்று தொடர்ந்து எழுதினான்

எண் (8) கண் உடையவன் ஆனதில்

'அந்த பிரம்மா கடவுள் 8 கண் உடையவருன்னு சொல்றாரு...'

நான்முகன் = பிரம்மா முகம் அதில்

'4 முகம் கொண்ட பிரம்மாவுக்கு...'

நாரெண்டு எட்டு உள்ளதாம் கண் (4X2=8)

'4X2 எட்டு கண்ணு இருக்கிறதால...'

நீ கண்டதது ஒன்றெனில்

'நீ பாத்தது ஒண்ணுதான்...'

எஞ்சியுள்ளது ஏழு என எடுத்துரைத்தேன்

'இன்னும் மிச்சமிருக்கிறது 7 இருக்குன்னு சொல்றாரு...'

என் தாசனுக்கு

'தாசன்-னா..? சீடன்..! தன்னோட சீடனுக்கு சொல்ற மாதிரி எழுதியிருக்காரு...' இல்லை மறைமுகமா சீடனுக்கு சொல்ற மாதிரி எனக்கும் சொல்லியிருக்கலாம். ஏன்னா என்னையும் தாஸ்-னுதான் அவர் கூப்பிட்டாரு...' என்று தாஸ் கூறி முடித்து காஃபியைத் தொடர்ந்தான்.

லிஷா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.., 'தாஸ்... இது உண்மையா..?'

'உண்மையா இருக்கிறதாலத்தானே எழுதியிருக்காரு..?' என்று தாஸ் அவளுக்கு பதிலளிக்க, சந்தோஷ் சற்று புரியாமல் விழித்தான்.

'என்னது உண்மையான்னு பேசிக்குறீங்க..? எனக்கு புரியல..?'

'அடப்பாவி சேண்டி, இதுகூடவா புரியல...? உன்னை கட்டிக்கிட்டு நான் எப்படித்தான் காலந்தள்ள போறேனோ..' என்று அவனை லிஷா செல்லமாய் திட்டினாள்...

'நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம் டியர்... நீ இப்ப என்ன விஷயத்தை உண்மையான்னு ஆச்சர்யமா கேட்டே..?'

'டேய், அந்த சித்தர் கேணிவனத்தைத்தான் பிரம்மாவோட கண்ணுன்னு ஏற்கனவே சொல்லியிருக்காருல்ல... இப்போ இந்த பாட்டு, நாம பாத்தது ஒரு கண்ணுதான், ஆனா, மொத்தம் 8 கண்ணு, அதுல ஒண்ணு போக மிச்சம் இன்னும் 7 கேணி இருக்கிறதா சொல்லியிருக்காரு... கரெக்டா தாஸ்..?' என்று தாஸை கேட்டாள்

'பர்ஃபெக்ட்லி ரைட் லிஷா...' என்று கூறினான். இப்போது சந்தோஷூம் ஆச்சர்யத்தில் மூழ்கினான்.

'பாஸ்... ஒரு கேணிவனத்துக்கே நாம் இவ்வளவு பாடுபட்டோம். அப்போ இன்னும் 7 இருக்கா..' என்று கேட்டான்

தாஸ் அதற்கு கண்களால் ஆம் என்று பதிலளித்தபடி அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'பாஸ், இது எங்கேயிருக்கும்னு உங்ககிட்ட நேர்ல பேசும்போது ஏதாவது அந்த சித்தர் சொல்லியிருக்காரா..?'

'எங்கேயிருக்குன்னு சொல்லலை, ஆனா, அதோட தன்மையை மறைமுகமா சொல்லியிருந்தாரு... உன் பிறவியில் உன்னை நீயே பார்க்க 'இந்த' காலத்துவாரத்தில் முடியாது-ன்னு சொன்னாரு... அப்போ அதுக்கு என்ன அர்த்தம், மத்த கேணியில இந்த விஷயம் சாத்தியம்னுதானே..! ஆனா, அது அப்போ புரியல... இப்போத்தான் புரியுது..' என்றான்.

'பாஸ், அப்போ, மத்த கேணியில ஒவ்வொரு கேணிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி இருக்கும்னு சொல்றீங்களா..?'

'ஆமா...'

'எங்கேன்னு போயி தாஸ் இதெல்லாம் தேடுறது...' என்று லிஷாவும் ஆர்வத்துடன் கேட்டாள்

'எங்கே வேணும்னாலும் இருக்கலாம் லிஷா... இனிமே பழைய கோவிலுங்களுக்கு போனா, அங்கே கிணறு ஏதாவது மூடியிருக்கான்னு பாக்கணும்... அதுல எந்த கிணறும் காலத்துவார கேணியா இருக்கலாம்..? இது ஜஸ்ட் ஒரு கெஸ்ஸிங்-தான்'

'பாஸ்... எனக்கு தெரிஞ்சு திருவொற்றியூர்ல ஒரு கோவில்ல ஒரு கிணறு மூடியிருக்கும்... ஆனா, அதுக்கு அவங்க வேற காரணம் சொல்றாங்க... அதாவது, கண்ணகி மதுரையை எரிச்சிட்டு கோபமா அங்க வந்தப்போ அவங்களை ஏதோ ட்ரிக் பண்ணி அந்த கிணத்துக்குள்ள போட்டு அடச்சிட்டாங்களாம்... சினம் குறையாத கண்ணகி இன்னும் அந்த கிணத்துக்குள்ள இருக்கிறதாவும், அதை திறந்தா, மறுபடியும் கோபத்தோட வந்து உலகத்தையே எரிச்சிடுவாங்கன்னும் சொல்றாங்க...'

'இந்த பழங்கதைகள் எல்லாம், கேக்குறதுக்கு சுவாரஸ்யமாவும் நம்பறதுக்கு கஷ்டமாவும் இருக்கும். ஆனா, ஒவ்வொரு கதைக்கு பின்னாடியும் அந்த கதைக்கு துளியும் சம்மந்தமில்லாத ஏதோ ஒரு பெரிய உண்மை மறைஞ்சியிருக்கும். உதாரணத்துக்கு இப்போ, இந்த கண்ணகி கிணறுக்குள்ள காலத்துவாரம் இருக்குன்னே வச்சிக்கோங்க... அதை ஓபனா சொல்லாம இப்படி ஒரு புனைவுக்கதையை வச்சி சொல்லியிருக்கலாமில்லியா... இதுவும் ஒரு ப்ளைண்ட் அஸெம்ப்ஷன்தான். நம்மளை சுத்தி நம்ம முன்னோர்கள் விட்டுட்டு போன எத்தனையோ ரகசியங்கள் இருக்கு... அது ஒவ்வொன்னும் ஒவ்வொருவிதத்துல ஒரு பொக்கிஷம்தான்... நாம முன்னோர்களையும் மறந்துட்டோம் பொக்கிஷத்தையும் தொலைச்சிட்டோம். இன்னைக்கு எத்தனையோ தாத்தாக்கள் விட்டுட்டு போன மருத்துவ குறிப்புக்கள்லாம் பொட்டலம் சுத்துற பேப்பரா தொலைஞ்சி இருக்கு...' என்று தாஸ் மிகவும் ஃபீலிங்குடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவனது செல்ஃபோன் ஒலித்தது...

ரிங்டோன் பாடல்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை - வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை!


டிஸ்ப்ளேவில் ஓல்டு ஃப்ரெண்டு என்று வந்தது...

அட..! தாத்தா..! என்று குதூகலத்துடன் ஃபோன் எடுத்தான்.

'ஹலோ... தாத்தா..?' என்று தாஸ் ஆனந்தமாக ஆரம்பிக்க, மறுமுனையில் சுசீலாம்மா...

'தம்பி, நான் சுசீலா பேசுறேம்ப்பா..?'

'சுசீலாம்மா..? சொல்லுங்க..'

'தா... தாத்தாவுக்கு, ரொம்ப முடியலப்பா... நான் நேத்துலருந்து உங்கிட்ட பேச பாக்குறேன். உன்னை பிடிக்கவே முடியல... சீ..சீக்கிரம் வந்துடுப்பா... எதுவும் நடக்கும்போலருக்கு...' என்று பூடகமாய் சொல்ல... தாஸ் புரிந்து கொண்டான்.

'நா... நான்... வர்றேம்மா... இ..இப்பவே வர்றேன்...' என்றான்

----------------------------------------

கந்தன் கொள்ளை கிராமத்தில்...

தாத்தாவின் அறையில் தாஸ், சந்தோஷ் மற்றும் லிஷா இருந்தனர்... சுசிலாம்மா சுவரோரமாக சாய்ந்தபடி நின்றிருந்தார்.

தாஸ் கட்டிலில் படுத்திருக்கும் தாத்தாவை சமீபித்து அமர்ந்தான்...

'தா... தாத்தா..' என்றான்.

அவர் சுயநினைவு தப்பியவராயிருந்தார். தாஸ் அழுதான். லிஷாவும் சந்தோஷூம் அருகில் வந்து அவனை தேற்றினார்கள்.

சுசீலாம்மா மெல்லிய குரலில் புலம்பினாள்.

'உன்னிய பாக்கணும்னு துடியாக் கெடந்தாரு தம்பி... மனுசன் ஒருதடவை உன்னிய பாத்துட்டாருன்னா நிம்மதியாயிடும்... இப்போ நீ வந்தும் முழிப்பில்லாம போச்சேன்னுதான் கஷ்டமாயிருக்கு..' என்று கூறினாள்

தாஸூக்குள் மிகவும் குற்றவுணர்வாய் இருந்தது... தாஸ் சிறுவயதிலிருந்து தாய் தந்தையில்லாமல் தாத்தாவுடன் மட்டுமே வளர்ந்தவன். ஆனால், தாய் தந்தை பாசத்தை உணராத குறை எள்ளளவும் இல்லாதபடி தன்னை வளர்த்த தாத்தா இப்போது இப்படி சுயநினைவில்லாமல் ஜடமாய் கிடப்பது மிகவும் வேதனையளித்தது...

நான் மட்டும் கேணிவனத்துக்கு பயணப்படாமலிருந்திருந்தால், இப்போது தாத்தாவுடன் பேசியிருந்திருக்கலாம். கடைசி காலத்தில் மனிதன் தன்னுடன் என்னவெல்லாம் பேச ஆசை பட்டிருப்பார். எப்போதுமே என்னுடன் வந்து சில நாட்களாவது தங்கிவிட்டுப் போ என்று கெஞ்சி கெஞ்சி கேட்பாரே... சே..! என்ன பேரன் நான்... இவருக்கு என்ன கைமாறு செய்திருக்கிறேன். இவரை விட்டுப் பிரிந்து இத்தனை வருடங்களாய் வேலை! எழுத்து! புத்தகம்! என்று இவரை மறந்தேவிட்டேனே..! என்று மனதிற்குள் தன்னைத் தானே தாஸ் ஏகத்துக்கும் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று சடகோப சித்தரின் ஞாபகம் வந்தது.. மனதால் அவரிடம் பிரார்த்தனை செய்தான்.

ஐயா..! சித்தரே..! உன்னைப் பார்க்கத்தானே, நான் இவரை புறக்கணித்து வந்தேன். இப்படி எங்களிருவரையும் பேசவிடாமல் செய்தல் நியாயமா..! எனது அன்புக்குறிய தாத்தாவிட்ம நான் பேச வேண்டும்... எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள்..! உங்களுக்கு கோடி புண்ணியம்..! என்று அவன் மனதிற்குள் நடத்தும் பிரார்த்தனைக்கு கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது...

திடீரென்று தாத்தா பேசினார்...

'தா..ஆஆஆ...ஸ்ஸ்...' என்று மிகவும் மெல்லிய குரலில் வார்த்தை வந்தது

தாஸ் அவர் கைகளை கெட்டியாக பிடித்தான்.

