Monday, September 27, 2010

"கேணிவனம்" - பாகம் 17 - [தொடர்கதை]பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05

--------------------------------------------------------------------
பாகம் - 17

காலை 7.30 மணி...

தாஸூம் சந்தோஷூம் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர்...

இன்ஸ்பெக்டர் வாசு, சந்தோஷின் தொலைபேசி அழைப்பினால் ஸ்டேஷனுக்கு அந்த காலை வேளையில் துரிதமாக வந்திருந்தார். நடந்த நிகழ்வுகளை விசாரித்து, லிஷா முன்னாள் இரவு ஓட்டிக் கொண்டு போன தாஸின் கார் நம்பரை வெவ்வேறு ஸ்டேஷனுக்கு தெரிவித்து, தேடிப்பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

சந்தோஷ், ஒரு சிலையைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்...

இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போலீஸ் ஸ்டேஷனில், விரக்தியாய் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது அவனை காப்பாற்ற லிஷா வந்தாள். ஆனால், இப்போது அவளும் இல்லை... அதனால், மிகவும் பலவீனமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். இன்ஸ்பெக்டர் அவன் நிலையை புரிந்துக் கொண்டவராய் அவனுக்கு ஆறுதல் கூறினார்...

'சந்தோஷ், ஏன்யா இப்படி டல்-ஆ உக்காந்துட்டிருக்க... மனசை தளரவிடாத... எது நடந்தாலும் தாங்கிக்கிற மனப்பக்குவம் வேணும்...' என்று சுலபமாக கூறிவிட, அவர் கருத்தை ஏற்றுக்கொள்ள எள்ளவும் முயலாமல் அமர்ந்திருந்தான்.

தாஸ், சந்தோஷின் சார்பாக, குணாமீது சந்தேகப்படுவதாக கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். எழுதி முடித்ததும், சந்தோஷிடம் கம்ப்ளைண்ட்டில் கையெழுத்து வாங்கப்பட்டு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது...

கம்ப்ளைண்டை படித்துப் பார்த்த இன்ஸ்பெக்டர், தாஸை ஏறிட்டுப் பார்த்தார்...

'மிஸ்டர் தசரதன்..?'

'ப்ளீஸ் கால் மீ தாஸ்..'

'தாஸ்..? நீங்க சந்தோஷூக்கும் லிஷாவுக்கும் என்ன வேணும்..?' என்று கேட்க...

'வெல்விஷர்... ஃப்ரெண்ட்... அதுக்கடுத்தபடியா இவங்களுக்கு பாஸ்...' என்று மூன்றே வார்த்தைகளில் அவர்களுக்குள்ளான உறவுமுறையை பற்றி தாஸ் இன்ஸ்பெக்டருக்கு உணர்த்தினான்.

'உங்க ப்ரொஃபஷன் என்ன..?'

'நான் ஒரு ரைட்டர்... ஹிஸ்ட்ரி பேஸ் பண்ணி ஃபிக்ஷனல் நாவல்ஸ் எழுதிட்டிருக்கேன்..'

'இந்த கேஸுல... உங்க ப்ரொஃபஷன் சைடுல பகைமை வர ஏதாவது காரணமிருக்கா..?'

'தெரியல சார்... லிஷாவும் சந்தோஷும் என்னோட அஸிஸ்டெண்ட்ஸ்... எனக்கு என் கதைக்கு தேவையான வரலாற்று தகவல்களையும், வேற  தகவல்களையும் திரட்டி கொடுப்பாங்க... அவ்வளவுதான்...' என்று தாஸ் விளக்கி கூறினான்.

'ஓகே...' என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் திரும்பி சந்தோஷை பார்த்தார்... அவன் இன்னமும் எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.

'சந்தோஷ்... பயப்படாத... என்ன ஆச்சுன்னு கண்டுபிடிச்சுடலாம்... இப்பவே குணா வீட்டுக்கு போய் அவனை மிரட்டி விசாரிக்கிறேன்' என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் எழுந்து ஜீப்புக்கு சென்றார்...

'சார்.. நீங்க தப்பா எடுத்துக்கலன்னா... நாங்களும் கூட வரலாமா..?' என்று தயக்கத்துடன் தாஸ் கேட்க... அவர் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சரி என்று தலையசைக்க, சந்தோஷூம் தாஸும் தனது இன்னோவாவில், போலீஸ் ஜீப்பை தொடர்ந்தபடி சென்றனர்.

--------------------------

ஜீப்,  குணா வீட்டை நெருங்கி நிற்க... இன்ஸ்பெக்டர் ஆர்வமாக இறங்கி வீட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்...

உள்ளே...

வீடு பூட்டியிருந்தது... குணாவின் ஃபோன் நம்பருக்கு ஃபோன் செய்தார்... அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது...

'சந்தேகமேயில்ல... இந்தப்பயதான் ஏதோ விளையாட்டு காட்டுறான்...' என்று இன்ஸ்பெக்டர் கூற, தாஸூக்கு ஒருவழியாக ஆறுதலாக இருந்தது...

ஏனென்றால், லிஷா ஒருவேளை ஏதாவது விபத்தில் சிக்கி இறந்திருப்பாளோ என்ற பயம் உள்ளூர தாஸூக்கு இருந்து வந்தது... மேலும், அதிகாலையில் அவளிடமிருந்து வந்த ஃபோன்காலை வைத்து அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். அவனுக்கு லிஷாவைவிட, சந்தோஷின் நிலையை நினைத்துதான் பதற்றமாய் இருந்தது...

'டோண்ட் வர்ரி, எங்கே போயிடப்போறான். எப்படியும் ட்ரேஸ் பண்ணிடலாம்... நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க... குணாவைப் பத்தி தெரிஞ்சதும் நான் உங்களுக்கு இமீடியட்டா ஃபோன் பண்றேன்...' என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தார்.

இருவரும் மீண்டும் தாஸின் இன்னோவாவில் ஏறி திருவான்மியூர் ஆஃபீசுக்கு திரும்பி கொண்டிருந்தனர்...

சந்தோஷ் மெல்ல பேச ஆரம்பித்தான்...

'பாஸ், லிஷா உயிரோட இருப்பாளான்னு பயமாயிருக்கு..' என்று நடுக்கத்தடன் சொன்னான்.

'நீ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா..? அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்காது.'

'ஒரு வேளை அந்த குணா, அவளை கொலை பண்ணியிருந்தா என்ன பண்றது..?'

'குணாவைப் பத்தி நீ தப்பா புரிஞ்சிட்டிருக்கே... அவன் அந்தளவுக்கு தைரியசாலி இல்ல... யாருக்கும் தெரியாம எவ்வளவு பெரிய தப்பு வேணும்னாலும் செய்வான். ஆனா, தன் மேல சந்தேகம் வந்து மாட்டிக்குவோம்னு தெரிஞ்சா... ஓடி போய் ஒளிஞ்சுக்குவான்... இப்போக்கூட அப்படித்தான் ஒளிஞ்சியிருக்கானோன்னு தோணுது..'

'அப்போ லிஷா, அவன்கிட்ட இல்லேங்குறீங்களா..?'

'தெரியல... ஆனா, சான்ஸஸ் கம்மின்னு சொல்றேன்...'

'அப்போ, லிஷா வேற எங்கேயிருப்பா..?'

சற்று நேரம் மௌனமாய் இருந்துவிட்டு தொடர்ந்தான்... 'சாரி சந்தோஷ்... என்னால எதுவும் கெஸ் பண்ண முடியல...' என்று கூறியபடி காரை மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

லிஷா எங்கே...? லிஷா எங்கே...? என்று அவனுக்குள்ளும் அந்த கேள்வி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது...

---------------------------

சில மணி நேரங்களுக்கு பிறகு...

போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஃபோனில் பேசி கொண்டிருந்தார்...

'வாட்... அப்படியா..?'

'. . . . . '

'நல்லா செக் பண்ணி பாத்தீங்களா..?

'. . . . .. '

'இன்பர்மேஷன் கரெக்டதானா..?'

'. . . . . .'

'ஷிட்...!' என்று சற்றே தளர்ந்தவர்... 'ஓகே... நான் மறுபடியும் லைன்ல வர்றேன்..' என்று ஃபோனை துண்டித்தார்...

அருகிலிருக்கும் கான்ஸ்டபிள் ஆர்வம் தாங்காமல்... அவரிடம் வந்து... 'என்ன சார்... என்னாச்சு... அந்த லிஷா பொண்ணுக்கு உயிருக்கு ஏதாச்சும் ஆபத்தா..' என்று தன்னுடைய கணிப்பில், இன்ஸ்பெக்டர் ஃபோனில் பேசியதை வைத்து தோராயமாக கேட்டார்... இன்ஸ்பெக்டர் அவரை சற்றே முறைப்பது போல் பார்த்தார்... பிறகு

'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அந்த குணா ஊர்லியே இல்லியாம்... மிஸ்ட்ரி டிவி சேனல் ஆளுங்களோட ஏதோ ப்ரோக்ராம் ஷூட் பண்ண போயிருக்கானாம்...' என்று கூற

'என்னது ஷூட்டிங்-க்கு போயிருக்கானா..? எதுக்காம்..' என்று மீண்டும் கான்ஸ்டபிள் ஆர்வமாய் கேட்க...

'அதெல்லாம் எதுக்கு நமக்கு... அவன் லிஷாவை கடத்தலை... அப்போ லிஷா எங்கே..? இப்போ, அதுதான் நம்ம பிரச்சினை..' என்று இன்ஸ்பெக்டர் சற்றே கோபப்பட்டார்...

'சார்.. ஒருவேளை இப்படி சொல்ல சொல்லி குணாவோட பொய் ஏற்பாடா இருந்தா..?'

'சேனல்காரங்க பொய் சொல்லமாட்டாங்க... அங்க வெரிஃபை பண்ணிட்டுதான் நமக்கு இன்ஃபார்ம் பண்றாங்க...'

'அப்போ, லிஷா எங்கே சார்.?'

'அதான் தெரியல... நீங்க எதுக்கும் தாஸையும் சந்தோஷையும் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க...' என்று கூறிவிட்டு, ஸ்டேஷனுக்கு வெளியே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார்... அடுத்தடுத்ததாக இரண்டு சிகரெட்டுகள்...

அந்த ஸ்டேஷனுக்கு லிஷா நேற்று வந்து பேசியதும்... சில நிமிடங்களிலேயே அந்த ஸ்டேஷனின் சூழலை தனக்கு சாதகமாக மாற்றியதும்...  என்று இன்ஸ்பெக்டர் நினைவுகூர்ந்தபடி புகைபிடித்திருந்தார்...

அந்த ஸ்டேஷனில் அனைவருக்கும் லிஷாவை தனிப்பட்டமுறையில் பிடித்திருந்தது... பாவம் அந்த பெண்... அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது... என்று மனதளவில் தான் ஒரு போலீஸ் என்பதையும் மறந்து பிரார்த்தனை செய்துகொண்டார்... ஒவ்வொரு முறையும் அவர் ஊதிவிடும் சிகரெட் புகைகளில், ஒருமுறை மட்டுமே பார்த்த அந்த பெண்ணின் முகத்தை தேட முயற்சித்தார்... அவள் முகம் அவர் நினைவுக்கு சிக்கவில்லை... முகம் மட்டுமா..? அவள் எங்கிருக்கிறாள் என்ற குறிப்பும் எதுவும் சிக்காமல் இருந்தது...

தனது இரண்டாவது சிகரெட் கரைந்திருக்கும் போது மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழையவும்... சரியாக தாஸும் சந்தோஷூம் ஸ்டேஷனுக்கு வந்தடைந்தனர்...

'ஹலோ சார்..? குணா எங்கேயிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டீங்களா..?' என்று நுழைந்தபடியே தாஸ் விசாரிக்க...

'கண்டுபிடிச்சிட்டோம்... ஆனா, குணா லிஷாவை கடத்தலை... இன் ஃபாக்ட் அவன் இப்போ சென்னையிலியே இல்ல..' என்ற இன்ஸ்பெக்டரின் பதில், அருகிலிருந்த சந்தோஷூக்கு மீண்டும் அதிர்ச்சியாய் இருந்தது...

'வேறெங்க போயிட்டான்..' என்று சந்தோஷ் ஆர்வம் தாளாமல் கேட்டான்...

'அவன், மிஸ்ட்ரி டிவி சேனல் ஆளுங்களோட, ஏதோ ப்ரோக்ராம் ஷூட் பண்ண நேத்து நைட்டே கிளம்பிட்டாங்களாம்.... மும்பை மெயில்-ல ஏறுனதா கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க... சோ அவன்கிட்ட லிஷா இல்ல-ங்கிறது நிச்சயம்...' என்று கூற, தாஸ் முகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது...

அடக்கடவுளே..? இந்த குணா எதிர்பார்த்ததைவிட அதிக அவசரகுடுக்கனாக இருக்கிறானே..? இப்போதிருக்கும் நிலையில், லிஷாவை விட்டுவிட்டு அவனை முந்திக்கொண்டு அந்த கேணிவனத்துக்கு செல்வது என்பது இயலாத காரியம்...
என்று மனதிற்குள் வெம்பினான்... ஆனால், சந்தோஷூக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை... அவன் கருத்தெல்லாம் லிஷாவின் மீது இருந்தது...

தாஸ் மிகவும் குழம்பிப் போனான்... லிஷாவைத் தேடுவதா, குணாவை முந்துவதா, சந்தோஷூக்கு ஆறுதலளிப்பதா... என்ன நிலையிது... என்று குழம்பிக்கொண்டிருந்தான்...

அப்போது, இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் வந்தது...

'ஹலோ..?'

' . . . . . . '

'அப்படியா..?'

'. . . . . . .'

'ஆமா, அதே நம்பர்தான்... எந்த ஏரியாவுல நின்னுட்டிருக்கு..?'

'. . . . . .'

'உள்ளே யாராவது இருக்காங்களா..? வண்டி ஆக்ஸிடெண்ட் ஏதாவது ஆன மாதிரி மார்க்ஸ்..?'

'. . . . . '

'குட், இப்பவே கிளம்பி வர்றேன்...' என்று கூறி, ஃபோனைவைத்துவிட்டு, தாஸ் பக்கமாக திரும்பி...

'தாஸ், சந்தோஷ் உடனே கிளம்புங்க... லிஷா ஓட்டிட்டு போன கார்.. பெசண்ட் நகர் பக்கமா, ஒரு கிஃப்ட் ஷாப் வாசல்ல நின்னுட்டிருக்காம்...'

'சார்..? ஆக்ஸிடெண்ட் ஏதாவது..?'

'நோ.. நோ... வண்டி முழுசாத்தான் இருக்கு... உள்ளே ஆளில்லே...' என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏறி செல்ல... தாஸூம் சந்தோஷும் இன்னோவாவில் ஏறி, போலீஸ் ஜீப்பை பின்தொடர்ந்தபடி சென்றனர்...

--------------------------------

பெசண்ட் நகர்...

"MIGHTY GIFTS" என்று ஒரு கிஃப்ட் ஷாப் வாசலில், லிஷா ஓட்டிச் சென்ற தாஸின் கார் நின்று கொண்டிருந்தது... இன்ஸ்பெக்டர் வாசு அந்த காரை சுற்றி சுற்றி பார்வையால் அலசிக் கொண்டிருந்தார்... தாஸும் தன் சாவிக்கொத்திலிருந்த டூப்ளிகேட் சாவியை பிரயோகித்து காரை திறந்தான். உள்ளே ஒரு கிஃப்ட் பாக்கெட் இருந்தது...

இன்ஸ்பெக்டர் அந்த பாக்கெட்-ஐ உற்று நோக்கினார்...

தாஸ் அவரிடம், 'சார்... இதை ஓபன் பண்ணி பாக்கலாமா..?' என்று கேட்க...

'நோ.. நோ.. அவசரப்படாதீங்க..' என்று கூறி, தன்னருகில் இருந்த கான்ஸ்டபிளிடம் அந்த பார்சலை கொடுத்து... 'அந்த கிஃப்ட் ஷாப்புக்குள்ள போய் இந்த பார்சல் இங்கே வாங்கினதுதானான்னு கேட்டுட்டு வாங்க..' என்று ஏவிவிட... அந்த கான்ஸ்டபிள் விசாரிக்க சென்றார்..

'கார் இப்போ கிடைச்சிட்டதால, கிட்நாப்பிங்-ஆ இருக்கும்னு அஸ்யூம் பண்ண முடியுது... இருந்தாலும், கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்..' என்று இன்ஸ்பெக்டர் தாஸிடமும் சந்தோஷிடமும் கூறிக்கொண்டிருக்க... கான்ஸ்டபிள் திரும்பி வந்தார்...

'சார், இந்த கடையில வாங்கினதுதானாம்... நேத்து நைட் பர்சேஸ் பண்ணியிருக்காங்க...' என்று கூற, இன்ஸ்பெக்டர் அந்த பார்சலை பிரித்தார்... அதில்... ஒரு அழகான ராஜாவும் ராணியும் நடனமாடுவதுபோன்ற ஒரு பொம்மை இருந்தது... அதற்கு அடியில் ஒரு 'க்ரீட்டிங் கார்டு' இணைக்கப்பட்டிருக்க... அதை எடுத்து பிரித்து படித்தார்...

என் அன்பு காதலனுக்கு,
உன் பிறந்தநாளுக்கு காதலியாய் எனது கடைசி பரிசு (அடுத்த வருஷம்தான் நான் உன்  மனைவியாயிடுவேனில்ல..!)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
லிஷா


என்று எழுதியிருக்க... இன்ஸ்பெக்டர் திரும்பி சந்தோஷை பார்த்து...

'சந்தோஷ்..? இன்னிக்கி... உங்க பிறந்த நாளா..?' என்று கேட்க, அப்போதுதான் சந்தோஷூக்கே அது நினைவு வருகிறது.. 'ஆமா சார்..' என்று பரிதாபமாக கூற, லிஷாவின் அந்த பரிசை இன்ஸ்பெக்டர் அவனிடம் கொடுத்தார்...

சந்தோஷ் அதை படித்து பார்த்துவிட்டு 'லி..ஷ்..ஷா...ஆஆ...' என்று கதறி அழ ஆரம்பித்தான்... நிற்க முடியாமல் தடுமாறியபடி அழுத சந்தோஷை தாஸ் தாங்கலாக பிடித்தபடி தனது இன்னோவை நோக்கி அழைத்து சென்றான். அங்கிருந்த போலீஸ்காரர்களும் அவன் அழுவதை பார்த்து கலங்கினர்...

தாஸ் அவனை அழைத்து வந்து தனது காருக்குள் அமர வைத்தான்...

'ப்ளீஸ் சந்தோஷ் அழாதே... லிஷாவுக்கு ஒண்ணும் ஆகாது... எப்படியும் கண்டுபிடிச்சிடுவோம்... நான் பாத்துக்குறேன்..' என்று ஆறுதல் கூற...

சந்தோஷ் அழுதபடி, 'என் பிறந்த நாளுக்கு ஞாபகமா கிஃப்ட் வாங்கி வச்சிருக்கா பாருங்க பாஸ்... அதுவும், காதலியாய் கடைசி பரிசுன்னு வேற போட்டுட்டு போயிருக்கா..' என்று கூறி கூறி அழும் அவனை நினைக்க தாஸுக்கும் அழுகை வந்துவிடும்போலிருந்தது...

'சரி, அழாதே.. நீ இந்த வண்டியிலியே உக்காந்துட்டிரு... நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்..' என்று சந்தோஷை இன்னோவாவில் அமரவிட்டுவிட்டு, மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் வந்தான்...

'என்ன சார், இப்போ லிஷாவை வேற எப்படி டிரேஸ் பண்றது..?' என்று கேட்க...

'தெரியல... கிட்நாப்பிங்தான்-னா... ரொம்பவும் நீட்டா நடந்திருக்கு.. கார்ல ஒரு கீறல் கூட இல்ல.... வாங்குன கிஃப்ட் அழகா பேக் பண்ணி, காருக்குள்ள வச்சி லாக் செய்யப்பட்டிருக்கு... அவளை யாரும் பலவந்தமா இழுத்துட்டு போகலைன்னு தோணுது... சோ... மே பி... லிஷாவுக்கு நல்லா தெரிஞ்சவங்க இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாம்... ஆனா ஒரு விஷயம்தான் குழப்பமா இருக்கு...'

'என்னது சார்..?'

'ஒருவேளை பணத்துக்காக கிட்நாப் பண்ணியிருந்தாங்கன்னா, இதுவரைக்கும் அவங்க டிமாண்ட்ஸை ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாங்க... ஃபோன் வராததால இது மணி மோட்டிவ் கிட்நாப்பிங்தானான்னு கன்ஃபர்ம் பண்ண முடியாம இருக்கு...' என்று இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தாஸின் செல்ஃபோனில் பழைய ரிங்டோன் ஒலித்தது...

ரிங்டோன்
நாடகமெல்லாம் கண்டேன் உனது
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
சேலாடும் விழியிலே...டிஸ்ப்ளேவில் 'லிஷா காலிங்..' என்று வந்தது...

'சார்... லிஷாகிட்டருந்து ஃபோன்..' என்று கூற, அங்கிருக்கும் அனைவரது கவனமும், தாஸ் மீது படர்ந்தது...

'எடுங்க... எடுத்துப் பேசுங்க தாஸ்... கேஷூவலா பேசுங்க... நாங்க கூட இருக்கிற மாதிரி காட்டிக்காதீங்க...' என்று இன்ஸ்பெக்டர் செயல்முறையை விளக்க... தாஸ் பதற்றத்துடன் அந்த ஃபோனை எடுத்து ஆன் செய்தான்...

'ஹலோ..?'

'. . . . .'

'ஹலோ..? லிஷா..?'

'. . . . .'

'பிரம்ம சித்தர் சமாதி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி சொல்லு...  இல்லன்னா கண்டிப்பா லிசாவைக் கொண்ணுடுவேன்...' என்ற மறுமுனை குரல் , ஒரே வரியில் பேசிமுடித்ததும் இணைப்பு துண்டிக்கப்பட்டது...