'தாத்தா... ஓ..ஓல்டு ஃப்ரெண்டு... நா.. நான் வந்துட்டேன்...' என்றான்

'தா..ஆஆ...ஆஸ்.ஸ்...' என்றார்

சுசீலாம்மா முகம் மலர்ந்தாள். நல்லவேளை இரண்டு பேரும் பேசிக் கொள்கிறார்கள் என்ற மகிழ்ச்சி அது...

தாத்தா தனது மெல்லி குரல்களில் தாஸ்க்கு மட்டும் கேட்கும்படி ஏதோ சொன்னார்

'நா... நான்... ஒரு அ..நாதை... ரொ...ம்ம்.. ப.... க..ஸ்டப்பட்... வளந்தேன்.. நிறைய... சாதி..ச்சேன்...'

அவர் சொல்வது புரிந்தாலும், அவர் சொல்லும் விஷயம் புதிது என்பதால் தாஸ் குழம்பியபடி 'தாத்தா..?' என்றான்

'ஆ..னா... நா..ன்... அநாதை... நீ... அநாத ஆயிடக்கூடா..து...ன்னுதான்... நா... நான்...தி..திரும்பி... வந்தேன்...' என்றார்

தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை...

'உன்ன... பாசமா... நானே... வளத்தேன்...'

'தாத்தா..?'

'நா..நான்... உ..உன்... தாத்தா.. இ...ல்ல...'

'தாத்தா... என்ன சொல்றீங்க.. தாத்தா... அப்போ நீ..நீங்க... யாரு...' என்று கண்களில் நீர்வழிந்தபடி கேட்டான்

அவர் மிகவும் பிரயத்தனத்துடன், தனது இடதுகையை தன் தலையணைக்கு கொண்டு செல்ல முயன்றார்... அவர் கைகளில் சக்தியற்று தலையணையை எட்ட முடியாமல் தவித்தது.. தாஸ் அவர் எதையோ எடுக்க முயல்வதை புரிந்துக் கொண்டு அவர் தலையணையை கொஞ்சமாக எடுத்துப் பார்த்தான். அங்கே ஒரு குட்டி சாவி இருந்தது...

'சாவியா..? இந்த சாவியா..! இதோ இதோ..' என்று அதை எடுத்து அவர் கண்முன் காட்டினான்.

'அவர் தனது கைகளை தாஸின் கைகளில் வைத்து அழுத்தி, அந்த சாவியை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி அவன் கையை மூடினார். பிறகு மெல்லிய குரலில்

'நா...ன்.... நீ...' என்று கூறியபடி மூச்சை துறந்தார்...

சுசீலாம்மா ஓவென்று அலறினாள். தாஸ்க்கு  அவர்கூறிய கடைசி வார்த்தைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது... அதற்கு என்ன அர்த்தம்... என்று யோசித்தபடி தனது கைகளிலிருக்கும் சாவியைப் பார்த்தான்... மெல்ல எழுந்தான்.

சுசீலாம்மா தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்க... லிஷா அவளை தாங்கலாக பிடித்துக் கொண்டு தேற்றிக்கொண்டிருந்தாள். சந்தோஷ் அமைதியாக ஓரமாக நின்றிருந்தான்.

தாஸ் அந்த அறையை சுற்றி சுற்றி பார்த்தான். அறையின் ஓரத்தில், தாத்தாவின் மரபீரோ கம்பீரமிழந்து 'எனது எஜமான் இறந்துவிட்டான்' என்பது போல் தாத்தாவின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தபடி நின்றிருந்தது.

அதை சமீபித்தான்.

மெல்ல அதை திறந்தான்.

உள்ளே, ஒரு லாக்கர் அறை போல் இருந்தது...

அதையும் திறந்தான்.

உள்ளே பணம் வைக்கும் இரும்பு பெட்டி ஒன்று இருந்தது...

தனது கையிலிருக்கும் சாவியை அந்த பெட்டியில் பொருத்தி பார்த்தான்.

திறந்துக் கொண்டது...

உள்ளே..! ஒரு பழைய புத்தகமும் ஒரு கடிதமும் இருந்தது...

அந்த புத்தகத்தை பிரித்துப் படித்தான். அது நேற்றிரவு தாஸ் ஆஸ்பிடலில் எழுத ஆரம்பித்த கேணிவனம் புத்தகம். நேற்று இரவு வரை ஐந்தரை பாகம் மட்டுமே எழுதி முடித்த புத்தகம் இன்று முழு புத்தகமாய் அவன் கையில்...

குழம்பினான். உடனிருந்த கடிதத்தை பிரித்து படித்தான்.

'அன்புள்ள என் பிரதி தாசுக்கு,

சிறுவயதில் அநாதையாக வளர்ந்த எனக்கு பாசம் நேசம் போன்ற அந்நிய வார்த்தைகள் மீது ஆசை வந்தது... வாழ்வில் எத்தனையோ விஷயங்களை சாதிக்க துடித்தேன். அதில் சிலவற்றை செய்தும் முடித்தேன். ஆனாலும், இன்னொருவர் அரவணைப்பில் அன்பில் திளைப்பதுமென்பது கடவுள் போல் கண்ணுக்கு தெரியாத பொருளாகவே இருந்தது... இந்நிலையில் என் இளமைக்காலத்தில் கேணிவனத்தின் மூலம் காலத்துவாரம் என்ற மாபெரும் பொக்கிஷம் எனக்கு தெரியக் கிடைத்தது... அதுவும் ஒன்றல்ல ஏழு என்பது தெரிந்து, அதில் என் வாழ்நாட்களில் நான்கு காலத்துவாரங்களை கண்டுகொண்டேன்.

கல்யாணம் செய்து கொண்டேன். துணைவியின் மூலம் அன்பும் ஒரு அன்பான மகனும் கிடைத்தான். ஆனால், ஒரு விபத்தில் சீக்கிரமே இருவரும் மீண்டும் என்னை பிரிந்து சென்றார்கள். நான் நினைத்தால் அவர்களை கேணிவனத்தை பிரயோகித்து காப்பாற்றியிருக்கலாம். ஆனால், நான் சித்தருக்கு அளித்த வாக்கின்படி, அவசியமில்லாமல் இயற்கை நிகழ்வுகளை மாற்றியமைக்க கூடாது என்பதில் திண்ணமாய் இருந்துவிட்டேன். மனைவி மகனின் அன்பை மறக்க, என்னை முழுமையாக பயணங்களில் ஈடுபடுத்திக் கொண்டேன். பல அரிய பொக்கிஷங்களை கண்டெடுத்தேன். பல்வேறு பகுதிகளுக்கு பலவருடங்கள் பயணித்தேன். எனது வாழ்க்கையில் பயணமும், சாகசமும் பஞ்சமில்லாமல் நிகழ்ந்தது..! எனக்கேற்பட்ட பஞ்சமெல்லாம் பாசத்திற்குத்தான்.

அந்நேரத்தில் பாசத்துக்கு துடிக்கும் இன்னொரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவெடுத்தேன். அப்போதுதான் எனக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது..! யாரோ ஒருவரை தத்தெடுப்பதற்கு நானே என்னை ஏன்  தத்தெடுத்து வளர்க்க கூடாது என்று தோன்றியது... நான் கண்டுபிடித்த காலத்துவாரங்களில் 4ஆவது கேணியின் வாயிலாக எனது பிரதியை நான் நோக்கும் விதமாய், எனது 64 வயதிலிருந்து 60 வருடம் பின்னோக்கி எனது 4ஆம் வயதிற்கு காலப்பயணம் மேற்கொண்டேன். நானே அநாதையாக இருக்கும் உன்னை தத்தெடுத்து தாத்தாவாய் வளர்த்தேன். நானான உன்னின் மீது பாசத்தை பொழிந்து அன்பும் கணிவும் கொடுத்து வளர்த்தேன்.

உன் வாழ்வில் இன்னும் நிறைய அனுபவங்கள் உனக்கு கிடைக்கவிருக்கிறது. நான் எதிர்காலத்திலிருந்து வந்ததற்கு அடையாளமாய் நான் கொண்டு வந்ததெல்லாம் ஒரே ஒரு பொருள்தான்.. அது நான்(நீ) எழுதிய கேணிவனம் என்ற புத்தகம்தான். இதில் நான் புனைந்து எழுதிய சில விஷயங்கள், அடுத்த 7 கேணியைத் தேட உனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும்..! நடக்கப்போவதை நடந்திருந்து பார்..! என்று சித்தர் கூறியதை மறவாதே..! நான் எதிர்காலத்தில் நடக்கப்போவதை உனக்கு ஆருடம் சொல்லப்போவதில்லை..! ஆனால், எதிர்காலம் நிகழ்காலத்தைவிட மிகவும் மோசமானதாய் இருக்கும்... இந்த வாக்கியம் எந்த காலக்கட்டத்திற்கும் பொருந்தும். எதிர்காலத்தை எதிர்கொள்ளும் துணிச்சலையும் திடத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் பரிணாம வளர்ச்சி..! அது இயற்கை உனக்கு கொடுக்கும்.

இப்படிக்கு அன்புடன்
நீ..!'

கடிதத்தை படித்து முடித்து திரும்பி கட்டிலில் இறந்துக் கிடக்கும் தாத்தாவைப் பார்த்தான். உடம்பெல்லாம் மயிர்கூச்செரிவது போலிருந்தது...

லிஷா ஒருமுறை 'உங்க தாத்தா ஜாடை அப்படியே உங்கிட்ட இருக்கு..' என்று சொன்னதும்...

'இவர்தான் என் தாத்தா, இவர் பேர் தசரதன். இவரு பேரைத்தான் எனக்கு வச்சிருக்காங்க...' என்று தாஸ் பலரிடம் கூறியதும் நினைவுக்கு வந்தது...

பயங்கரமாக அழுகை வந்தது... ஓடிச்சென்று அவர் பாதங்களைப் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.

'நீ யாராக இருந்தாலும், எனக்கு நீ தாத்தாதான். இத்தனை வருடமும், அன்பில் திளைக்க செய்த நீ என் தாத்தாதான். தமிழை கற்றுக் கொடுத்தாய், சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்ததாய், பள்ளிக்கு என்னுடன் நடந்து வந்தாய், கோவில்களுக்கு அழைத்து சென்று சிற்பங்களின் மேன்மைகளை புகட்டினாய்... இப்படி அரிய பல விஷயங்களை அன்புடன் கற்றுக் கொடுத்த நீ என் தாத்தாதான்' என்று கதறியழுதான்.

அருகிலிருந்த அனைவரும் தாஸ் இப்படி அழுவதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாஸ் அவர் கால்களை கட்டிப்பிடித்தபடி அழுதுமுடித்து மெல்ல நிமிர்ந்தான்.

அவர் உள்ளங்கால் இரண்டிலும், 12ஆம் நூற்றாண்டில் நள்ளி-யால் வரையப்பட்ட அதே தோல்சித்திரம்...
- நிறைவு -

இதுநாள் வரையிலும் இத்தொடரை பொறுமையாக வாசித்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி...


Signature

Saturday, November 20, 2010

"கேணிவனம்" - பாகம் 29 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26          பாகம்-27          பாகம்-28

--------------------------------------------------------------------

பாகம் - 29

2ஆம் காலக்கோட்டில் நடந்துக் கொண்டிருப்பது...

இதுவரை தாஸின் லேப்டாப் திரையில், ஹேண்டிகேமிராவில் பதிவான 12ஆம் நூற்றாண்டு காட்சிகளையும், 1ஆம் காலக்கட்டத்தில் நடந்ததாக தாஸ் கூறியதையும் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த லிஷாவும், சந்தோஷூம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

'பாஸ்... என்னென்னவோ நடந்திருக்கு..! எங்க உயிரையே காப்பாத்தியிருக்கீங்க..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்ன தெரியல பாஸ்..!' என்று சந்தோஷ் செண்டிமெண்டாக ஆரம்பித்தான்.

'நன்றி சொல்ல வேண்டியதெல்லாம் அந்த சித்தருக்குத்தான். இப்படி ஒரு கேணி இருக்கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாச்சு.!' என்று தாஸ் சித்தரை நினைவுக்கூர்ந்தான்.

'ஆமா தாஸ், இந்த கேணிவனம் உண்மையிலேயே ஒரு டைம் ட்ரெஷர்-தான்' என்று லிஷாவும் கூறினாள்.

'பாஸ், இப்போதான் உங்ககிட்ட கேணிவனம் இருக்கிறதுக்கான எல்லா வகையான ஆதாரமும் இருக்கே..! வீடியோ கேமிராவுல 12ஆம் நூற்றாண்டு காட்சிகளும் பிடிச்சிட்டு வந்துட்டீங்க..! இதையெல்லாம் வச்சி இனி கேணிவனத்தை கவர்மெண்ட்கிட்ட ப்ரூஃப்-ஓட சொல்லிடலாமே..! உங்க பேரு எங்கேயோ போயிடுமே பாஸ்..?' என்று கூற

தாஸ் பேசாமலிருந்தான். அவன் மௌனத்தை கண்ட லிஷாவும் சந்தோஷூக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்

'தாஸ், சேண்டி சொல்றதுதான் கரெக்ட்-னு எனக்கும் தோணுது..! இதுக்கு மேலயும் இந்த விஷயத்தை மறைச்சி வைக்கணுமா, இந்த விஷயம் வெட்ட வெளிச்சமாக வேண்டாம்னு நினைச்சா, டாப் சீக்ரெட்-ஆ வேணும்னா மிலிட்டரியில கூட சொல்ல்லாமே..!' என்று தன் பங்குக்கு கூறினாள்.

'இல்ல லிஷா, அந்த சித்தர் இந்த கேணிவனத்தை உருவாக்குன நோக்கத்தை கேட்டதுக்கப்புறம் இந்த விஷயத்தை வெளியே சொல்லணுமான்னு தோணுது..?'

'ஏன்..?'

'அரசர்களுக்கு மத்தியில போர் வராம நிறுத்துறதுக்கு அந்த சித்தர் உருவாக்கின இந்த கேணிவனத்தை பத்தி இப்போ நாம வெளியே சொன்னா, வருங்காலத்துல இதை சொந்தமாக்கிக்கிறதுக்கு, நாடுகளுக்கு மத்தியிலியே ஒரு போர் வந்தாலும் வரலாம்...'

'என்ன பாஸ் சொல்றீங்க..?'

'ஆமா, கஜினி முகம்மது நம்ம நாட்டுக்குள்ள  படையெடுத்தது எதுக்கு, நாட்டை ஆளுறதுக்கா..? சோமசுந்தரேஸவரர் கோவில் பொக்கிஷத்தை ஆக்கிரமிக்கிறதுக்குத்தானே..? ஈஸ்ட் இண்டியா கம்பெனிக்காரங்க நம்ம நாட்டு வளத்தைப் வியாபாரத்து மூலமா பாத்து வியந்துதான் நாட்டையே ஆக்கிரமிச்சாங்க... இப்படி பல உதாரணமிருக்கே..? இந்த கேணிவனம் அப்படி ஒரு உதாரணமாகிடக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்'

'சரி தாஸ், இந்த கேணிவனத்தைப் பத்தி யாருக்கும் தெரியாமலே போய், பாழடைஞ்சி காடுமண்டி கிடக்குறதுல என்ன லாபம்...' என்று லிஷா கேட்டாள்

அதுவும் சரிதான் என்று யோசித்த தாஸ், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தான்.

'இரகசியத்தை இரகசியமா வைச்சு பாதுகாக்குறதுதான் ரொம்ப கஷ்டம். அதையே பகிரங்கப்படுத்திட்டா, யாருக்கும் அது மேல கவனம் திரும்பாது...' என்றான்

'பகிரங்கப்படுத்துறதா..?'

'எப்படி..?' என்று லிஷாவும் சந்தோஷூம் மாறி மாறி கேட்டனர்.

'இந்த கேணிவனத்தைப் பத்தின விஷயங்களை ஒரு நாவலா எழுதப்போறேன்..'

'பாஸ், எல்லாருக்கும் தெரிஞ்சிடுமே..?'

'எல்லாருக்கும் ஒரு சுவாரஸ்யமான புனைவுக் கதையாத்தான் தெரியும். அது ரொம்ப ரொம்ப சேஃப்... இது உண்மையா இருக்கிற ஒரு விஷயத்தை பத்தின கதைன்னு கெஸ் பண்ண மாட்டாங்க... அப்படி உண்மையா இருந்தா ஏன் இப்படி பகிரங்கமா எழுதப்போறான்-னுதான் நினைக்கத் தோணும். அதே நேரம், அந்த கதையில கேணிவனம் பத்தின உண்மை காலாகாலத்துக்கும் ஒரு அச்சிடப்பட்ட ஆதாரமா கதைவடிவில இருக்கும்... எப்போ இந்த விஷயத்தை வெளியில கொண்டு போகணுமோ அப்போ கொண்டு போயிடலாம்.' என்று தாஸ் கூற, லிஷாவும் சந்தோஷூம் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

'தாஸ், இது சேஃபா..?' என்று லிஷா சந்தேகத்துடன் மெல்லிய குரலில் கேட்டாள்.

'இதுதான் ரொம்ப சேஃப் லிஷா...! இந்த கேணிவனத்தை பத்தின ஆதாரங்களை நம்மகிட்டயே வச்சிருந்தா, சக்கரவர்த்தி, ப்ரொஃபஸர் மாதிரி ஆட்களால என்னிக்கும் நம்ம உயிருக்கு ஆபத்து வரலாம், அப்படியில்லாம இந்த ஆதாரங்களையெல்லாம் எங்கேயாவது சேஃபா ஒளிச்சு வச்சுட்டு, அந்த ஆதாரங்கள் இருக்கிற இடத்தையும் பூடகமா இந்த நாவலோட சேர்த்து இழைச்சுடறேன். வாசகர்களை பொறுத்தவரைக்கும் கேணிவனம் ஒரு சுவாரஸ்யமான நாவல்... ஆனா, நம்மளை பொறுத்த வரைக்கும், அந்த புத்தகம், கேணிவனத்தை ரீச் பண்றதுக்கான ஒரு எழுத்துவடிவிலான மேப்' என்று கூறினான்.

இப்போது இருவருக்கும் இந்த யோசனை புரிந்தும் பிடித்தும் போனது.

'ஓகே பாஸ்... சவுண்ட்ஸ் குட்..' என்று சந்தோஷ் தன் பங்கிற்கு வாக்களித்தான்.

'சேஃபான ரூட்-னுதான் நினைக்கிறேன்...' என்று லிஷாவும் இந்த யோசனைக்கு சம்மதித்தாள்.

சந்தோஷ் கடிகாரம் பார்த்தான்.

'லிஷா?! விசிட்டிங் அவர்ஸ் முடியப்போகுது, நாம போயிட்டு நாளைக்கு காலையில வந்துடலாம்.. பாஸ், நாளைக்கு உங்களை டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லியிருக்காங்க... நீங்க இன்னிக்கி நைட் நல்லா ரெஸ்ட் எடுங்க... நாளைக்கு நாங்க வந்து உங்களை கூட்டிட்டு போறோம்...'

'ஓகே..! சந்தோஷ் ஒரு நிமிஷம்..? நாளைக்கு வரும்போது, இந்த சித்தரோட சில ஃபோட்டோஸ் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஒரு ப்ளோ-அப் ப்ரிண்ட்-அவுட் எடுத்துட்டு வந்துடு...!' என்று தனது லேப்டாப்-லிருந்து மெமரி கார்டு-ஐ கழட்டிக் கொடுத்தான்.

'அப்படியே என் செல்ஃபோனுக்கு ஒரு பேட்டரியும் வாங்கிட்டு வந்துடு சந்தோஷ்..?' என்று தாஸ் சந்தோஷிடம் கேட்டுக்கொள்ள...

'ஓகே...' என்று கூறி இருவரும் விடை பெற்று சென்றனர்.

--------------------------------

மாலை 7.45...

அந்த ஆஸ்பத்திரி அறையிலிருக்கும் பால்கணியில் நாற்காலி போட்டு தனது லேப்டாப்புடன் தாஸ் அமர்ந்து கொண்டான்.

சென்னையின் இரவு நேர ட்ராஃபிக் லைட்டிங், அந்த பால்கணி வழியாக பார்க்க மிக அழகாக காட்சியளித்தது...
சூழலை சில நிமிடங்கள் ரசித்துவிட்டு, கண்மூடி நடந்து முடிந்த அத்தனையையும் நினைத்துப் பார்த்தான்...

கண்களை திறந்தான்.

தனது லேப்டாப்பில் கேணிவனம் கதையை தட்டச்ச ஆரம்பித்தான்.

[கேணிவனம் - பாகம் - 01

முன்னாள் இரவு சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அந்த மும்பை மெயில், மேற்கு கர்நாடகாவின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் பயணித்து கொண்டிருந்தது. மணி முற்பகல் 11 என்றால் யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மேகமூட்டத்துடன் அந்த காடு மாலைவேளை போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது.]

--------------------------------------------------------

அன்றிரவு... சந்தோஷ் தனது அறையில், அந்த சித்தரின் ஃபோட்டோவை ஸ்கரீன்ஷாட் எடுப்பதற்காக தாஸ் கொடுத்த மெமரி கார்டில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தான்.

இன்று உலகில் எத்தனையோ பேர், இயற்கை காட்சிகளை படம்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னதான் முயன்றாலும், இப்படி காலத்தில் பின்னோக்கி சென்று 1000 வருடத்திற்கு முந்தைய இயற்கை காட்சிகளை படம்பிடிக்க முடியுமா..? ஆனால், இதோ, இன்று அவன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் அப்படிப்பட்டவைதான். என்ன ஒரே வருத்தம், இதை காட்சிகளாக மட்டுமே பார்க்க முடிந்தது... நேரில் சென்று பார்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், அந்த வாய்ப்புதான் கிட்டாமல் போய்விட்டதே! என்ற ஆசையும் வருத்தமும் சந்தோஷூக்குள் எழுந்தது...

வேண்டாம் இப்படி ஆசைப்பட வேண்டாம். இது ஆசையல்ல பேராசை...

ஏற்கனவே பேராசையால் பைத்தியமான குணாவின் நினைவு  வந்தது... குணாவை எண்ணி சந்தோஷ் வருந்தவும் செய்தான். காலம் அவனை தேற்றும் என்று எண்ணிக் கொண்டான். இனி அந்த கேணிவனத்தை பற்றி ஆசைப்படக்கூடாது என்று முடிவெடுத்தான்.

இருப்பினும், இந்த வீடியோ கேணிவனம் இருப்பதற்கான வலுவான ஆதாரம். இவ்வளவு அரிய விஷயத்தை மிகவும் சர்வ சாதாரணமாக தன்னை நம்பி கையில் கொடுத்திருக்கும் தாஸ்-ஐ எண்ணி சந்தோஷ் வியந்து கொண்டிருந்தான்.

இதை கொண்டு போய் யாரிடமாவது நாம் கொடுத்தால் என்னவாகும்..? அவரவர்கள் எண்ணத்திற்கேற்ப இதை உபயோகித்து கொள்வார்கள்.

உதாரணத்திற்கு, இதை சக்கரவர்த்தியிடம் கொண்டு போய் கொடுத்தால், அவன் ப்ரொஃபஸர் கணேஷ்ராமையும் தன்னையும் கொன்றுவிட்டு தனியாளாக கேணிவனத்தை மீண்டும் தேட ஆரம்பித்திருப்பான்...