(தொடரும்...)Signature

Thursday, September 23, 2010

"கேணிவனம்" - பாகம் 16 - [தொடர்கதை]


 இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------
 
பாகம் - 16

ஆபீசுக்கு பின்புறம், பீச் வியூ பார்க்கில், தாஸும் சந்தோஷூம் புகை பிடித்துக் கொண்டிருந்தனர்...

சந்தோஷ் ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையை பார்த்தபடி புகை இழுத்துக் கொண்டிருந்தான்... சிகரெட்டை பிடித்திருந்த அவனது கைகள், அவனுக்கும் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை எதிரிலிருந்த தாஸ் கவனித்தான்...

'சந்தோஷ்..? ஏதாவது பிரச்சினையா..?' என்று கேட்டதும், கவனம் கலைந்த சந்தோஷ் தாஸிடம் திரும்பினான்...

'ஏன் பாஸ்... அப்படி கேக்குறீங்க..?'

'உன் கை சிகரெட் பிடிக்கும்போது நடுங்குது!?! ஒருவேளை ஏதாவது பதற்றத்துல இருக்கியோன்னு தோணுது... அதான் கேட்டேன். அதுமட்டுமில்லாம, நீ என் ரூமுக்குள்ள கொஞ்சம் லேட்டா எண்ட்ரி ஆனதும், ஏதோ ப்ரிப்பேரஷனுக்கு டைம் எடுத்துக்கிட்ட மாதிரி இருந்தது... சம்திங் இஸ் ராங்...' என்று கச்சிதமாக கணித்து கூறினான்.

'பாஸ்... பிரச்சினையில இருந்தேன்.. ஆனா, என் லிஷா என்னை காப்பாத்திட்டா..'

'அப்படியா..?'

'அவமட்டுமில்லன்னா... இப்போ நான் ஜெயில்ல இருந்திருப்பேன் பாஸ்...?' என்றதும், தாஸ் அதிர்ந்து போனான்.

'ஜெயில்லயா..? என்னாச்சு சந்தோஷ்..'

'அந்த குணா நான் நினைச்சதைவிட பயங்கர கேடியா இருக்கான் பாஸ்... நான் அவன் அட்ரஸை கண்டுபிடிச்சு, அவன் வீட்டுக்கு போயிருந்தேன்.. பீர் அடிச்சிட்டிருந்தவன், நான் கேணிவனத்தைப் பத்தி எங்கேயாவது சொன்னியான்னு மிரட்டி கேட்டதும், என்னை தள்ளிவிட்டுட்டு லைட்-ஐ ஆஃப் பண்ணிட்டு ஓடிட்டான். கொஞ்ச நேரம் நான் அவன் ரூம்ல ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு தேடிட்டிருந்தேன். திடீர்னு போலீஸோட வந்து நிக்கிறான். நான் ஆடிப்போயிட்டேன் பாஸ்... ஒரு நைட் ஃபுல்லா போலீஸ் ஸ்டேஷன்லியே இருந்தேன். எனக்கு சின்ன வயசுலருந்தே போலீஸ்னா ரொம்ப பயம்... ஆனா, என்னை சரியா பழிவாங்கிட்டான் ராஸ்கல்... இது எல்லாத்தையும் பொறுத்துக்குவேன் பாஸ்... ஆனா, லிஷாவைப் பத்தி போலீஸ் கம்ப்ளைண்ட்ல கேவலமா எழுதியிருந்தான்... அதுக்காகவே எனக்கு சேன்ஸ் கிடைச்சா அவனை கொலை கூட பண்ணிடுவேன்...'

'ஓ மை காட்... என்னென்னவோ நடந்திருக்கு... ஆனா எங்கிட்ட ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம மறைச்சியிருக்கீங்க...'

'சாரி பாஸ்... லிஷாவும் நானும் இது உங்களுக்கு தெரிய வேணாமேன்னு நினைச்சோம்... வழக்கமா எல்லாம் தண்ணி போட்டுட்டுதான் உளறுவாங்க... நான் சிகரெட்டுக்கே எல்லாத்தையும் உளறி கொட்டிட்டேன்...' என்று கூறி, அடுத்து ஒரு பஃப்-ஐ இழுத்து ஊதினான்...

'இந்த குணாப்பய இப்படி ஒரு வில்லனா எப்படி மாறுனான்னுதான் தெரியல. பாஸ்..' என்று மீண்டும் புகை இழுத்தான்.

'எல்லாத்துக்கும் காரணமிருக்கு சந்தோஷ்... அவனை நான் முதல் தடவை ட்ரெய்ன்ல மீட் பண்ணும்போது, ஜஸ்ட் ஒரு செல்ஃபிஷ் இளைஞனாத்தான் எடை போட்டேன். ஆனா, அவன் இந்தளவுக்கு குரூரமா மாற காரணம், இந்த டைம் ட்ராவல்தான்-னு நினைக்குறேன்..'

'ஏன் பாஸ், டைம் டிராவலுக்கும் அவனோட கேரக்டர் மாறுனதுக்கும் என்ன சம்மந்தமிருக்கு...?'

'ஏன் இல்லாம... நாம செய்யற ஒவ்வொரு செயலும் நம்மளை மனதளவிலும், உடலளவிலும் அடுத்த நிலைக்கு தயார் படுத்தும்... உதாரணத்துக்கு. முதல் தடவையா ஒரு திருட்டை செய்யிற ஒருத்தன், அந்த திருட்டுல கிடைச்ச பொருளையோ பணத்தையோ மட்டும் அனுபவிக்கிறதில்ல... அந்த களவுல, பொருட்களை பறிகொடுத்த இன்னொருத்தனோட தவிப்பையும் சேர்ந்து ரசிக்க ஆரம்பிக்கிறான்... அது அவனுக்குள்ள இருக்கிற மிருகத்தனத்தை ட்ரிக்கர் பண்ணி விடுது... அதே மாதிரி, நல்ல ஆளுமைத்திறன் இருக்கிற ஒருத்தன், ஒரு சாதாரண பைக் ஆக்ஸிடெண்ட்ல தப்பி பிழைச்சான்னா, கிட்டத்தட்ட 6 மாசத்துக்காவது அந்த ஆக்ஸிடெண்ட்-ஐ நினைச்சி உள்ளூர நடுங்குவான். இதனால அவனோட ஆளுமைத் தன்மை கம்மியாகும்... இப்படி ஒவ்வொரு செயலும் பெரிய மாற்றத்துக்கு காரணமா இருக்கும்.'

'அப்போ, இந்த டைம் டிராவல்தான் அவனோட இந்த வில்லத்தனத்துக்கு காரணம்-னு சொல்றீங்களா..?'

'இருக்கலாம்... பொதுவாவே டைம் டிராவல் ஆகும்போது, நம்ம உடம்புல பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்-னு பிஸிக்ஸ் சொல்லுது... அந்த பின்விளைவுகள் இந்த குணாவுக்கு மனரீதியா குரூரத்தை ஏற்படுத்தியிருக்கும்னு நினைக்கிறேன்...'

'என்ன இருந்தாலும், அவனுக்கு சாவு என் கையிலதான்..' என்று கூறி சிகரெட்டின் கடைசி இழுப்பை இழுத்து முடித்தான்...

'ஏன் இப்படி லோக்கலா பேசிட்டிருக்கே... நீ கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனா, மறுபடியும் லிஷா வந்து காப்பாத்துவான்னு தைரியமா... அவ உனக்கு கிடைச்ச கிஃப்டு... அனாவசியமா உன் அவசர புத்தியால அவளை தொலைச்சிடாதே...' என்று தாஸ் அவனை அதட்டுகிறான்.

'ஆமாம் பாஸ்... லிஷா என்னை வந்து காப்பாத்துனப்போ, நானும் போலீஸ் ஸ்டேஷன்ல... இதையேத்தான் நினைச்சிட்டிருந்தேன். She is a precious gift to me..' என்று கடலைப் பார்த்தபடி ஃபீல் செய்து கூறினான்.

'தெரியுதுல்ல... ஒழுங்கா அடக்கமா நடந்துக்க...' என்று கூறி, அவனும் சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

இருவரும்... ஆபீசுக்கு வந்து, வேறு விஷயங்களைப் பற்றி ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்... நேரம் ஆக ஆக, லிஷா திரும்பி வராததால்... சந்தோஷ் உள்ளூர லேசாக கலக்கமுற்றான்.

'சரி சந்தோஷ்... நீ கிளம்புறதாயிருந்தா கிளம்பு... நாளைக்கு பாக்கலாம்... லிஷா வரலியா..?' என்று தாஸூம் கேட்க... சந்தோஷின் கலக்கம் அதிகமாகிறது...

மொபைலை எடுத்து அவளது நம்பருக்கு டயல் செய்தான்...

ரிங் போய்க்கொண்டேயிருக்க... லிஷா ஃபோனை எடுக்கவில்லை...

இதனால், அவன் மேலும் கலக்கமுற்றான்...

'என்ன சந்தோஷ்.. எங்கேயிருக்காளாம்..?'

'தெரியல பாஸ்... ஃபோனை எடுக்க மாட்டேங்குறா..?' என்று சொல்லும்போதே அவன் குரலில் தொணி மாறுகிறது...

'சரி விடு.. எங்கேன்னா பிஸியா... யார் கூடயாவது பேசிட்டிருப்பா..?' என்று தாஸ் கூறியபடி அவனது அலமாறியில் புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருக்க... சந்தோஷ் மனம் அமைதியுறாதவனாய், மீண்டும் அவள் நம்பருக்கு டயல் செய்தான்...

இம்முறையும், ரிங் முழுவதுமாக போய் கட் ஆனது... குழப்பத்துடன் மணி பார்த்தான்

இரவு 10.30...

'எனக்கு பயமா இருக்கு பாஸ்...' என்று கூற, தாஸ் செய்து கொண்டிருக்கும் வேலைகளை விட்டுவிட்டு, சந்தோஷூக்கு அருகில் வந்து அவன் தோள்களை தட்டிக் கொடுத்தான்.

'விடு சந்தோஷ், ரிலாக்ஸா இரு... டோண்ட் பி டென்ஸ்டு... எனக்கென்னமோ உங்க ரெண்டு பேர்ல, அவதான் புருஷன், நீ பொண்டாட்டின்னு தோணுது... ' என்று அவனே அவன் கமெண்ட்டுக்கு சிரித்துக் கொண்டான். இந்த ஜோக், சந்தோஷை மேலும் பலவீனமாக்கியது...

மீண்டும் டயல் செய்து பார்த்தான்...

இம்முறை, ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது...

'ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வருது பாஸ்..' என்று சொல்லும்போது, சந்தோஷின் குரல் உடைந்தது...

'ஹே, சந்தோஷ், ஏன் பதட்டப்படுறே... ' என்று அவனுக்கு சமாதானம் செய்ய முயன்றான். ஆனால், உண்மையில் அவனுக்குள்ளும் ஏதோ ஒருவித பயம் தொற்ற ஆரம்பித்தது...