ப்ரொஃபஸர் கணேஷ்ராமிடமே கொடுத்தால், அவர் இதைவைத்து வரலாற்றில் தன் பெயரை இடம்பெறும்படி செய்து கொள்வார்... ஆனால் தனது முதுமையினால் தனியாளாக இதை தேட முடியாமல் மீண்டும் சக்கரவர்த்தியின் உதவியை நாடியிருப்பார்.

இன்ஸ்பெக்டர் வாசுவிடம் கொடுத்தால், அவர் இதுபோன்ற சூப்பர்நேச்சுரல் விஷயங்கள் உண்மையா என்று சோதனை செய்து பார்த்து தனது தர்க்க ரீதியான நம்பிக்கைகளை தெளிந்து கொண்டிருப்பார். ஆனால் அவரும் அதன்பிறகு என்னவாக வேண்டுமானாலும் மாறலாம்.

இப்படி எதுவும் செய்யாமல், இதையே திரும்ப கொண்டு போய் தாஸிடம் கொடுத்தால்... அவர்தான் அந்த சித்தரின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு இதை பத்திரப்படுத்தி வைப்பார்.

லிஷா சொன்னதுபோல் இது ஒரு டைம் ட்ரெஷர்... அதனால், தாஸ் எடுத்த முடிவுதான் சரியானது...

பொக்கிஷத்தின் தன்மை அதை செலவழிப்பதில் இல்லை...! பாதுகாத்து வைப்பதில்தான் இருக்கிறது.

சந்தோஷ் மனதிற்குள் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, அவன் கண்களிரண்டும் ஆச்சர்யத்தில் விரிந்து அந்த வீடியோ காட்சிகளை கண்டுகொண்டிருந்தது...

அந்த காட்சிகளிலிருந்து, அந்த சித்தரின் வெவ்வேறு கோணத்தில் இருக்கும் ஃபோட்டோக்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தெரிவு செய்துக் கொண்டிருந்தான்.

வீடியோவில்...

சித்தரின் பிரேதத்தை தாஸ் கோவில் கூரையிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் காட்சிகளை ஓட்டி ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தான். இருட்டில் ஷூட் செய்ய உதவும் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருந்த காட்சிகளவை. அதில் தாஸ் ஒரு கையில் ஹேண்டிகேமிராவுடன் மறுகையில் சித்தரின் பிரதேத்தை எடுத்துக் கொண்டு வெளியேற போராடிக் கொண்டிருக்க... சித்தரின் உடம்பிலிருந்த ஒரு ஓவியம் கேமிராவில் பதிவாகியிருந்தது... அது சந்தோஷின் கண்களை கவர்ந்தது...

அதை மட்டும் ஃப்ரீஸ் செய்து பார்த்தான்.

அது ஓவியமல்ல... ஒரு பாடல்... என்று தெரிந்தது... அதை படிக்க முயற்சி செய்தான். கொஞ்சம் சிரமமாக இருந்தது... அந்த ஃபோட்டோவை மட்டும் ஃபோடோஷாப்பில் ஏற்றி, அந்த பாடலை படிக்குமாறு ப்ராஸஸ் செய்தான். 

ஃபோட்டோஷாப் ஜாலத்தினால், அந்த பாடலை இப்போது தெளிவாக படிக்க முடிந்தது...

அந்த பாடல், தாஸூக்கு சொல்லப்பட்ட ஏதோ ஒரு ரகசிய தகவல் போல் இருந்தது... உடனே தனது செல்ஃபோனை எடுத்து தாஸூக்கு டயல் செய்தான்.
The Number you are trying is currently Switched Off... 

'ஸ்விட்ச்டு ஆஃப்' செய்யப்பட்டிருப்பதாக செய்தி ஒலித்தது...

தாஸின் செல்ஃபோனில்தான் பேட்டரி இல்லையே என்ற விஷயம் அப்போதுதான் ஞாபகம் வந்தது...

------------------------------------

அதே 'ஸ்விட்ச்டு ஆஃப்' என்ற இயந்திரக்கன்னியின் ஆபரேட்டர் குரல் கந்தன் கொள்ளை கிராமத்தில், தாஸின் தாத்தா வீட்டிலிருந்த லேண்ட்லைன் ஃபோன் மூலமாக சுசீலாம்மாவின் காதினில் கேட்டுக் கொண்டிருந்தது....

(தொடரும்...)


Signature

Monday, November 15, 2010

"கேணிவனம்" - பாகம் 28 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26          பாகம்-27

--------------------------------------------------------------------

பாகம் - 28

சடகோப சித்தர், தாஸின் முற்பிறவி இரகசியத்தை கூறியதும், தாஸினால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறினான். அவன் கையில் பிடித்திருந்த ஹேண்டிகேமிராவில் அவனது நடுக்கம் தெரிந்தது.

'ஏனப்பா இப்படி நடுங்குகிறாய்...?' என்று சித்தர் சிரித்தபடி கேட்டார்

'ந... நான்தான் நீங்க... சொன்ன..  ராஜாவா..?'

'ஆம், இன்றிலிருந்து 53 வருடத்திற்கு முன்புவரை நீதான் இராஜசேகரவர்மனாக வாழ்ந்து வந்தாய்.. நீதான் கேணிவனக்கோவில் கட்ட காரணமாயிருந்தவன். மனிதப் போர்களை நிறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்ட எனக்கு உதவியவன். எல்லாம் நீதான்.'

'53 வருஷத்துக்கு முன்னாடியா..! அப்போ, இப்போ அந்த ராஜா உயிரோட இல்லியா..?'

'ஆம்... இப்போது நீ 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருப்பது உனது 4ஆவது பிறவி' என்று கூற, தாஸ் மேலும் நடுங்கினான். நடுங்காமல் என்ன..? தனது பிறவி இரகசியத்தை ஒருவர் தெளிவாக கூறுவதை கேட்கும்போது, யாராயிருந்தாலும் நடுங்கத்தான் முடியும். தாஸூம் நடுங்கினான்.

'ந...நான்... 4ஆவது பிறவியா..? அ...அப்போ... இ..இன்னும் எத்தனை பிறவி நான் எடுப்பேன்..?'

'அது இரகசியம், நான் நடந்து முடிந்ததைத்தான் கூறினேன். நடக்கப்போவதை நடக்கும்போது தெரிந்து கொள்...' என்று சித்தர் மழுப்பினார்

'சாமி...! எனக்கொரு சந்தேகம்..?'

'என்ன..?'

'இப்போ 21ஆம் நூற்றாண்டுல இருக்கிற உங்களோட பிரேதம், உங்களோட எத்தனாவது பிறவியுடையது..?' என்று கேட்டான்

'நான் பிறவித்தொடரை அறுந்தவன். எனக்கு இனி பிறப்பில்லை..! நான் எனது பிறவிக்காலம் முடிந்ததும், சூட்சும நிலையில் சஞ்சரிப்பேன். ஆனால், எனது சிறியதொரு பிழையினால் நான் எனது பிறவிக்காலத்தை கடந்து பயணப்பட்டிருந்தபோது ஜீவசமாதியாகிவிட்டேன். அதனால்தான், உனது உதவியை நாடுகிறேன்' என்றார்

'புரியல சாமி..?'

'நான் இப்போது 21ஆம் நூற்றாண்டுக்கு பயணப்பட்டால், நான் பிரேதமாகிவிடுவேன். என்னால் சூட்சும நிலையில் சாந்தியடையாத ஆன்மாவகத்தான் அலையமுடியும். நீ எனது உடலை இந்த காலக்கட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டால், நான் முறையாக சூட்சும நிலையில் சுதந்திரமாய் சஞ்சரிக்க முடியும்...' என்றார்.

தாஸூக்கு பாதிதான் புரிந்தது என்பது அவனது முகத்தில் தெரிந்தது... 'உனக்கு புரியாவிட்டாலும், நீ எனக்கு இந்த உதவியை செய்யத்தான் வேண்டும். இதை உன்னைவிட்டால் யாராலும் சரிவர செய்ய முடியாது என நான் நம்புகிறேன்...' என்று கூறினார்.

தாஸ், மேலும் அவரை கேள்விகேட்டு நச்சரிக்க விரும்பாததால், அவன் மேற்கொண்டு செய்யவேண்டியதை மட்டும் கேட்டான்.

'சரி சாமி..! நான் எப்படி உங்க பிரேதத்தை இங்க கொண்டு வரணும்னு தெளிவா சொல்லுங்க... கண்டிப்பா உங்களுக்கு உதவுறேன்...' என்றான்.

உடனே சித்தர் எழுந்து சென்று, கோவில் மண்டபத்திலிருந்து இறங்கிவந்து, மண்தரையில், ஒரு சிறு குச்சியினால் ஒரு வரைபட சித்திரத்தை வரைந்து காட்டினார்.

'நான் உன்னை கிளம்பி வந்த காலத்துக்கே அனுப்புகிறேன். அங்கு சென்றதும், என் பிரேதத்தை கேணிவனக் கோவிலிலிருந்து கண்டெடு... பிறகு இதுதான் கேணியில் என் காலக்கட்டத்திற்கு பயணப்படும் காலக்கோள் ஆள்கூற்று.' என்று அந்த மணல் சித்திரத்தை சுட்டிக்காட்டினார்.

'நீ என் பிரேதத்தை மீட்டதும், கேணியில் இந்த வரைபடத்திலிருப்பது போன்ற நிலையில் ஆள்கூற்றை பொருத்தி, உள்ளே என் பிரேதத்தை போட்டுவிடு.... '  என்றார்

'சாமி... அப்புறம் நான் சொன்னது..?'

'புரிகிறது... உனது நண்பர்களை காப்பாற்றும்படி கேட்டதுதானே..?' என்று மீண்டும் அந்த வரைபடத்துக்கு அருகில் மற்றுமொரு சித்திரத்தை தீட்டினார்.

'இதுதான் நீ செல்ல வேண்டிய காலக்கட்டத்திற்கு உன்னை அழைத்து செல்லும் காலக்கோள் ஆள்கூற்று... என் பிரேதத்தை நீ அனுப்பிவித்ததும், கேணியில் மீண்டும், இந்த வரைபடத்தில் உள்ளதுபோல் பொருத்திக்கொண்டு நீ கேணியில் இறங்கிவிடு, உன் நண்பர்கள் உயிரோடிருந்த காலக்கட்டத்திற்கு இது உன்னை அழைத்து செல்லும்.' என்றார்

தாஸ் சற்றே குழப்பத்துடன், இரண்டு வரைபடங்களையும் பார்த்தான்.

'சாமி நீங்க வரைஞ்சியிருக்கிறதை நான் மறந்துட்டேன்னா என்ன பண்றது..?'  என்று ஒரு சின்ன இடைவெளிவிட்டு, 'நான் வேணுமின்னா என்னோட இந்த ஹேண்டி கேமிராவுல படம் பிடிச்சிக்குறேன்..' என்று கேட்டான்.

'இல்லை, நீ திரும்பி சென்று சேரும்போது, இது உன்னோடு இருக்கும் என்று நிச்சயமாய் சொல்லமுடியாது. ம்ம்ம்' என்று சித்தர் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்தார்... பிறகு அவனிடம், 'நீ இந்த வரைபடத்தை உன்னோடு கொண்டு செல்வது போல் ஒரு  ஏற்பாடு செய்கிறேன்.' என்று கூறிவிட்டு ஒரு அரைநிமிடம் கண்களை மூடியிருந்தார். தாஸ் அப்படியவர் கண்மூடியதைப் பார்த்து, அவர் ஏதோ வித்தை செய்யவிருக்கிறார் என்று எதிர்ப்பார்த்தான். அவர் சட்டென்று கண்களை திறந்து சிரித்தார். தாஸ் குழம்பினான், நாம் மனதிற்குள் நினைத்தது இவருக்கு தெரிந்திருக்குமோ..? என்று பயந்தான். ஆனால், அவர் சிரிப்பைத் தவிர வேறெதுவும் சொல்லாமல், மீண்டும் மண்டபத்திலேறி சப்பணமிட்டு அமர்ந்து கொண்டார். தாஸூம் தயக்கத்துடன் சென்று மீண்டும் அவருக்கருகில் அமர்ந்து கொண்டான்.