'இந்நேரம் அவ திரும்பியிருக்கணும் பாஸ்... ஆனா, திரும்பலியே..? எனக்கு பயமாயிருக்கு பாஸ்... ஒரு வேளை, அவளுக்கு ஆக்ஸிடெண்ட் ஏதாவது..?'

'ச்சீ... சும்மா இரு... என்ன பைத்தியக்காரத்தனமான அஸம்ஷன்ஸ்... அவ பேட்டரி ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கும்... கொஞ்ச நேரத்துல வந்துடுவா.. கலங்காம இரு..?' என்று அவனுக்கு செயற்கையாய் ஆறுதல் கூறினான்.

ஆனால், சந்தோஷ் இந்த ஆறுதல்களுக்கெல்லாம் மசிபவனாக தெரியவில்லை... அவன் கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டால்மெண்ட்டில், விசும்பிக் கொண்டிருந்தான்.

மேலும் ஒரு மணி நேரம் நெருப்பு யுகமாக கடந்தது...

இல்லை...

அவள் வரவில்லை...

வருவதற்கான அறிகுறிகளும் எதவும் தென்படவில்லை... இனி, என்ன செய்வது.. என்று தாஸும் குழம்பிப் போயிருந்தான்.

'சந்தோஷ்... கிளம்பு..' என்று தாஸ் புறப்பட்டான்...

'எங்கே பாஸ்..?' குரலில் இன்னும் நடுக்கம் அவனுக்கு குறையவில்லை...

'எங்கேயோ போய் தேடுவோம். இப்படி ஒரே ரூம்ல உக்காந்துட்டிருக்கிறது ஏதோ மாதிரியிருக்கு..' என்று கூறி, அங்கிருந்து கிளம்ப... சந்தோஷ் அவனை நடைபிணமாய் தொடர்ந்து சென்றான்.

லிஷா ஏற்கனவே காரை எடுத்துக்கொண்டு போயிருந்ததால், தனது இன்னொரு கார்-ஆன இன்னோவா-வில், அந்த இரவு நேரத்தில்... எங்கு போகப்போகிறோம் என்றறியாமல் இருவரும் புறப்பட்டனர்...

-----------------------------

சென்னையின் முக்கிய பிரதான சாலைகள் அனைத்திலும், கிட்டத்தட்ட 3 மணி நேரமாய் தாஸ் காரில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். எல்லா நைட் ஹோட்டல், தியேட்டர் வாசல், பீச் ஓர சாலைகள் என்று எந்த ஒரு இலக்குமில்லாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்தான்.

சந்தோஷ் வெளியே வெறித்து பார்த்தபடி அமைதியாக வந்துக் கொண்டிருந்தான். அவன் மனதுக்குள், லிஷா திடீரென்று ஃபோன் செய்து, சாரி சேண்டி ரொம்ப லேட் ஆயிடுச்சு என்று செல்லமாய் கொஞ்சியபடி பேசுவாளோ என்று ஒரு ஆசை உள்ளூர உழன்றுக் கொண்டிருந்தது.

அப்படி பேசினாள் அவளை திட்டக் கூடாது... பரவாயில்லடா..! என்று பதிலுக்கு கொஞ்சியபடி சொல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால் அப்படி எதுவும் ஃபோன் வராததால் அவன் மனதில் பயத்தின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்ததை வெறுத்தான்.

அதே வெறுப்பில் மேலும் 2 மணி நேரம் ஊர் சுற்றியதுதான் மிச்சம்... சந்தோஷுக்கு, இந்த விஷயத்தை போலீசிடம் கொண்டு போக பயமாக இருந்தது... காரணம், அப்படி போலீஸில் சென்று கம்ப்ளைண்ட் செய்தால், அவளுக்கு ஏதோ ஆபத்து என்று தான் நம்புவது போலாகும் என்பதால், போலீசிடம் போவது பற்றி யோசிப்பதை தவிர்த்து வந்தான்.

ஆனால், தாஸ் போலீஸிடம் சென்று கம்ப்ளைண்ட் செய்தால் தேடுவது சுலபம் என்று எண்ணியிருந்தான். சந்தோஷை எங்காவது பத்திரமாக விட்டுவிட்டு, பிறகு போலீஸிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்தான்.

இப்படி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல், அந்த இரவில் காரில் சென்னை சுற்றியபடி மனக்கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தனர்.

காரில் கடிகாரத்தில், மணி அதிகாலை 5.15... என்று காட்டியது...

இருவரும் பெயருக்குக்கூட கண்மூடவில்லை... தூக்கத்தை தொலைத்திருந்தனர். சந்தோஷ் மனதிற்குள் திடீரென்று ஏதோ தோன்ற, காரில் எஃப்.எம்.ரேடியோவை ஆன் செய்தான்.

அதில், கந்தன் கருணை படத்தில் திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... என்ற பாடலின் சரணம் ஒலித்துக் கொண்டிருந்தது...

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!


இந்த பாடலை கேட்டதும், சந்தோஷ் என்ன நினைத்தானோ பாவம், அவனுக்கு அழுகை பீறிட்டு வந்தது...

கதறி அழ ஆரம்பித்தான்...

தாஸ் காரை ஓரமாக நிறுத்தியபடி அவனை சமாதான் செய்தான். ... 'ஹே... சந்தோஷ்... என்ன இது.. சின்ன குழந்தை மாதிரி... அழாதே..' என்று அவனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்...

'இல்ல பாஸ்... என் லிஷாவுக்கு ஏதோ ஆபத்து... என்னால அதை உணர முடியுது... அவ உயிருக்கு ஏதாவது ஆயிருக்குமோன்னு... பயமாயிருக்கு பாஸ்...'

'அதெல்லாம் ஒண்ணும் ஆகியிருக்காது...'

'இல்ல பாஸ்... எனக்குள்ள ஏதோ கணமா இருக்கு... இந்த மாதிரி எனக்கு இருந்ததேயில்ல... நான் அவளை ரொம்ப லவ் பண்றேன்...' என்று அவன் பேசிக்கொண்டிருக்கும்போது... சந்தோஷின் மொபைல் ஒலித்தது... தாஸ் சட்டென்று, சந்தோஷின் பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து பார்த்தான்.

அதில் 'லிஷா காலிங்...' என்று வந்தது...

மெலிதாக சிரித்தபடி... 'பாத்தியா... அவதான்... ' என்று குதூகலத்துடன் கூறி.விட்டு.. ஃபோனை எடுத்து ஆன் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்...

'லி...லிஷா... லிஷா... ஆர் யு தேர்...?'

'. . . . . . . . . . . . . . . . . ' பெரிய மௌனம்... ஆனால், லைனில் மறுமுணையில் இணைப்பு இருந்தது...

'ஹலோ... லிஷா... கேக்குதா..?'

'. . . . . . . . . . . . . . . . . ' மீண்டும் மௌனம்...

தாஸ் செய்வதறியாமல் திகைத்திருந்தான்... பாவம், சந்தோஷின் கண்ணீர் அவனையும் பலவீனப்படுத்தியிருந்தது...

இம்முறை சந்தோஷ் பேசினான்...

'லிஷா... என்னம்மா ஆச்சு... எங்கேயிருக்கே நீ..?' என்று அழுதபடி பேசினான்... ரேடியவில் சிக்னல் கிடைக்காத போது கேட்கும் ஹிஸ்... என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது...

மௌனம்...

'பாஸ்... என்ன பாஸ்... ஒண்ணுமே பேச மாட்டேங்குறா..?' என்று குழந்தையைப் போல், தாஸிடம் சந்தோஷ் புலம்பினான்.

'இரு சந்தோஷ்...' என்று மீண்டும் ஃபோனில் கவனம் செலுத்தியவன்... 'லைன்ல வேற யாராவது இருக்கீங்களா..?'

அதே ஹிஸ் என்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது...

'என்னன்னு தெரியல சந்தோஷ்... அந்த பக்கத்துல லைன் ஆன்ல இருக்கு ஆனா...' என்று தாஸ் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது... 'சந்தோஓஓஓஓ' என்று திடீரென்று லிஷாவின் குரல் சத்தமாக கேட்டு... அவள் முழுப்பெயர் சொல்லும்முன், 'பட்' என்று ஏதோ சத்தம் கேட்டு...  லைன் துண்டிக்கப்பட்டது...

'லிஷா.. லிஷா... என்னாச்சு... என்னாச்சு லிஷா... ஹலோ..?' என்று சந்தோஷ் மொபைலைப் பார்த்து கத்திக்கொண்டிருந்தான்...

(தொடரும்...)Signature

Wednesday, September 22, 2010

"கேணிவனம்" - பாகம் 15 - [தொடர்கதை]இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 15

அந்த மதிய வேளையில் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாகவே இருந்ததால்... லிஷா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அனைவரது கவனமும் அவள்மேல் திரும்பியது. உள்ளே உணவருந்திமுடித்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்  'வாசு'வுக்குஅருகில் சென்று நின்றாள்...

'சார் வணக்கம் என் பேரு லிஷா...'

லிஷாவின் வணக்கத்தால் பேப்பரிலிருந்து கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் வாசு, அவளை ஏறிட்டு பார்த்தார்...

'என்னம்மா விஷயம்..?'

'சார், என் வருங்கால ஹஸ்பெண்ட்-ஐ இங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க..? அதான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்னு வந்திருக்கேன்...' என்று மிகவும் திட்டவட்டமாக கூறினாள்.

வாசு அவளை சிறிது நேரம் உற்று நோக்கியபடி, 'யாரும்மா உன் வருங்கால புருஷன்..?' என்று கேட்டார்.

'சந்தோஷ்..!' என்று கூற, இன்ஸ்பெக்டர் அருகிலிருக்கு கான்ஸடபிளிடம், சந்தோஷை அழைத்து வர சைகை செய்தார்... சந்தோஷ் பக்கத்து அறையிலிருந்து அழைத்து வரப்பட்டான். ஒரு இரவு முழுவதும், போலீஸ் ஸ்டேஷனில் கழித்திருந்ததால், சந்தோஷின் முகத்தில் லேசாக ஒரு க்ரிமினல் களை தெரிந்தது கண்டு லிஷா வருத்தமடைந்தாள்.

'இவன்தானே..?' என்று வாசு கேட்டார்...

'ஆமா சார்..'

'சரி, உக்காரு... என்ன சொல்லனுமோ சொல்லு..' என்று இன்ஸ்பெக்டர் மேற்கொண்டு கேட்க... லிஷா, சந்தோஷை திரும்பி பரிதாபமாக பார்த்தாள். அவனும் இவளை அவமானத்துடன் பார்த்தான். உடனே லிஷா அவனிடம்...

'நான் அப்பவே போலீஸ்கிட்ட போலாம் எல்லாம் அவங்க பாத்துப்பாங்கன்னு சொன்னேனே... கேட்டியா...? இப்ப பாரு... அவன் முந்திக்கிட்டு ஏதேதோ கதை கட்டி அசிங்கப்படுத்தியிருக்கான்... இதெல்லாம் தேவையா... இனியாவது நடந்ததை சொன்னியா இல்லியா..?' என்று சந்தோஷைப் பார்த்து கேட்க, அவன் குழப்பத்தில் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இவள், கேணிவனத்தை பற்றி போலீஸிடம் சொல்லப் போகிறாளோ என்று பயந்தான்.