'என்ன சாமி..? ஏதோ ஏற்பாடு செய்யறேன்னு சொன்னீங்க..?'

'செய்கிறேன். சற்று பொறு...' என்றார்.

தாஸூக்கு இன்னும் கேணிவனத்தை பற்றி ஏதேதோ கேட்கவேண்டும் போலிருந்தது... ஆனால், என்ன கேட்பது ஏது கேட்பது என்ற கேள்விகளை அவனால் தொகுக்க முடியாமல் திணறினான். சுற்றி சுற்றி அந்த கோவிலையே மேலும் காட்சிப்பிடித்துக் கொண்டிருந்தான். சித்தர் இப்போது அவனது செயலை கூர்ந்து பார்த்தார். குறிப்பாக, அவன் கையிலிருக்கும் ஹேண்டிகேமிராவை வித்தியாசமாக பார்த்தார்.

'தாஸ், நீ கையில் வைத்திருக்கும் இக்கருவியின் பெயர் என்ன..?' என்றார்

தாஸ் பெருமையாய், 'இது ஹேண்டிகேமிரா... இது மூலமா, நாம பாக்குற காட்சிகளை பதிவு செஞ்சிக்கலாம். தேவையானப்போ போட்டு பாக்கலாம்..'

'நீ உன் மனதிலேயே காட்சிளை பதிவு செய்து கொள்ளலாமே..? தேவையானபோது, நீ பார்த்ததை நினைவுக்கூர்ந்து பார்க்கலாமே..?' என்றார்

'செய்யலாம்தான். ஆனா, இதுல பதிவு செஞ்ச காட்சியை நான் அடுத்தவங்களுக்கும் காட்டலாமே..!' என்று சித்தரை மடக்கிவிட்டதுபோல் கூறினான்.

'ஏன், நீ உன் மனக்காட்சிகளையும் அடுத்தவர்களுக்கும் காட்டலாமே..?' என்றார்.

'அது எப்படி சாமி முடியும்... நீங்க சித்தர் ஏதாவது சித்து வேல செஞ்சி உங்க மனசுல இருக்கிறதை அடுத்தவங்களுக்கு தெரிவிப்பீங்க..? ஆனா நான் சாதாரண மனுஷன்தானே..! என்னால் அது முடியாதே..?' என்றான்

'பேச முடியாதவொரு கைக்குழந்தை, தனக்கு பசிக்கிறது என்பதை தனது எண்ணத்தின் வாயிலாகத்தானே தாய்க்கு தெரிவிக்கிறது.. இது மனிதனின் இயல்பான ஆற்றல்தானே..!' என்று கூறினார்.

தாஸிடம் அவரது இந்த கருத்துக்கு மாற்றுக்கருத்து இல்லையென்பதால் தொடர்ந்து பேசாமலிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் ஒரு குரல் கேட்டது...

'கும்புடுறேன் சாமி..! கூப்புட்டிருந்தீங்க போலருக்கு..' என்று குரல் கேட்ட திக்கில் தாஸ் திரும்பி பார்க்க... அங்கே ஒரு குறவன் நின்றிருந்தான். காட்டான் உடம்பும், கரிய நிறமும், அந்த கரிய நிறத்தில் ஒரு பளபளப்பும் தெரிய, சிரித்த முகத்துடன் பார்க்க களையாய் இருந்தான். தாஸ் அவனை சிநேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவனும் சிரிப்பின் மூல்ம் சிநேகத்தை பகிர்ந்து கொண்டான்.

சித்தர் அந்த குறவனை தாஸூக்கு அறிமுகம் செய்துவைத்தார், 'தாஸ், இவன்தான் நள்ளி, என் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவன், கேணிவனம் பற்றிய ரகசியமறிந்தவன். எனக்கும் இந்த கோவிலுக்கும் காவலிருப்பவன். என் மனக்குரலை புரிந்து எனக்காக எந்நேரமும் உதவ உண்மையாக காத்திருப்பவன்.' என்று கூறினார். தாஸூக்கு அந்த குறவனின் மேல் மரியாதை கூடியது. சித்தர் அந்த குறவனிடம் திரும்பி...

'வா, நள்ளி..! உனக்காகத்தான் காத்திருந்தேன். ஒரு தோல்சித்திரம் தீட்ட வேண்டும்.' என்று சொன்னபடி மண்டபத்திலிருந்து சித்தர் இறங்கி நள்ளி என்ற அந்த குறவனை நெருங்கி சென்றார்.

'தீட்டிடுவோம்... ஆருக்கு..! இந்தாருக்கா..?' என்று தாஸை சுட்டிக்காட்டி கேட்டான்.

'ஆம்..?'

'கும்புடுறேன் சாமி..' என்று அவன் தாஸூக்கும் ஒரு கும்பிடு போட்டான். மீண்டும் சித்தரிடம் திரும்பி, 'சாமி, என்ன தீட்டனும்... பறையுங்க..! தீட்டிப்போடுறேன்..' என்று கேட்க. சித்தர், அவர் மண்தரையில் வரைந்திருந்த சித்திரங்களை சுட்டிக்காட்டினார்.

'எங்குட்டு தீட்டோனும் சாமி..' என்று அவன் கேட்க, சித்தர் தாஸை பார்த்து...

'தாஸ்... நீ உனது உள்ளங்காலை நள்ளியிடம் காட்டு.. அவன் அதில் தோல்சித்திரம் வரைவான்' என்றார். தாஸூக்கு புரிந்தது... இந்த நள்ளி, பச்சை குத்த வந்திருக்கிறான் என்று ஊகித்தான்.

'உள்ளங்கால் எதுக்கு..! கையிலேயே வரையட்டுமே..' என்று தாஸ் தயக்கத்துடன் கேட்டான்.

'இல்லை, இது இரகசியமாய் பாதுகாக்கப்படவேண்டிய சித்திரம். அது உனது உள்ளங்காலில் இருந்தால், அடுத்தவர் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதனால் இது உன் உள்ளங்காலில் இருத்தலே தகும்.' என்றார்.

தாஸ் மறுப்பேதும் கூறாமல், அந்த கோவில் மண்டபத்து படிகளில் அமர்ந்தபடி, தனது உள்ளங்காலை நள்ளிக்கு காட்ட ஆரம்பித்தான். நள்ளி தான் கொண்டு வந்திருந்த உடமைகளிலிருந்து கற்களால் செய்த ஊசி, சில பச்சிலை மைகள், மயிலிறகு என்று எடுத்து அடுக்கிக்கொண்டு, கோவிலுக்குள்ளிருந்து எரிந்து கொண்டிருக்கும் ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டு வந்து அவனும் படிகளிலமர்ந்தான்.

பச்சைக்குத்துதல், உலகில் மிகவும் பழமையானதொரு கலை. என்று தாஸ் அறிந்திருந்தான்.. அதை, ஒரு தேர்ந்த பழங்குடி நிபுணனிடமிருந்தே பெறுவது எண்ணி அவன் பெருமைப்பட்டான்.

ஆனால், நள்ளி பச்சை குத்த குத்த தாஸின் உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது..! ஜூரம் வருவது போல் உணர்ந்தான். அவன் முகக்களைப்பை சித்தர் கவனித்து, அவன் உடம்பை தொட்டுப்பார்த்தார்.

'அனலாய் கொதிக்கிறது. ஏற்கனவே களைப்பாயிருக்கும் உன் உடல், இந்த சித்திரம் தீட்டுதலை ஏற்க மறுக்கிறது என்று நினைக்கிறேன். நீ உனது நாசியில் சந்திரலோமத்தைக் கொண்டு சுவாசி..! உடம்பின் சூடு தணியும்.'

'என்ன சாமி..?' என்று அப்பாவியாய் தாஸ் கேட்டான்

'அதாவது உனது இடதுநாசியால் மட்டும் சுவாசி'

'அப்படி பண்ணா, சூடு இறங்கிடுமா..?'

'இது பிராணயாம்ப்பயிற்சி, சில விசேஷ பயிற்சியால், மலையுச்சியில் இருப்பதுபோல் உடம்பு குளிரடிக்குமளவிற்கும் சுவாசிக்கலாம். அதற்கெல்லாம் பயிற்சி தேவை..! இப்போதைக்கு நீ உனது இடதுநாசியில் சுவாசித்து கொண்டிரு, உன் உடம்பின் சூடு தணியும்...!' என்றார். தாஸ் அவ்வாறே செய்தான். ஜூரம் சற்று இறங்கியது...

'சாமி ஒரு சந்தேகம்..' என்றான்

'என்ன..?'

'நீங்க இந்த நள்ளியை எப்போ கூப்டீங்க... இவன் எப்படி நீங்க கூப்டதா சொல்லி வந்தான்.?' என்றான்

'மனதால் அவனை அழைத்தேன். அதை அவன் கேட்டு வந்திருப்பான்..' என்று சர்வசாதாரணமாய் கூறினார்.

'ஆமாஞ்சாமீ..! மலையில தேனெடுத்துட்டிருந்தேன்! சாமி கூப்டுச்சு..! உடனே ஓடியாந்தேன்..' என்று சிரித்தபடி சொன்னான்.

தாஸூக்கு ஆச்சர்யமாக இருந்தது... இவர்களுக்குள் இது எந்தமாதிரியான கம்யூனிகேஷன் என்று ஆச்சர்யப்பட்டுக்கொண்டான்.

பச்சை குத்தி முடித்துவிட்டு, நள்ளி எழுந்தான். சாமி ஆச்சுங்க..! வலி தெரியாம இருக்க மை தடவியிருக்கேன். சத்த நேரத்துல வலியெல்லாம் போயிடும் நீங்க எழுந்து நடக்கலாமுங்க.. நான் வாரேனுங்க...' என்று திரும்பி சித்தரைப் பார்த்தான்..

'சாமீ..! வேற ஏதாச்சுன்னா கூப்புடுங்க ஓடியாறேன்' என்று கூறி சிரித்தபடி விடைபெற்றுக் கொண்டு நள்ளி அங்கிருந்து ஓடினான்.

தாஸ் நன்றியுடன் சித்தரைப் பார்த்தான், 'இப்படி காலப்பயணம் செஞ்சிவந்து, உங்களை பாத்து பேசி, இதோ நள்ளி மாதிரி பழைய மனுஷங்களையும் பாக்குற சந்தர்ப்பமும் கிடைச்சதெல்லாம் நினைக்க ரொம்பவும் சந்தோஷமா நிறைவா இருக்கு சாமி..! இந்த புது அனுபவங்களுக்கு  உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல..!' என்றான்

சித்தர் சிரித்தார், 'இல்லையப்பா, நான்தான் உனக்கு நன்றி சொல்லவேண்டும்...' என்றார்

'நீங்க ஏன் சாமி எனக்கு நன்றி சொல்லனும்..?'

'நீ உனது ஒருபிறப்பில் மட்டுமல்ல, உனது ஒவ்வொரு பிறப்பிலும் எனக்கு பலவகையில் உதவி வருகிறாய்..' என்றார்

'அப்படியா..?'

'ஆம், அதிலென்ன உனக்கு சந்தேகம்..! அதுவும் கண்கூடாக பார்த்தபிறகு..' என்றார்.

'நானா... நான் எங்க கண்கூடாப் பாத்தேன்..' என்று தாஸ் குழப்பத்துடன் கேட்டான்

'இதோ, இந்த 2ஆம் பிறவியில் நள்ளி-ஆக எனக்கு உதவி புரிந்து வருகிறாய்...' என்றார். தாஸூக்கு தலைசுற்றியது... 'என்ன சாமி சொல்றீங்க..?' என்றான்

சித்தர் சிரித்தபடி இமை சிமிட்டினார். 'சாமி..! நா... நான்தான்.. நள்ளியா..?' என்றான்

'ஆம்..! நீ எடுத்திருக்கும் 2ஆவது பிறவி, குறவன் - நள்ளி..!' என்று கூறினார். தாஸ் நள்ளி ஓடிச்சென்ற திக்கை திரும்பி பார்த்தான். அவ(தன்)னை காணவில்லை...

'எப்படி சாமி, நானே என்னையே பாத்து தொட்டு பேச முடிஞ்சது..'

'நீ பார்த்தது உன் ஆன்ம பிரதி... வேறு பிறவி என்பதால் இது சாத்தியம், உன் பிறவியில் உன்னை நீயே பார்க்க இந்த காலத்துவாரத்தில் முடியாது.' என்றார்.

தாஸ் ஆச்சர்யமாக பார்த்திருந்தான்.

'சரி, நீ கிளம்பு, காலம் கடந்து கொண்டிருக்கிறது. போ.. போய்  காலத்தை துரத்திப்பிடி, நான் வரைந்த ஓவியங்களை நினைவில் கொள், உள்ளங்காளில் இருப்பதைப் போல் செயல்படுத்து.' என்று கூற, தாஸ் ஆச்சர்யத்தை விழுங்கிக்கொண்டு, தெம்பாய் எழுந்தான். கேணியை நோக்கி  நடந்தான். சித்தர் அவனை முந்திக்கொண்டு போய், கருவறையிலிருக்கும் மூடியில் சில ஆள்கூற்றுக்களை பொருத்தி மூடியை திறந்தார். தாஸ் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்து கேணிக்குள் இறங்கினான்.

மீண்டும் இருள்...

இருளும்... இருளைச் சார்ந்த இடுமுமாய் சில நிமிடங்கள் கழிந்தது...

மெல்ல கண்கள் ஒளியைக் கண்டது... மெல்ல மெல்ல கண்களுக்கு ஒரு ஓவியம் தெரிந்தது... அது பாதி அழுகிய நிலையில் ஆங்காங்கே செல்லரித்திருந்தது...

அதேதான்... கேணிவனக்கோவிலின் விட்டத்தில் இருந்த ஓவியம்தான்...

தாஸ் திடுக்கிட்டு எழுந்தான்.

சுற்றியும் பார்த்தான். பாழடைந்த கேணிவனக் கோவில். தோளில் அவனது ஹேண்டிகேமிரா...!

தன் அருகில் இன்ஸ்பெக்டர் வாசுவின் உடம்பிலிருந்து இரத்தம் சூடாக கசிந்து கொண்டிருந்தது... சந்தோஷ் இறந்து கிடந்தான். லிஷா மயங்கி கிடந்தாள். அருகில் சக்கரவர்த்தியும் இறந்து கிடந்தான்.

தாஸூக்கு புரிந்தது... தான் கிளம்பிய காலத்திற்கு திரும்பி வந்துவிட்டதை உணர்ந்தான். தன் உள்ளங்காலை பார்த்தான். அதில் பச்சைகுத்தப்பட்ட சித்திரம் இருந்தது...

நல்லவேளை அத்தனையும் கனவில்லை.! நிஜம்தான்! என்று ஊர்ஜிதம் செய்து கொண்டான். எழுந்து நின்று விட்டத்தில் தெரியும் ஓவியத்தை பார்த்தான்.

சிரமத்துடன் கோவில் கூரையின் மீது ஏறினான். ஒரு பெரிய கல்லைக் கொண்டு கூரையை இடித்தான். கூரையில் ஒரு பகுதி மெல்ல பிளந்தது... உள்ளே இறங்கினான். தனது ஹேண்டிகேமிராவின் இன்ஃப்ரா ரெட் வெளிச்சத்தை உபயோகித்து தேட, சித்தர் சொன்னதுபோல் உள்ளே இரகசிய அறையும், அதில் சித்தரின் உடம்பும் இருந்தது... மிகுந்த சிரமத்துடன் அவரது உடலை கீழிறக்கினான்.

அவரது உடலையும், கேணிவனக்கோவிலின் பாழடைந்த தோற்றத்தையும் சுற்றி சுற்றி ஹேண்டிகேமிராவில் பதிவு செய்து கொண்டான். கேமிராவில் "Battery Low" என்று எச்சரிக்கை வந்தது... சிறிது நேரத்தில் கேமிரா பாட்டெரி தீர்ந்து அணைந்து போனது. அதை கீழே வைத்துவிட்டான்.

தனது இடது உள்ளங்காலிலிருந்த சித்திரத்தைப் போல் கேணியின் மூடியை ப்ரீஸெட் செய்து, திருகி பின் திறந்தான். கேணி திறந்து கொண்டது...உள்ளே துவாரத்திற்குள் அந்த சித்தரின் உடலை இறக்கினான். அது புள்ளியாய் விழுந்து மறைந்தது...

இதற்குள் மிகவும் பலகீனமானான். உடம்பு சூடேறத் துவங்கியது... தள்ளாடி விழுந்தான். உடம்பில் ஜூரம் பயங்கரமாக வாட்டத் தொடங்கியது. மூட்டுகளில் பயங்கர வலி ஏற்பட்டது. துடித்தான். அடுத்து, தனது திட்டத்தின்படி தனது நண்பர்கள் சாவதற்கு முன்னிருந்த காலக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று உடம்பை சிரமத்துடன் செலுத்தினான்.

தனது வலது காலிலுள்ள சித்திரத்தின்படி கேணியின் மூடியை ப்ரிஸெட் செய்ய முயன்றான், ஆனால் உடல் பலவீனமாகிக் கொண்டே போனதால் அந்த கேணியின் மேலிருக்கும் கல்-ஐ நகர்த்துவது பிரமம்பிரயத்தனமாக இருந்தது.. இருந்தாலும் நீண்ட முயற்சிக்குப்பின் ஒருவழியாக சித்திரத்திலுள்ள ஆள்கூற்றுப்படி மூடியை பொருத்தினான். உள்ளே இறங்கலாம் என்று நினைத்து இறங்கப் போவன்த திடீரென்று பின்வாங்கினான்.

மீண்டும் மண்டபத்திற்கு வந்தான், ஹேண்டிகேமிராவை எடுத்தான். அதற்குள்ளிருக்கும் மெமரி கார்டு-ஐ எடுத்துக் கொண்டான்.  தனது பேக்-லிருந்து தனது மொபைலை எடுத்துக் கொண்டான். அதிலிருந்து பேட்டரி-யைக் கழற்றினான். அந்தவிடத்தில், இந்த மெமரி கார்டு-ஐ வைத்து செல்ஃபோனை சீல் செய்து கொண்டான். அதை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தள்ளாடியபடி சென்று கிணற்றுக்குள் இறங்கினான். கால்தடுமாறி உள்ளே விழுந்தான்.

மீண்டும் இருள்....

உடம்பு காற்றில் மிதந்து கொண்டிருக்க...

தாஸுக்கு, தனது உடம்பினுள் கேட்கும், இதயத்துடிப்பு துல்லியமாக கேட்டது...

க்ளுப் க்ளுப்...

க்ளுப் க்ளுப்...

க்ளுப் க்ளுப்... 


அது அவனை மேலும் பயமுறுத்தி பலவீனப்படுத்தியது...

அவன், இப்போது புல்தரையில் விரிப்பு விரித்து படுத்திருப்பதை போல் உணர்ந்தான். இருளில் கேட்கும் பூச்சிகளின் சத்தம், சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தது... மெல்ல கண்களை திறந்து பார்த்தான். காட்டுக்குள் டெண்ட்-டில் அவன் படுத்திருப்பது தெரிந்தது... அருகில் சந்தோஷூம், இன்ஸ்பெக்டர் வாசுவும், ப்ரொஃபஸர் கணேஷ்ராமும், சற்று தூரத்தில் லிஷாவும் அனைவரும் உயிருடன் அமைதியாக படுத்திருப்பது புரிந்தது... நிம்மதியானான்.... வெளியில் எட்டிப் பார்ப்பதற்காக மெல்ல கழுத்தை மட்டும் உயர்த்தினான். அங்கே சக்கரவர்த்தி திருட்டுத்தனமாய், இன்ஸ்பெக்டர் வாசுவின் பையிலிருந்து, துப்பாக்கியை வெளியே எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இதுவரை விட்டுவிட்டு வந்த ஜூரம், அவனை முழுவதுமாய் ஆட்கொண்டது. அதற்கு மேல் தெம்பில்லாமல் தாஸ் மயங்கி விழுந்தான்.

அடுத்த நாள் காலையிலிருந்து... பாகம் 24-ல் கூறியிருப்பதுபோல் நடந்தது...

(தொடரும்...)


Signature

Thursday, November 11, 2010

"கேணிவனம்" - பாகம் 27 - [தொடர்கதை]



இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
பாகம் - 11          பாகம் - 12         பாகம் - 13          பாகம் - 14         பாகம் - 15  
பாகம் - 16        பாகம் - 17          பாகம் - 18          பாகம் - 19          பாகம் -20
பாகம் - 21          பாகம் - 22        பாகம் - 23          பாகம்-24          பாகம்-25
பாகம் - 26

--------------------------------------------------------------------
பாகம் - 27

12ஆம் நூற்றாண்டில் நடந்தது...

தான் வந்தடைந்திருக்கும் வனப்பிரதேசம் வித்தியாசமாகவிருப்பதை கண்டு சுற்றிலும் தெரியும் வானவனாந்திரங்களை கண்ணிமைக்காமல் தாஸ் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக அமர்ந்திருப்பதைவிட பாதசாரியாய் நடந்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன் எழுந்து நடக்கலானான்.  காற்றில் சந்தனவாசம் கலந்து வந்தது. சுற்றிலும் சந்தன மரங்கள். தான் சந்தனக்காட்டில் நடந்து கொண்டிருப்பதையுணர்ந்தான். தோளில் அவன் மாட்டியிருந்த ஹேண்டிகேமிரா அப்படியே இருந்தது. அதைக் கண்டதும் அதை எடுத்து இயக்கினான். சந்தனக்காட்டை, காட்சிப்பதிவில் கடத்திக் கொண்டான்.

காலம் நடந்தவற்றை மறக்கடிக்கும் அரிய மருந்து... ஆனால், காலம் முந்தி வந்திருக்கும் தாஸூக்கு அம்மருந்து செயலாற்றவில்லை... தனது சிநேகிதன் சந்தோஷூம், காவலர் வாசுவும், உபாத்தியாயர் கணேஷ்ராமும் 21ஆம் நூற்றாண்டில் இறந்துபோனதை அவ்வப்போது நினைகூர்ந்து அதையெண்ணி வருந்தலானான்.

இருப்பினும், தான் வந்தடைந்திருக்கும் பகுதி முற்றிலும் மாறுபட்ட ஒரு விநோத லோகமாக அவனுக்கு புதுவானுபவத்தை கொடுத்துக்கொண்டிருந்தது...

சில காததூரம் நடையாய் நடந்து கடந்து வந்து கொண்டிருந்தான். சூரியன் இருக்கும் திசையை அவ்வப்போது ஊர்ஜிதப்படுத்தியபடி நடக்கலானான். நீண்டதூரம் நடந்துவிட்டபடியால் அவனது நாக்கு நீர் வேண்டி தவித்தது. தூரத்தில் ஓடை ஏதாவது புலப்படுகிறதா என்று தேடியபடியிருக்க,  அந்தரத்தில் கொக்கு இனங்கள் எதிர்ப்புறமாய் பறந்து வருவதை கண்டான். அப்படியென்றால் எதிர்புறமாய் எங்கோ நீர்பிரவாகம் இருப்பது திண்ணம் என்று எண்ணியபடி முன்னேறினான்.