'ஏம்மா... என்ன நடந்தது..? முதல்ல அதச்சொல்லு... நீ பாட்டுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு போறே..?' என்று இன்ஸ்பெக்டர் வாசு, அவளை மிரட்ட... லிஷா ஒரு சின்ன மௌனத்திற்கு பிறகு தொடர்ந்தாள்...

'அந்த குணா, எங்களை வேணுமின்னே பழிவாங்குறான் சார்...' என்று பேச ஆம்பித்தாள்...

'அவன் பழிவாங்குறானா..? என்கிட்ட அவன் வேறமாதிரி கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்திருக்கானேம்மா..?'

'அவன் உங்ககிட்ட என்ன சொன்னானோ எனக்கு தெரியாது சார்... ஆனா, என்னை லவ் பண்றேன்னு கிட்டத்தட்ட 6 மாசமா என் பின்னாடி சுத்திட்டிருந்தான். ஆனா, நான் ஏற்கனவே சந்தோஷை லவ் பண்றேன்னு பல தடவை அவன்கிட்ட சொல்லிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை, என்னையும் லவ் பண்ணுன்னு பயங்கர டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சான். நான் ஏற்கனவே இந்த விஷயத்தை பத்தி போலீஸ்ல சொல்லலாம்னு சொன்னா, சந்தோஷ்தான் வேண்டாம்-னுட்டார்...  இவருக்கு போலீஸ்னாவே ரொம்ப பயம், அதுவும் சினிமால காட்டற போலீஸ்களையெல்லாம் கற்பனை பண்ணிக்கிட்டு, விஷயத்தை நாமளே ஹேண்டில் பண்ணிக்கலாம்-னு சொல்லிட்டார்.... உங்ககிட்ட சொல்லியிருந்தா, இந்த பிரச்சனை எப்பவோ முடிஞ்சிருக்கும்...' என்று தலைகுனிந்து மெதுவாக அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுவதை பார்த்த இன்ஸ்பெக்டர் அவளுக்குஆறுதல் கூறினார்... 'காம் டவுன் மிஸ்.லிஷா. ஏன் இப்ப அழறீங்க... அழாம... என்ன பிரச்சினைன்னு சொல்லுங்க..?'

'இல்ல சார், அந்த குணா, ரொம்ப ச்சீப்பா பிஹேவ் பண்ணிட்டான்..' என்று அழுகையை தொடர...

'என்னம்மா பண்ணான்..?'

'நானும் சந்தோஷும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறோங்கிறதால.. அப்பப்போ நெருக்கமா இருக்கிற மாதிரி என் மொபைல்ல ஃபோட்டோஸ்லாம் எடுத்துப்போம்... அந்த குணா ராஸ்கல், இதை தெரிஞ்சிக்கிட்டு, என் மொபைலை திருடிக்கிட்டு போயிட்டான். அதுல இருக்கிற ஃபோட்டோஸை இண்டர்நெட்ல ஏத்திடுவேன்னு சொல்லி அடிக்கடி என்னை மிரட்ட ஆரம்பிச்சான். அவன் சொல்ற மாதிரி நான் அவனுக்கு உடன்படனும்னு ப்ளாக் மெயில் பண்ண ஆரம்பிச்சான்...'

'இஸ் இட்..?' என்று இன்ஸ்பெக்டர் சந்தேகமாய் கேட்க... சந்தோஷூக்கு லிஷா அரங்கேற்றும் நாடகத்தை போலீஸார்கள் நம்புவார்களோ நம்பமாட்டார்களோ என்று ஐயம் ஏற்பட்டு பயந்துக்கொண்டிருந்தான்.

'ஆமா சார்... என் மொபைலைத் தேடித்தான் சந்தோஷ் அவன் வீட்டுக்கு போயிருந்தார்...' என்று கூறிமுடிக்க... ஒருவழியாக அவள் அரங்கேற்றும் நாடகத்தை புரிந்து கொண்ட சந்தோஷ் தைரியம் வந்தவனாக, தன் பங்குக்கு அவனும் தொடர்ந்தான்....

'அவன் தண்ணியடிச்சியிருந்ததால ஓங்கி அரைஞ்சேன் சார்... ஆனா, அவன் என்னை தள்ளிவிட்டுட்டு ஸ்விட்சை ஆஃப் பண்ணிட்டு ஓடிட்டான். அவன் வரதுக்குள்ள, லிஷாவோட மொபைலை தேடி எடுத்துடலாம்னு பாத்தா, அதுக்குள்ள அவன் உங்களை கூட்டிட்டு வந்துட்டான்...' என்று தெளிவாக கூற... இன்ஸ்பெக்டர் சந்தோஷை சந்தேகத்துடன் பார்த்தார்...

'நீ... ஏன்யா இதை நேத்து நைட் சொல்லலை..?'

'இல்ல சார், உங்களை பாத்தாவே பயமாயிருந்தது... அதான் சொல்லலை... என்னை மன்னிச்சிடுங்க சார்...'

'இப்ப காதலி வந்ததும் தைரியம் வந்துடுச்சா...' என்று கூறி லிஷாவை திரும்பி பார்த்தார்... லிஷா இன்னமும், தலையை குனிந்தபடி விசும்பி கொண்டிருந்தாள்.

'சரி விடும்மா... அழாதே... அந்தப்பய, இந்த சந்தோஷ்தான் உன்னை சந்தேகப்படறதா சொன்னானே...?' என்று கூறியதும், லிஷா குழப்பமாக முகத்தை வைத்துக் கொண்டு...

'சந்தோஷ் ஏன் சார் என்னை சந்தேகப்படணும், அவர் சந்தேகப்பட்டிருந்தா, அவர் குணா வீட்டுக்கு போகப் போறது எனக்கெப்படி தெரியும்..?'

'அப்போ இவன் குணா வீட்டுக்கு போகப்போறான்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?'

'தெரியும் சார், நான்தான், குணாவோட ஆஃபீஸ்ல போய் அவன் அட்ரஸை விசாரிக்க சொல்லி அனுப்பினேன்...'

'அப்படியா..? இவன் குணா ஆஃபீஸ்ல அட்ரஸ் கேட்டுட்டு போனானா..?' என்று இன்ஸ்பெக்டர் சந்தேகத்துடன் கேட்க...

உடனே சந்தோஷ், 'ஆமா சார், நீங்க வேணும்னா, கே.ஸி.ஆர். இன்ஃபோடெக் ஹெச் ஆர், மிஸ். சாந்தினி-ன்னு ஒரு பொண்ணுகிட்ட கேட்டுப்பாருங்க... அந்த ஆஃபீஸோட ஃபோன் நம்பர் என் மொபைல்ல இருக்கு' என்று சந்தோஷ் கூற, இன்ஸ்பெக்டர் அந்த கம்பெனிக்கு ஃபோன் செய்தார்...

'ஹலோ மிஸ் சாந்தினி..?'

'யெஸ்... ஹூ இஸ் திஸ்..?'

'நான் தி-நகர் போலீஸ் ஸ்டேஷன்லருந்து இன்ஸ்பெக்டர் வாசு பேசறேன்...'

'இன்ஸ்பெக்டரா..? என்ன சார் விஷயம்..?'

'உங்க ஆஃபீசுக்கு நேத்து யாராவது குணா-ங்கிறவரோட அட்ரஸை கேட்டு வந்தாங்களா..?' என்றதும், ஒரு சின்ன இடைவெளிக்குப்பின் பதில் வந்தது...

'ஆமா சார், சந்தோஷ்-னு ஒருத்தர் வந்திருந்தாரு..'

'ஓ.. ஓகே... ஜஸ்ட் ஒரு க்ளாரிஃபிகேஷன்தான்... தேங்க்யூ..' என்று ஃபோனை வைத்துவிட்டு திரும்பி கான்ஸ்டபிளை பார்த்து...

'நீங்க அந்த குணா வீட்டுக்கு போய், இவங்களோட மொபைல் இருக்கான்னு பாத்துட்டு இருந்தா கொண்டு வாங்க...' என்று கூற...  அந்த கான்ஸ்டபிள் அங்கிருந்து கிளம்பினார்...

அடுத்த 30 நிமிடத்திற்கு, லிஷாவுக்கும் சந்தோஷுக்கும் டீ வழங்கப்பட்டது... லிஷா போலீஸின் இந்நாள் சாதனைகளை பேப்பர்களில் படித்தவற்றை வைத்து புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தாள். சில சட்ட ரீதியான சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொண்டது போல் பாசாங்கு செய்தாள். சைபர் க்ரைம் பற்றி தனக்கு தெரிந்ததை வைத்து விவாதித்து கொண்டிருந்தாள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நிலையை தன் கட்டுக்குள் கொண்டு வந்துக்கொண்டிருந்தாள்.

இவையணைத்தையும் பார்த்தபடி சந்தோஷ்... லிஷாவை பார்வையால் அளந்து வியந்துக் கொண்டிருந்தான்...

என்ன பெண் இவள்... வழக்கமாக, பெண்கள் ஆபத்தில் மாட்டிக்கொண்டால், ஆண்கள் சென்று காப்பாற்றுவார்கள்... ஆனால் என் விஷயத்தில் இது தலைகீழாக நடக்கிறதே... இராத்திரி முழுவதும், பெற்றோரை இழந்த குழந்தையைப் போல், பயத்தில் புரண்டு கொண்டிருந்த என்னை, வந்து 10 நிமிடத்தில் சூழலையே மாற்றி சகஜநிலைக்கு கொண்டு வந்து காப்பாற்றிவிட்டாள். சாமர்த்தியமாக ஒரு பொய் நாடகத்தை அரங்கேற்றி... போலீஸார்களை நம்பவைத்து... இதெல்லாம் எனக்காக்கத்தானே... எனக்காக வெட்கத்தை விட்டு, அந்தரங்க புகைப்படங்களைப் பற்றி பேசி... என்ன நடந்தாலும் சரி, இவளை எக்காரணத்துக்காவும், வாழ்க்கையில் தொலைத்துவிடக்கூடாது... என்று சந்தோஷ் தன்மனதுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க, அவன் கவனத்தை, குணா வீட்டிலிருந்து திரும்பி வந்த கான்ஸ்டபிள் கலைத்தார்...

'சார், குணா வீட்ல இந்த ஃபோன் கிடைச்சுது சார்... நான் உள்ளே போகும்போது, இதை கையில வச்சிக்கிட்டு ஏதோ செஞ்சிக்கிட்டிருந்தான் சார்... ஃபோனை வாங்கிட்டு வந்துட்டேன். ஈவினிங் உங்களை வந்து மீட் பண்ண சொல்லியிருக்கேன்..' என்று கான்ஸ்டபிள் அந்த மொபைலை கொடுக்க... இன்ஸ்பெக்டர் அந்த மொபைலினுள்ளே ப்ரவுஸ் செய்து பார்க்க, அதில், சந்தோஷும் லிஷாவும் எடுத்துக் கொண்ட சில அந்தரங்க ஃபோட்டோக்கள் கிடைத்தது. இதைப் பார்த்த இன்ஸ்பெக்டர், மொபைலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு...