அவன் கணிப்பு உண்மைதான், எதிரில் சற்றே தூரத்தில் அழகிய நீர்பிரவாகம் ஓடிக்கொண்டிருந்தது... நீரின்றி அமையாது உலகு... என்ற வள்ளுவன் வாக்கை சிலாகித்தபடி அவன் முன்னேறி, அப்பிரவாகத்தில் இறங்கி, குளித்து, களைப்பகற்றி நீருண்டு புத்துணர்ச்சி பெற்றவனாய் எழுந்துவந்தான். யாருக்கு கிடைக்கும் இப்படி தான் வாழுங்காலத்துக்கு 1000 வருடம் பழமையான நீரில் குளிக்கும் பிராப்தம்...

களைப்பகன்று மீண்டும் நடையைத் தொடரவெண்ணிய தாஸூக்கு பயங்கரமாக பசித்தது... புசிக்கவேதாங்கிலும் கிடைக்கிறதாவென்று அங்குமிங்கும் தேடியவனுக்கு தூரத்தில் ஒரு மான் தெரிந்தது...

சௌந்தர்யமான மான்..! இதற்குமுன்பு தனது காலக்கட்டத்தில் கிண்டி பிரதான சாலையில் ராஜ்பவன் கட்டிடத்திற்கருகில் மானொன்று ஓடிப்போனதை வேடிக்கையாய் ஊர்தியில் அமர்ந்தபடி பார்த்து சிலாகித்தது நினைவுக்கு வந்தது... மானை தூரத்திலிருந்தபடி ஹேண்டிகேமிராவில் காட்சிப்பதிவு செய்துக்கொண்டான். அதனிடத்தில் சென்று வாஞ்சையாக அதை தடவிக்கொடுக்க தோன்றவே. அதை சமீபித்தான். ஆனால், அந்த மான் அங்குமிங்கும் ஓடி அவன் கையில் சிக்க மறுத்தது, அதை எப்படியாவது பிடித்துவிடும் வாஞ்சையெழவே, தாஸ் அதை துரத்தி போகலானான். மான் அந்த வனாந்திரத்துக்கு பழக்கப்பட்டதெனவே அது சாமர்த்தியமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை தொடர்ந்து ஓடும் தாஸ், அந்த காட்டுபிரதேசத்தில் கண்மண் தெரியாமல் ஓடினான்.

ஒரு கட்டத்தில் தான் கட்டுக்கடங்காமல் ஓடிக்கொண்டிருப்பதையுணர்ந்து நிற்க எண்ணியபோது, திடீரென வோரிடத்தில் விழுந்து வழுக்கிக்கொண்டு போனான். அப்படியவன் போய்க்கொண்டிருக்கும் பகுதியானது தாழ்வான சரிவுப்பகுதியென்றறிந்து ஐயமுற்றான். தன் கட்டுப்பாட்டையிழந்து குழைந்திருந்த மண்தரையில் ஊன்றிப்பிடிக்க கைகளை அங்குமிங்கும் காற்றில் வீசிப்பார்த்தான். பலனில்லை, எந்தவொரு காட்டுச்செடியும் அவன் கைக்குள் சிக்கவில்லை... அப்போது காணவெண்ணாத ஒரு காட்சியை அவன் கண்கள் கண்டது... அது... அந்த தாழ்வுப்பகுதி முடியுமிடத்தில், ஒரு மாபெரும் பள்ளத்தாக்கு..!

ஐயோ...ஓஓஓஓ.... என்று அவன் பயத்தைக்கூட்டி அலற, உடம்பின் அத்தனை பகுதியும் சில்லிட... அந்த பள்ளத்தில் விழுந்தான்.
 
விழுந்ததும் உடனே தரை தட்டுப்பட்டது. அவன் நினைத்ததுபோல் அதுவொன்றும் பள்ளத்தாக்கல்ல, மிகச்சிறியதொரு சரிவுதான்.

அவன் விழுந்த இடம் ஒரு பூவனம். அவன் இதுவரை நுகர்ந்திராத அரிய நறுமணங்களை கொடுக்கும் மலர்களை கொண்ட பூவனம். இதை பள்ளம் என்று அலறியதையெண்ணி வெட்கினான்.

அந்த பூவனத்தை காட்சிப்பதிவு செய்துக் கொண்டிருந்தான், அப்போது தூரத்தில் ஏதோ ஒரு கோவில் இருப்பது தெரிந்தது. அதை நெருங்கலானான். அந்த கோவில், பூவனத்திற்கு மையத்தில் அமைந்திருந்தது தெரிந்தது.

ஆம்... அவன் எண்ணியது சரிதான். அது... கேணிவனக் கோவில்தான். உள்ளே தீபம் எரிந்து கொண்டிருந்தது.

அந்த கோவிலின் அமைதியான சூழலும், அதற்கு காட்டுக்குயில்களின் பின்னனி இசையும் இது சொர்கலோகமோ என்று எண்ணவைத்தது.

21ஆம் நூற்றாண்டில் இதே கோவிலை பாழடைந்த நிலையில் கண்டதை ஒப்பிட்டு பார்த்தான். தான் இதற்கு முன்(?) 21ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலில் தங்கியபோது மேலே கூரைமீது வரைந்திருந்த ஓவியம் இருக்கிறதாவென்று பார்த்தான். அதே ஓவியம், மிகவும் புதிதாக இருந்தது. அந்த ஓவியத்தை தெளிவாக கேமிராவில் பதிவு செய்து கொண்டான். அந்த ஓவியத்தில் அழிந்திருந்த பகுதி இப்போது புதிதாயிருந்ததால், அதில் இருந்த சித்தரின் முகத்தை பார்த்தான். அவர் முகம் மிகவும் சாந்தமாயிருந்தது.

உள்ளே கோவிலுக்குள் பிரம்மதேவனின் கருவறைச்சிலை தேஜஸாகவிருந்தது. தூபதீபங்கள் ஏற்றப்பட்டு மிகவும் பக்திபரவசமாகவிருந்தது.

தனது ஹேண்டிகேமிராவில் கோவிலை சுற்றி சுற்றி முழுவதுமாக பதிவு செய்துக் கொண்டான்.

கோவிலுக்குள் தீபம் எரிகிறதென்றால், யாரோ இக்கோவிலை பூஜித்து போயிருக்கிறார்கள். அவர்கள் கண்டிப்பாக மீண்டும் இங்கே வரக்கூடும். கொஞ்சம் இங்கே காத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் அந்த கோவில் மண்டபத்தில் அமர்ந்தான்.

மெல்ல தூணில் சாய்ந்தான், அந்த தூபதீபங்களின் நறுமணமும், பூவனத்திலிருந்து வரும் பூக்களின் வாசமும் சேர்ந்து விரைவில் உறங்கிப்போனான்.

.
.
.

மெல்ல தூக்கம் கலைந்தது. ஆனால் கண்விழிக்க மனம் வரவில்லை...! உடம்பு வலியாய் வலித்தது. அவன் மேற்கொண்டது என்ன சாதாரண பிரயாணமா? கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பிரயாணமல்லவா..!

யாரோ தன் தலையை அன்பாக வருடிக்கொடுப்பது தெரிந்தது. அந்த வருடலுக்குப்பின் அவன் புத்துணர்ச்சியாய் உணர்ந்தான்.

யாரது என்று கண்விழித்துப் பார்க்க, தான் ஒரு வயதான தாத்தாவின் மடியில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தான்.

அய்யோ..! என்று பதறியெழுந்தான்.

அந்த வயோதிகர், ஓவியத்தில் இருக்கும் சித்தர்-ன் உருவத்தோடு ஒத்திருந்தார். அவரேதான்..! நேரில் பார்க்க இன்னும் சாந்தமாய் தெரிந்தார்..! முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஒரு சின்னஞ்சிறிய துண்டு மட்டுமே உடுத்தியிருந்தார்.. நெற்றியில் விபூதிக்கீற்றும், நடுவே சந்தனமும் குங்குமும் அச்சுபிசகாமல் வரைந்ததுபோலிருந்தது.

தாஸ் பதறியதைக் கண்டு சித்தர் அவனை ஆச்சர்யமாக பார்த்தார்.

'ஏன் தாஸ், இப்படி பதறுகிறாய்..?' என்று சிரித்தார்

'என் பேரு உங்களுக்கெப்படி..?'

'தெரியும்..! சொல்... ஏன் இப்படி பதற்றம்..?' என்றார்.'

'முன்னபின்ன தெரியாத, உங்க மடியில படுத்துட்டேன். மன்னிச்சிக்குங்க..' என்றான்

'குழந்தைபோல் உறங்கிக்கொண்டிருந்த உன்னை, நான்தான், என் மடியில் கிடத்திக்கொண்டேன். யாராயிருந்தால் என்ன, அன்பிருந்தால் யாரும் அன்னையாகலாமில்லையா..? அன்னையாகிவிட்டால், மடியிலென்ன, மனதிலுமிடம் கிடைக்கும்' என்று கூறினார்.

அவர் பேசும் தமிழும், அதிலிருக்கும் கருத்தும் மிகப்பழமையாக அவனுக்கு தோன்றியது.

'இது கேணிவனக்கோவில்தானே..?' என்று சந்தேகத்துடன் தாஸ் கேட்டான்.

'ஹ்ம்ம்...! தெரிந்தே கேட்கும் கேள்வி..?' என்று அவர் மெலிதாக சிரித்துக் கொண்டார்.

'நீங்கதான் பிரம்மசித்தரா..?' என்றான்

'சித்தனா..! அது மிகப்பெரிய நிலை, நான் சித்தனல்ல... சித்து பயில்பவன். அவ்வளவுதான்.'

'அப்படின்னா, இந்த கேணிவனத்தை செஞ்சது நீங்கதானா..?' என்று கேட்க, அந்த பெரியவர் அவனை ஒரு குழந்தையைப் பார்ப்பது போல் பார்த்தார்.

'ஐயா..! நான் இங்க ரொம்பவும் கஷ்டப்பட்டு வந்திருக்கேன். நீங்க சில உண்மைகளை மறைக்காம சொல்லணும்..?'

'சில உண்மைகளென்ன, நான் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசியறியாதவன்.' என்றார்.

உடனே, தாஸ், தன்னுடன் கொண்டுவந்திருந்த ஹேண்டிகேமிராவை எடுத்து இயக்கினான். சித்தர் அந்த கேமிராவை வித்தியாசமாக பார்த்தார். தாஸ் அவரிடம் பேட்டிக்காண தயாரானான்.

'ஐயா உங்க பேரென்ன..?'

'சடகோபன்...'

'இ..இந்த கேணிவனத்தை உருவாக்கினது நீங்கதானா..?'

'வனத்தை நான் உருவாக்கவில்லை..! கேணியை மட்டும்தான் உருவாக்கினேன். காலப்போக்கில் மக்கள் கேணிவனம் என்று தம் வசதிக்கு சேர்த்துப் பேசிகொண்டார்கள்...'

'சரி, கேணியை ஏன் உருவாக்குனீங்க..?'

'உலகில் அமைதியை நிலைநாட்டும் ஒரு சிறு கருவியாக இதை உருவாக்கியுள்ளேன்.'

'இதை எப்படி செஞ்சீங்க..?'

'சொன்னால் சத்தியமாக உனக்கு புரியாதப்பா..?'

'பரவாயில்லை சொல்லுங்களேன்..?'

'இடமில்லாத பாத்திரத்தில் நீரிரைப்பது வீண்...' என்றார்.

'சரி, இந்த கேணியை எப்போ உருவாக்கினீங்க..?' என்றான்.

'சில வருடங்களுக்கு முன்பு உருவாக்கினேன்..' என்றார்.

'ஐயா, கொஞ்சம் விளக்கமா இது உருவான கதையை சொல்லுங்களேன்..?' என்று ஆர்வமாய் கேட்டான்.

அந்த சித்தர் மெல்ல கூற ஆரம்பித்தார்...

'ஒருமுறை இதே தென்மண்டலத்தில் வீரமார்த்தாண்டன், ராஜசேகரவர்மன் என்ற இரண்டு சிற்றரசர்களிடையே கடும்போர் எழுந்தது. அதில் ராஜசேகரவர்மன் தோற்றுப் போனான். அவன் படையையும், உடைமைகளையும், இழந்து தவித்தான். அவன் இதே காட்டில் தலைமறைவாய், என் ஆசிரமத்தில் அடைக்கலமாய் தங்க நான் அனுமதித்தேன். தன் நாடும் பதவியும் போனதைக் காட்டிலும், 4000 மனித உயிர்கள் அப்போரில் மாண்டு போனதை எண்ணி அந்த மாமன்னன் வருந்தலானான்.' என்று தொடர்ந்தார்.

'நான் அப்போது மெஞ்ஞான சித்திகளை பயின்று கொண்டிருந்த காலம்,. மானுடத்திற்கு பயனளிக்கக்கூடிய மெஞ்ஞான படைப்புகளை படைக்கும் ஆவல் எண்ணிலிருந்தது. அந்த மாமன்னன், எனக்கு சீடனாய் இருந்து பணிவிடை செய்து கொண்டிருந்தான். அவன் நினைவில் கர்வமில்லை, எண்ணத்தில் எள்ளளவும் களங்கமில்லை..! எனக்கு மிகவும் உண்மையான சீடனாகவே மாறியிருந்தான்.' என்று கூற அவர் கூறுவதனைத்தும், கேமிராவில் பதிவாகிக் கொண்டிருந்தது...

'அவனுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். ஒருமுறை, என்னிடம், அந்த மாமன்னன், நடந்துமுடிந்த இப்போரை நிறுத்தமுடியுமா..? ஐயா என்று குழந்தையாய் கேட்டான். அப்போதுதான் எனக்கு காலத்துவாரத்தை பற்றிய நினைவு வந்தது.'

'காலத்துவாரம்-னா..?'

'காலத்துவாரமென்பது, என் அய்யன் பிரம்மாவின் கண்கள் ஆகும். இந்த கண்கள் பூமியிலிருப்பதை கண்டுபிடிப்பது சாதாரண விஷயமல்ல..! அதை கண்டுபிடித்து துவாரமமைத்தால், காலப்பயணம் மேற்கொள்ளலாம். அப்படி காலப்பயணம் மேற்கொண்டு போரை நிறுத்துவது சாத்தியமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே செயலில் இறங்கினேன். முதல் காலத்துவாரத்தின் ஓட்டம் இந்த காட்டிலிருப்பதை அரும்பாடுபட்டு கண்டுபிடித்து, இங்கு வந்து அதை உயிர்ப்பித்தேன். பிறகு, கேணியும் கோவிலும் அமைத்தேன்.' என்று கூறிமுடித்தார்.

'அதுக்கப்புறம் அந்த போர்-ஐ நிறுத்துனீங்களா..?' என்று ஆர்வமாக தாஸ் கேட்டான்.

'ராஜசேகர வர்மனை போர் நடப்பதற்கு முந்தைய காலகட்டத்திற்கு இந்த கேணிவனம் மூலம் அழைத்து சென்றேன். போர் நடப்பதற்கான காரணத்தை முன்கூட்டியே அறிந்திருந்ததால் அதை தடுத்து நிறுத்தும் சாதுர்யத்தை அந்த மாமன்னன் பெற்றிருந்ததால் போர் நிறுத்தப்பட்டது. நாட்டில் அமைதி நிலவியது. 4000 உயிர்கள் தப்பியது. இதுவரை 3 பெரும்போர்களை நிறுத்தியுள்ளேன். இனியும் நிறுத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.' என்று கூறிமுடிக்க, இதை தாஸ் ஆச்சர்யமாக கேட்டபடி, தனது ஹேண்டிகேமிராவில் பதிவு செய்துக்கொண்டிருந்தான்.

'ஐயா..? எங்க தாத்தா அடிக்கடி ஒண்ணு சொல்லுவாரு... நீங்கதான் ஏதோ காரணத்துக்காக என்னை உங்ககிட்ட வரவச்சீங்கன்னு சொல்லுவாரு. அது உண்மையா..?' என்று கேட்டான்.
 
சித்தர் ஒரு மர்மச்சிரிப்பு சிரித்தபடி 'உன் தாத்தாவா..? ஹாஹ்ஹா... நீ சொன்னது உண்மைதான்' என்றார்.

'எதுக்கு வரவச்சீங்க..?'

'எனக்கு சொந்தமான ஒரு பொருள், உனது நூற்றாண்டில் உள்ளது. அதை கொண்டு வந்து என் நூற்றாண்டில் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும்'

'என்ன பொருள்..?'

'என் பிரேதம்..!' என்று அவர் கூறியதும் தாஸ் திடுக்கிட்டான்.

'ஐயா..?'

'ஆம், நான் தொண்டைமண்டலத்தில், எனது அய்யன் பிரம்மாவின் கோவிலில் சில காலம் உபாசனையில் இருந்தேன். அங்கே ஒரு சமயத்தில், என்னையே மெய்மறந்து ஜீவசமாதியாகிவிட்டேன். ஆன்மாவிற்கு, இடம் பொருள் பாதகமில்லை..! ஆனால், உடல்..? அதை உறிய இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும். அந்த உடல் 12ஆம் நூற்றாண்டிற்கு சொந்தமானது. அதை 21ஆம் நூற்றாண்டில் விட்டுவைத்தல் நியாயமன்று..! இதை செய்துமுடிக்க, எனக்கு உன் உதவி தேவை...' என்று கூற, தாஸிற்கு விஷயம் புரிந்தது...

அவர் தொடர்ந்தார்...

'இந்த கேணிவனம் ஒருவரை எந்தவொரு காலக்கட்டத்திற்கும் அழைத்து செல்லும் ஒரு அரிய காலயந்திரம்தான். அதற்காக, இயற்கைவிதியை நாம் மீறுதல் கூடாது. ஒரு காலகட்டத்திற்கு உறிய ஒரு பொருளை இன்னொரு காலக்கட்டத்தில் நிரந்தரமாக விட்டுவைத்தல் நல்லதல்ல... அந்த பொருளை அதற்குறிய காலத்தில் கொண்டு சேர்ப்பித்தலே தகும்...' என்றார்.

'ஐயா, 21ஆம் நூற்றாண்டுல உங்க உடம்பு எங்கேயிருக்கு..?' என்று தாஸ் கேட்டான்.

'இதே கேணிவனக்கோவிலில் இருக்கிறது...'

'கோபுரத்துமேலயா..?'

'இல்லை... இதோ இந்த ஓவியத்துக்கு பின்னால், கூரையின்மீது ஒரு ரகசிய அறையுள்ளது' என்று அவர்கள் அமர்ந்திருக்கும் மண்டபத்தின் மேலிருக்கும் ஓவியத்தை சுட்டிக்காட்டினார்.

'இதற்குள் எனது பூதவுடல் இருக்கிறது. அதை எடுத்து, இந்த கேணியில், நான் சொல்லும் காலத்திற்கு வந்து சேரும்படி போட்டுவிடு... இந்த உதவியை நீ எனக்கு செய்வாயா..?' என்று கூற, தாஸ் மிகவும் யோசித்தான்.

தாஸ் தயக்கத்துடன், 'ஐயா..? கண்டிப்பா செய்றேன்..! ஆனா, எனக்கு பதிலுக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்..' என்றான்.

அவர் சிரித்தபடி, 'ஹ்ம்ம்..! 21ஆம் நூற்றாண்டுக்காரனல்லவா..? பரவாய்யில்லை..! இதை நீ செய்துமுடிக்க நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் சொல்..?' என்று கேட்டார்.

'என் நண்பர்கள் சில பேர் இந்த கேணிவனக் கோவிலை கண்டுபிடிக்க வரும்போது இறந்துட்டாங்க... அவங்களை எப்படியாவது மறுபடியும் நான் சாகவிடாம காப்பாத்தனும், அதுக்கு..! நீங்க எனக்கு உதவி செய்யணும்' என்று கேட்டான்.

சித்தர் மறுத்தார்.

'இல்லை..! இது தவறு... அவர்கள் பகைமையில் சண்டையிட்டு இறந்தவர்கள். அவர்களை காப்பாற்றுவதும் இயற்கைக்கு புறம்பானது..' என்று சற்றே கோபப்பட்டார்.

'உயிரை காப்பாதனும், அமைதிய நிலைநாட்டனும்னுதானே கேணிவனத்தை படைச்சியிருக்கிறதா சொன்னீங்க..'

'ஆம்..?'

'நானும் எனது நண்பர்களும், இந்த கேணிவனக் கோவிலுக்கு வரும்போதுதான், பேராசை, பொறாமை சண்டை இதெல்லாம் வந்தது. அதுலதான் அவங்க இறந்தும் போனாங்க... இந்த கேணிவனம்-ங்கிற கோவிலே இருந்தில்லன்னா, நாங்கள்லாம் வந்திருக்கவே மாட்டோம், அவங்களும் சண்டை போட்டு இறந்திருக்கவே மாட்டாங்களே..! இதுவும் ஒரு போர்-தானே. இந்த போரை நிறுத்தி அவங்களுக்கு உயிர் கொடுக்கிறது ஒண்ணும் தப்பில்லியே ஐயா..?' என்று கூற, அவர் யோசிக்க ஆரம்பித்தார். ஒரு நீண்ட சிந்தனைக்கு பிறகு

'ஆம்..! இது என் தவறுதான். அவர்கள் உயிரிழப்பை கண்டிப்பாக ஈடுகட்ட வேண்டும்..' என்று கூறி தாஸை சற்று நேரம் உற்று நோக்கியபடி

'உன் குழுவில் சண்டைக்கு காரணமான பகைவனைச் சொல், அவனை தவிர மற்ற அனைவரையும் நான் உயிருடன் எழுப்பும்படி திட்டம் சொல்கிறேன்.' என்றார்

'இல்ல ஐயா..! வேண்டாம், இறந்தவங்க எல்லாருக்கும் உயிர் கொடுங்க... அதுல எதுக்கு இந்த வஞ்சகம்..' என்று கூற, அந்த சித்தர் சிரித்தார்.

'நீ கொஞ்சமும் மாறவில்லை... அப்படியே இருக்கிறாய்..' என்று சிரிக்க, தாஸூக்கு ஒன்றும் புரியவில்லை..!

'உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியுமா..?' என்று கேட்க...

'முன்பே என்றால், மிகவும் முன்பிலிருந்தே தெரியும்...'

'எப்போத்திலருந்து..?'

'உனது போன ஜென்மத்திலிருந்து..' என்று கூறியதும், தாஸ் திடுக்குற்றான்.

'என்னை போன ஜென்மத்திலருந்தே தெரியுமா..? நான் யாரு..?'

'உனக்காகத்தானே நான் இந்த கேணிவனத்தை உருவாக்கிக் கொடுத்தேன்...' என்றதும் தாஸ் குழம்பினான்.

'அப்படின்னா..?'

'ஆம், நீதான் மாமன்னன் ராஜசேகரவர்மன்...' என்று அந்த சித்தர் கூறிய உண்மையை கேட்ட தாஸ் உடம்பில், (அந்த நூற்றாண்டில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத) மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.

(தொடரும்...)


Signature

Popular Posts