'லிஷா... பர்சனல் ஃபோட்டோஸ் எடுத்துக்கிறது தப்புன்னு சொல்லலை... ஆனா அதை பர்சனலா பத்திரமா வச்சிக்கணும்... இல்லன்னா ரொம்ப ஆபத்து... உங்க நல்ல நேரம், உங்க லவ்வர் பேர்ல இன்னும் F.I.R. போடலை... இல்லைன்னா, கொஞ்சம் தலைவலியாயிருக்கும். உங்க ஆளை தாராளமா கூட்டிட்டுபோலாம்...' என்றுகூற... லிஷா மகிழ்ச்சியுடன் எழுந்து, இன்ஸ்பெக்டருக்கு கை கொடுத்தாள்.

'ரொம்ப நன்றி சார்...' என்றுகூறிவிட்டு, ஓடிச்சென்று சந்தோஷை கட்டிக்கொண்டாள்...

'மிஸ். லிஷா... ஒரு நிமிஷம்...' என்று இன்ஸ்பெக்டர் கூப்பிட, மீண்டும் திடுக்கிட்டு திரும்பினாள்...

'நீங்க வேணும்னா, அந்த குணா பேர்ல ஒரு கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்துட்டு போங்க... நான் அவனை அரெஸ்ட் பண்ணி ஆக்ஷன் எடுக்குறேன்..' என்று கூற...

'வேண்டாம் சார், அவனை ஜஸ்ட் மிரட்டி மட்டும் வையுங்க... ஏன்னா, அவன் I.T.-ல வர்க் பண்றதால, எப்பவும் வெளிநாடு போற வாய்ப்பு கிடைக்கும். நீங்க அவன் பேர்ல F.I.R. போட்டீங்கன்னா, பாவம், அவனால வெளிநாடு போக முடியாம போயிடும்... சோ.. கம்ப்ளைண்ட் வேண்டாமே..?!' என்று கெஞ்சினாள்....

இன்ஸ்பெக்டர் அவளை பெருமிதத்துடன் பார்த்து வழியனுப்பி வைத்தார்.

அங்கிருந்து வெளியேறி இருவரும் ஆட்டோ பிடித்து ANCIENT PARK-க்கு திரும்பி கொண்டிருந்தனர்...

தெருவை கடக்கும் வரை அமைதியாக இருந்த சந்தோஷ், தெருமுனையில் ஆட்டோ திரும்பியதும், லிஷாவின் கைகளை பற்றிக்கொண்டு பேச குழறலாக பேச ஆரம்பித்தான்.

'லிஷா... ரொம்ப தேங்க்ஸ்டா..' என்று அழாத குறையாக அவளுக்கு நன்றி சொல்ல... லிஷா அவன் தோளில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள்.

'ஏண்டா சேண்டி தேங்க்ஸ்லாம் சொல்லி என்னை தனியாளாக்குற... எனக்கேதாவது ஒண்ணுன்னா... நீ ஹெல்ப் பண்ணியிருக்க மாட்டியா..' என்று கூற, அவன் பதிலெதுவும் கூறாமல் மௌனமாய் தெருவில் கடந்துபோகும் மனிதர்களை வேடிக்கை பார்த்தபடி வந்தான். திடீரென்று அவனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது...

'ஆமா..? எப்படி குணா வீட்ல உன் மொபைல் வந்துச்சு..?' என்று கேட்டான்

'அது பறந்துபோய் அங்கே விழுமா என்ன... நான்தான் கொண்டு போய் போட்டேன்..'

'உனக்கெப்படி அவன் வீட்டு அட்ரஸ் தெரியும். நான்கூட உங்கிட்ட சொன்னதில்லியே.. நீயும் போய் அவன் ஆஃபீஸ் H.R. சாந்தினிகிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வந்தியா..?'

'நான் ஏன் அங்கெல்லாம் போறேன். அன்னிக்கி அவன் நம்ம ஆஃபீஸ்லருந்து ஓடிப்போனப்போ, அவனோட ID கார்டு கிடைச்சதுன்னு சொன்னியே நினைவிருக்கா..?'

'ஆமா..? ஆனா அதுல அவன் அட்ரஸ் இல்லியே..?'

'அதுலதான் இருந்தது... நீ முன்னாடி பக்கம் மட்டும் பாத்தே.. அந்த ID கார்டு-ஐ tagலருந்து கழட்டி கார்டோட பின்னாடி பக்கம் பாத்தா, அவனோட அட்ரஸும் ப்ளட் குரூப்பும் இருந்தது... அதை வச்சி சின்னதா ஒரு ப்ளான் எக்ஸிக்யூட் பண்ணி பார்த்தேன்... வர்க் அவுட் ஆயிடுச்சு.. நல்ல வேளை, நாம எடுத்துக்கிட்ட கிஸ்ஸிங் ஃபோட்டோஸ் யூஸ்ஃபுல்லா இருந்தது...' என்று லிஷா பெருமையாக சொல்லிக் கொண்டாள்.

'ஆமாமா, இன்னும் நிறைய ஃபோட்டோஸ் இந்தமாதிரி எடுத்து வச்சிக்கணும்...' என்று சந்தோஷ் கூறிவிட்டு அமைதியாக இருக்க... லிஷா அவனை திரும்பி பார்த்து முறைத்தாள். இருவரும் ஆட்டோவுடன் சேர்ந்து குலுங்கியபடி சிரித்துக் கொண்டனர்.

லிஷாவும் சந்தோஷூம் Ancient Park வந்தடைந்தனர்...

நேராக மாடியில் தாஸின் அறைக்கு சென்றனர்... சந்தோஷ் உள்ளே வராமல் தயங்கி நின்றான்.

'லிஷா நீ உள்ளே பேசிக்கிட்டிரு... நான் போய் கொஞ்சம் ஃபேஸ் ப்ரெஷ் பண்ணிட்டு வந்துடுறேன்...' என்று அங்கிருந்து அவன் நகர்ந்துவிட, லிஷா கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

உள்ளே தாஸ் தனது கைகளில் ஒரு வெள்ளை கலர் பலகையை (P.C. டாப்லெட்) வைத்துக் கொண்டு அதில் Light Pen மூலம் சில கோட்டோவியங்களை வரைந்துக் கொண்டிருந்தான். அந்த பலகையில் அவன் வரைவது, அவனது கணினியின் மானிட்டரில் லைன் டிராயிங்-ஆக உருப்பெற்று கொண்டிருந்தது...

லிஷா அவனருகில் வந்து ஒரு நாற்காலியை இழுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள்...

'என்ன தாஸ், நீங்க கோவிலுக்கு போன காரியம் காயா? பழமா..?'

'ஆல்மோஸ்ட் பழம்தான்...'

'ஆல்மோஸ்ட்னா..?'

'ம்ம்ம்... அதாவது பாதி வெற்றி...'

'ஏன் தாஸ் குழப்பறீங்க... அந்த சித்தர் சமாதி அந்த கோவில்ல இருந்ததா இல்லையா..?'

'இருந்திருக்கு..'

'இருந்திருக்குன்னா..? இப்போ இல்லியா..?'

'ஆமா..'

'எங்கே இருந்திச்சாம்' என்று அவள் கேட்டுக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு சந்தோஷ் உள்ளே நுழைந்தான். முகத்தை கழுவிக்கொண்டு மிகவும் தெளிவாக இருந்தான்.

'ஹலோ பாஸ்.. பாத்து ரெண்டு நாளாச்சு... எப்படி இருக்கீங்க..?'

'ரெண்டு நாள்ல எனக்கு என்ன ஆயிடப்போகுது... நல்லாத்தான் இருக்கேன்'

'என்ன பாஸ் ஏதோ கோவில் கோபுரத்தை வரைஞ்சிட்டிருக்கீங்க..?'

'ஆமா.. இந்த கோவில் கோபுரங்கள்லாம் ரொம்ப ஆச்சர்யமான விஷயங்கிறது இன்னிக்குத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.. இதை கிட்டத்தட்ட இண்டியன் பிராமிட்ஸ்-னு சொல்லலாம்...'

'இண்டியன் பிராமிட்ஸ்-ஆ..?'

'ஆமா... இந்த கோபுரத்துக்கு மேல இந்த இடத்துல... ஒரு பொருளை வச்சிருக்காங்க... அந்த பொருள் ரொம்ப நாள் கெடாம இருந்திருக்கு.. அது என்ன பொருள் தெரியுமா..?' என்று கோபுரத்தின் உச்சியில் ஒரு வட்டம் போட்டு காட்டிவிட்டு இருவரையும் ஆர்வமாக பார்க்க... இருவரும் என்னவாக இருக்கும் என்பது போல் அந்த கோபுர கோட்டோவியத்தின் உச்சியையே பார்த்துக் கொண்டிருந்தனர்...

'என்ன தெரியலியா..?'

'என்ன தாஸ் இருந்துச்சு சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க..'

'இந்த இடத்துலதான் அந்த சித்தரோட சமாதி இருந்திருக்கு...'

'என்ன சொல்றீங்க..? கோவில் கோபுரத்தோட உச்சியில சித்தர் சமாதியா..? கோவில்ல வேற இடமே கிடைக்கலியா..?'

'அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா, சில புத்தகங்கள்ல கோபுர கட்டுமானத்துக்கான ஆக்சுவல் காரணத்தை படிச்சதும் ஆச்சர்யமாயிருக்கு..'

'என்ன பாஸ் காரணம்...'

'காற்றுமண்டலத்துல உலவிட்டிருக்கிற காஸ்மிக் கதிர்களை நாலு திசையிலருந்தும் கலசங்கள் மூலமா பிடிச்சி இழுக்கிறது இந்த கோபுரங்கள்தான்... நாலு திசையிலருந்தும், அந்த கதிரலைகளை கோவிலுக்கு உள்புறமா இழுத்து, அது மீட் ஆகுற இடத்துலதான், கோவில் கருவறை விமானமான குட்டி கோபுரம் இருக்குது... அது அந்த விமானம் மூலமா கருவறைக்குள்ள போக... உள்ளே இருக்கிற சாமி சிலைக்கு இந்த கதிரலைகள் மூலமா சில விசேஷ பொலிவு கிடைக்குது... ஏற்கனவே கோவிலுக்கு வர்ற பக்தர்கள் தன்னோட மனசை பிரார்த்தனைங்கிற பேரால ஒருநிலைப்படுத்தி, அந்த சிலையைப் பாத்து கும்பிடும்போது, அந்த சிலையில ஏற்கனவே பரவியிருக்கிற சக்தி ரிஃப்ளெக்ட் ஆகி, அங்க இருக்கிற எல்லாருக்கும் போய் சேருதாம். அந்த வகையில பாக்கும்போது, இந்த கோவிலமைப்புகள் ஒரு பவர் ஸ்டேஷன் மாதிரி செயல்படுது.... இது ஆச்சர்யம்தானே...'

'ஆச்சர்யம்தான் பாஸ்...'

'அந்தகாலத்துல கோவிலோட கோபுரத்தைவிட உயரமா எந்த கட்டிடங்களும் ஊருக்குள்ள கட்டக்கூடாதுன்னு சொன்னதுக்கு காரணம்... இந்த காஸ்மிக் கதிரலைகள் தடைப்படக்கூடாதுங்கிறதுதான்... ஆனா இன்னிக்கி... ஹ்ம்ம்ம்...' என்று தாஸ் ஏளனமாக சிரித்து கொண்டான்

'தாஸ்..? ஆனா, அந்த சித்தர், கோபுர உச்சியில சமாதியடைஞ்சதுக்கு ம் இதுதான் காரணமா..?'

'ஆமா... ரொம்ப சிம்பிள்... கோபுரத்துக்கு மேல வந்து...  உள்ளே இறங்கி... அப்புறமா தனக்கு வந்து சேர வேண்டிய கதிரலைகளை நேரடியா உள்வாங்குறதுக்காக அங்கே சமாதியாயிருந்திருக்காருன்னு நினைக்கிறேன்...'

'என்ன பாஸ்... என்னென்னமோ சொல்றீங்க... யாரிந்த சித்தர்... என்ன சமாதி..' என்று இரண்டு நாட்களாக நடந்த விஷயங்கள் தெரியாததால் சந்தோஷ் குழம்பிப்போயிருந்தான்.

'லிஷா... நீ அவனை தனியா கூட்டிட்டு போய் என்ன நடந்துச்சுன்னு அப்டேட் பண்ணிடு... ப்ளீஸ்...'

'கண்டிப்பா பண்றேன்... ஆனா, அந்த சித்தர் சமாதி இப்போ எங்கேயிருக்குன்னு சொல்லுங்களேன்... ப்ளீஸ், மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு..?'

'சாரி லிஷா... இப்போ அந்த சித்தர் சமாதி எங்கேயிருக்குன்னு இன்னும் தெரியவரலை... நாம அதையும் சேத்துதான் கண்டுபிடிக்கணும்...'

'அப்போ என்ன தாஸ் பண்றது..?'

'இது விஷயமா தாத்தாகிட்ட பேசுனேன்... அவர் நாம உடனடியா கேணிவனம் கிளம்புறது பெட்டர்னு ஃபீல் பண்றார்...'

'நானும் அதான் பாஸ் ஃபீல் பண்றேன்..' என்று சந்தோஷூம் இதை ஆமோதிக்கிறான்.

'ஏன் அந்த கோவிலை பாக்க உனக்கு அவ்வளவு ஆர்வமா இருக்கா..?' என்று தாஸ் கேட்க...


'நமக்கு முன்னாடி வேற யாரும் அதை பாத்துடக்கூடாதுன்னு ஆர்வமா இருக்கு..'

'என்ன சந்தோஷ் சொல்றே..?'

'பாஸ்... அந்த குணா பய வீட்ல, மிஸ்ட்ரி டிவி சேனலோட விசிட்டிங் கார்டு-ஐ பாத்தேன். எனக்கென்னமோ அவன் ஏதோ ஒரு ஃபார்வர்ட்  மூவ் பண்ணியிருக்கான்னு தோணுது... நாம முந்திக்கிறது நல்லதுன்னு நினைக்கிறேன்..'

'ஐ... சி...' என்று தாஸ் ஆழ்ந்த யோசனையில் இருக்க... சந்தோஷ் தாஸின் அருகில் வந்து...

'பாஸ்... நீங்க இங்க யோசிக்கிறது அப்படியே நம்ம ஆபீஸ் பின்னாடியிருக்கிற பார்க்ல வந்து தம் அடிச்சிக்கிட்டே யோசிச்சீங்கன்னா நல்லாயிருக்கும்... எனக்கும் தம் அடிக்கனும் போல இருக்கு..' என்று கெஞ்சலாய் சொல்லிவிட்டு, அருகிலிருக்கும் லிஷாவை ஏறிட்டு பார்த்தான். அவள் கோபத்தை காட்டாமல், சிரித்த முகமாய்...

'சரி, நீங்க என்ன பண்றீங்களோ பண்ணுங்க... எனக்கு அந்த ஜியாலஜிஸ்ட் நண்பன்கிட்ட ஒரு சின்ன வேலையிருக்கு... நான் போயிட்டு வந்துடுறேன்... தாஸ் நான் உங்க காரை கொண்டு போறேன்...'  என்று கூறியபடிஅங்கிருந்து கிளம்ப... தாஸும், சந்தோஷும், ஆபீஸின் பின்புறமிருக்கும் பீச் வியூ பார்க்குக்கு சிகரெட் பிடிப்பதற்காக விரைகின்றனர்...

லிஷா... தனக்கு வரவிருக்கும் ஆபத்து தெரியாமல்... காரை இயக்கி கொண்டு, ரிச்சர்டை பார்க்க கிளம்பி சென்றாள்...

(தொடரும்...)Signature

Friday, September 17, 2010

"கேணிவனம்" - பாகம் 14 - [தொடர்கதை]


 இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 14

லிஷாவைப் பற்றி அவதூறாக கம்ப்ளைண்ட்டில் குணா எழுதியிருந்ததைப் படித்த சந்தோஷ்... போலீஸ் ஸ்டேஷனில் உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

'சார், இது அநியாயம் சார், இதெல்லாம் பொய்..'  என்று தனக்கருகிலிருந்த கான்ஸ்டெபிளிடம் கூற, அவர் அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார்.

'சார்... உங்ககிட்டதான் சார் சொல்லிட்டிருக்கேன். இந்த கம்ப்ளைண்ட்ல எழுதியிருக்கிறதெல்லாம் சுத்த பொய் சார்..'

'அதுக்கு நான் என்னய்யா பண்ண்டடும்..? எதுவா இருந்தாலும் ஐயா வந்ததும் பேசிக்கோ..' என்று அவர் தனது வேலையில் மூழ்க...

சந்தோஷால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை...  என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். மனதிற்குள் கதறி அழுதுக்கொண்டிருந்ததால், அவன் முகம் வெளிறிப் போயிருந்தது... எழுந்தான்... சுற்றும் முற்றும் பார்த்தான். கான்ஸ்டெபிள் அவன் நிலையை பார்த்து வருந்தினார். ஆனால், வெளியில் காட்டிக்கொள்ளவில்லை...

'யோவ், இப்ப எதுக்கு எந்திரிக்கிறே... அப்படியே உக்காரு...' என்று கூற. அவன் அவரை நெருங்கி வந்து அழ ஆரம்பித்தான்.

'சார், நான் கட்டிக்கப் போற பொண்ணைப் பத்தி தப்பு தப்பா எழுதியிருக்கான் சார்... நான் எப்படி சார் சும்மா இருக்கிறது...'

'அதுக்கு நான் என்னய்யா பண்றது..?'

'எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க சார்... ' என்று கெஞ்சலாய் கேட்டான்.

'என்ன..?'

'ஒரே ஒரு ஃபோன் பண்றதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க சார்.. ப்ளீஸ்..?' என்று கூற, அவர் சற்று யோசித்தபடி... ஏறிட்டு அவன் முகத்தை பார்த்தார். மனதிற்கு சரி என்று படவே, தனது மொபைல் ஃபோனை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

--------------------------------------------------

அதே நேரம் லிஷா.... காருக்குள் தனது மொபைல் ஃபோனில் 'பரசுராமலிங்கேஸ்வரர் கோவில் அயன்புரம்' என்று கூகிள் மேப் தேடுதளத்தில் தேடிக்கொண்டிருந்தாள்.

'என்ன லிஷா, கூகிள் மேப், ஏதாச்சும் ரிசல்ட் காட்டுதா..?' என்று தாஸ் காரை ஓட்டியபடி கேட்டான்...

'காட்டுது தாஸ்... அயனாவரத்துல, கோபி கிருஷ்ணா தியேட்டருக்கு கொஞ்சம் தூரத்துல அந்த கோவில் இன்னமும் இருக்கு...'

'தேங்க் காட்...' என்று தாஸ் சந்தோஷப்பட்டான்.

'இருங்க, இந்த கோவிலைப் பத்தி வேற ஏதாச்சும் டீடெய்ல்ஸ் கிடைக்குதான்னு ட்ரை பண்ணி பாக்குறேன்..' என்று கூறியபடி, அதே குறிச்சொல்லை, கூகிள் content search-லும் டைப் செய்துக் கொண்டிருக்கும்போது, அவளது மொபைல் ரிங் ஆனது...

'ஹே சேண்டி..' என்று குதூகலித்தபடி ஃபோனை எடுத்து, 'டேய், ஏண்டா நைட் ஃபோன் பண்ணல... லஞ்ச போதலைன்னு டின்னருக்கும் அந்த HR பொண்ணுகூட போயிட்டியா...' என்று அவனை திட்டினாள். ஆனால், மறுமுனையிலிருந்து சந்தோஷ் மிகவும் பதற்றத்துடன் பேசினான்.

'லிஷா நான் சொல்றதை கேளு ப்ளீஸ்... நான் இப்போ தி-நகர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கேன். என்னை அரெஸ்ட் பண்ணியிருக்காங்க...' என்றதும், லிஷா திடுக்கிட்டாள்.
 
'வாட்..?' என்றதும், தாஸ் திரும்பி லிஷாவை குழப்பத்துடன் பார்த்தான். லிஷா அவன் பார்ப்பதைப் கவனித்து, முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டு, அவனிடம் பொய்யாக சிரித்தபடி போனில் காதுகொடுத்தாள்.

'ஆமா லிஷா..! அந்த குணா ராஸ்கல் என்னென்னவோ பண்ணிட்டான்...' என்று நடந்தவற்றை லிஷாவிடம் சந்தோஷ் கூற ஆரம்பித்தான்.

லிஷா எதுவும் இடைமறிக்காமல் அவன் கூறுவதை கூர்ந்து கவனித்து வந்தாள். அவள் மௌனமாக ஃபோனை கேட்டுக் கொண்டிருப்பதை தாஸ் கவனித்தான்.

நீண்ட நேரத்துக்கு பிறகு, லிஷா சந்தோஷிடம் பேசினாள்.

'சந்தோஷ், நீ அங்கேயே இரு... நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வர்றேன்...'

'சரி லிஷா, முடிஞ்சவரைக்கும் விஷயம், பாஸூக்கு தெரியாம பாத்துக்கோ...'

'பாத்துக்குறேன்..' என்று முகத்தில் ஆயிரம் யோசனைகளுடன் ஃபோனை கட் செய்தாள்.

'என்ன லிஷா... ஏதாவது பிரச்சினையா..?'

'இல்ல தாஸ்... நத்திங் சீரியஸ்... நீங்க என்னை, நம்ம ஆஃபீஸ் போற ரூட்ல இறக்கி விட்டுட்டு அந்த அயன்புரம் கோவிலுக்கு கிளம்புங்க... எனக்கு வேற ஒரு சின்ன வேலை இருக்கு..' என்று கூற, தாஸ் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் வண்டியை ஓட்டினான்.

----------------------------------------------------

சில மணி நேரங்களில்...

தாஸ், லிஷாவை Ancient Park-ல் இறக்கிவிட்டு நேராக அயன்புரத்துக்கு வந்தடைந்தான்.

லிஷா ஏற்கனவே கூகிள் மேப்பில் பார்த்து வழி கூறியிருந்ததால், அந்த கோவிலை கண்டுபிடிப்பதில், தாஸுக்கு சிரமம் இருக்கவில்லை...

பரசுராமலிங்கேஸ்வரர் ஆலயம் என்று பெயர்ப்பலகை அவனை வரவேற்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் புழங்கும் சாலையில் வலதுபுறமாய் அந்த கோவில் இருந்தது. கோவில் வாசலில், பூக்கடை ஒன்றும், ரோட்டுக்கு இடதுபுறமாய் கோவில் குளமும் இருந்தது.

தாஸ் காரை சற்று தள்ளி பார்க் செய்துவிட்டு, அந்த கோவிலுக்குள் நுழைந்தான். வெறும் கையோடு கோவிலுக்கு போக மனமில்லாததால் அங்கிருந்த பூக்கடையில் பூ வாங்கிக்கொண்டு, 100 ரூபாய் கொடுத்தான்.

கடையிலிருந்த இளைஞன், 'சார் சில்லறை இல்ல... நான் மாத்தி வைக்கிறேன். நீங்க போகும்போது வாங்கிக்கோங்க...' என்று அந்த பூக்கடைக்காரன் கூற, அவனும் சரி என்று கோவிலுக்குள் நுழைந்தான்.

பழங்காலத்து கோவிலுக்கு பெயிண்ட் பூசப்பட்டு, புதிய முகம் கொடுத்திருந்தார்கள். இருந்தாலும், அந்த கோவிலின் பழமையை உணர முடிந்தது. கோவிலுக்குள் ஆட்கள் அதிகமில்லாமல், ஆங்காங்கே ஒருசிலர் மட்டுமே தெரிந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தபடி தாஸ் நிதானமாக கோவிலுக்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.

வழியில்... மண்டபத்தில் ஒரு வயதான கிழவர் ஒரு புத்தகத்தை வைத்து மெல்லிய குரலில் மெதுவாக தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். அவரது குரல் அந்த கோவில் பிராகரத்தில் இனிமையாக எஃகோ எஃபெக்டில் கேட்டுக் கொண்டிருந்தது.

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திருவுள்ளமே?
மாலும் நான்முகனும் காண்பு அரியதோர்
கோலம் மேனியது ஆகிய குன்றமே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே...

தாஸுக்கு அந்த பாடலை கேட்டதும், நீண்ட தூரம் பயணம் செய்துவந்த களைப்பு முற்றிலுமாக மறந்து போனது. அவருக்கருக்கில் சிறிது நேரம் நின்றுவிட்டு, மீண்டும் நடையைத் தொடர்ந்தான்.

உள்ளே கருவறையில் ஒரு குருக்கள் தீபாராதனை காட்டினார். அதை பெற்றுக்கொண்டு அவரிடம் பேச்சு கொடுத்தான்.

'சாமி, இந்த கோவில்... பத்தி..' என்று ஆரம்பிக்க... அவர் பட்டென்று பதிலளித்தார்...

'இது பல்லவர் காலத்து கோவில்... 1000... 2000... வருஷத்து பழையது...'

'இந்த கோவில் பாடல் பெற்ற ஸ்தலமா..?'

'இல்லை, வரலாற்று ஸ்தலம்தான்... ஆனா ரொம்பவும் விசேஷம்..'

'அப்படியா..! இந்த கோவில்ல அந்த காலத்துல சித்தர் யாராவது சமாதியடைஞ்சியிருக்காங்களா...?'  என்று தாஸ் கேட்டதும், அந்த குருக்கள் அவனை சற்று நேரம் ஏற இறங்க பார்த்தார். பிறகு சுதாரித்துக் கொண்டு...

'இல்லையே அப்படி எதுவும் கிடையாதே..!' என்று கூற, தாஸ் குழப்பமடைந்தான். அவன் முன்னாள் இரவு, தாத்தாவுடன் கணித்தது தப்பாக இருக்குமோ என்று ஐயமுற்றான். இனி இந்த குருக்களிடம் பேசி பயனில்லை என்று தெரிந்து கொண்டு நடையைத் தொடர்ந்தான்.

பிறகு அங்கிருந்து நடைபோட்டு திரும்பவும் மண்டபத்துக்கு வந்தான். மீண்டும் தேவாரப் பாடல் எஃகோ எஃபெக்டில் கேட்டது. மனதிற்கு இதமாக இருந்தது. சரி, வந்தவரைக்கும் இந்த பாடல் கேட்டதுதான் மிச்சம் என்று சுதாரித்துக் கொண்டு வெளியே வந்தான்.

அங்கே பூக்கடைக்காரன் தாஸிடம் நூறு ரூபாய்க்கு மீதி சில்லறையை கொடுத்தான்... அதை பெற்றுக் கொண்டிருக்கும்போது, தாஸின் செல்ஃபோன் ஒலித்தது.

ரிங்டோன்
கண்போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா


டிஸ்ப்ளேவில் OLD FRIEND CALLING என்று வந்தது... ஃபோனை எடுத்தான்.

'தாத்தா..'

'என்னப்பா, பிரயாணம் முடிஞ்சுதா... கோவிலைப் போய் பாத்தியா.?' என்று அவரும் தாஸைப் போல் ஆர்வமாக கேட்க

'பிரயாணம்லாம் ஓகேதான்... ஆனா, இந்த கோவில்ல சித்தர் சமாதி எதுவும் இருக்கிறதா அறிகுறியே இல்ல தாத்தா... கோவில் ரொம்ப நல்லாயிருக்கு... அதுவும், உள்ள ஒரு பெரியவர் தேவாரம் பாடிட்டிருந்தாரு... அதை கொஞ்ச நேரம் கேட்டுட்டு இருந்தேன். மத்தபடி அந்த சித்தர் சமாதி கிடைக்கலியேன்னு தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு' என்று தாஸ் கூற, அருகிலிருந்த பூக்கடைக்காரன் தாஸை சற்று நேரம் வெறித்துப் பார்த்தான்.

'அப்படியா..!' என்று அவர் குரலும் தாழ்ந்து போனது, 'சரி விடுப்பா... அந்த சித்தர் எங்கே போயிடப் போறாரு... எப்படியும் கண்டுபிடிச்சிடுவோம்..' என்று நம்பிக்கை கொடுத்தார்.

'சரி தாத்தா... நான் உங்களுக்கு மறுபடியும் ஃபோன் பண்றேன்' என்று கூறி ஃபோனை வைத்து அங்கிருந்து கிளம்ப எத்தணித்த தாஸை அருகில் இருந்த பூக்கடைக்காரன் அழைத்தான்.

'சார் ஒரு நிமிஷம்..' என்றதும் தாஸ் நின்று பூக்கடைக்காரனை திரும்பி என்ன என்பதுபோல்  பார்த்தான்

'ஏதோ சித்தர் சமாதி-ன்னு ஃபோன்ல பேசிட்டிருந்தீங்களே... என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..?' என்றதும், தாஸ் அவனை சில விநாடிகள் உற்றுப் பார்த்து, யோசித்துவிட்டு தொடர்ந்தான்.

'அது ஒண்ணுமில்லப்பா, இந்த கோவில்ல சித்தர் ஒருத்தர் சமாதியடைஞ்சதா என் தாத்தா சொன்னாரு... அவரு சமாதி இங்க இருக்கான்னு பாக்க வந்தேன்.. பாத்தா ஒண்ணுமில்ல...'

'உங்க தாத்தாவுக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்..' என்று பீடிகை போட... தாஸ் அந்த பூக்கடைக்காரனிடம் ஏதோ விஷயமிருக்கிறது என்பதை ஊகித்தான்.

'தம்பி, அங்கே என் கார் நிக்குது... அதுக்குள்ள போய் பேசலாமா..?' என்று கேட்க... அவன் சற்று தயங்கி நின்று யோசித்துவிட்டு, பிறகு சரி என்று அருகிலிருக்கும் ஒரு பெண்ணிடம் கடையை ஒப்படைத்துவிட்டு, தாஸூடன் காரை நோக்கி நடந்தான்.

இரண்டு ஸ்ட்ராங் டீ வாங்கிக் கொண்டு, இருவரும் காருக்குள் அமர்ந்து கொண்டார்கள்
தாஸ் பேச்சை ஆரம்பித்தான்...

'நான் ஒரு எழுத்தாளன். இந்த கோவிலை அடிப்படையா வச்சி ஒரு கதை எழுதிட்டிருக்கேன்...'

'சரி சார்..'

'அந்த கதைக்காக, இந்த கோவிலைப் பத்தின சில குறிப்புகளை தேடும்போது, அதுல இந்த கோவில்ல பிரம்ம சித்தர்-னு ஒருவர் சமாதியடைஞ்சதா ஒரு தகவல் தெரிஞ்சுது..'

'சரி சார்..'

'ஆனா, உள்ளே குருக்கள்-கிட்ட கேட்டா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லன்னு சொல்றாங்க..'

'குருக்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல சார்... அவங்கள்லாம், சமீபத்துல வேறெடத்துல மாத்தலாகி வந்தவங்க...'

'அப்போ உனக்கு தெரியுமா..? நீ எத்தனை நாளா இங்க இருக்கே..?' என்று கேள்விகளை அடுக்க...

'நாங்க இந்த கோவிலுக்கு பரம்பரை பரம்பரையா புஷ்பகைங்கர்யம் செய்யறவங்க சார்... நாங்க பல்லவ ராஜா காலத்துலருந்து இங்கேதான் இருக்கோம். அவங்கதான் இந்த கோவிலை கட்டினாங்க...'

'அவ்வளவு நாளா இங்கே இருக்கீங்களா..? ரொம்ப நல்லது. உங்களுக்கு இங்க சித்தர் சமாதி ஏதாவது இருக்கான்னு தெரியுமா..?'

'இருக்குன்னு எங்கப்பா சொல்லி கேட்டிருக்கேன். அவரை கேட்டா விவரமா சொல்லுவாரு...' என்று கூற... தாஸ் கொஞ்சம் நம்பிக்கை வந்தவனாய்...

'உங்கப்பாவை பாக்க முடியுமா..?' என்று கேட்டான்.

'அப்பா இப்போ, கோவிலுக்குள்ளதான் இருக்காரு... நீங்க உள்ளே தேவாரம் பாடக்கேட்டதா சொன்னீங்களே..? அது எஙப்பாதான் பாடுறது... தினமும் கோவில்ல தேவாரம் பாடுறது அவரோட வழக்கம்...'

'ஓ... அவருதான் உங்கப்பாவா...! அவர்கிட்ட நான் கொஞ்ச பேசணுமே..!' என்று தாஸ் ஆர்வமாக கேட்க...

'இருங்க அழைச்சிட்டு வர்றேன்' என்று கூறி அந்த இளைஞன் காரிலிருந்து இறங்கி கோவிலுக்குள் நுழைந்து மறைந்தான். சற்று நேரத்தில் அந்த பெரியவருடன் காருக்கு அருகில் வந்து நின்றான்.

தாஸ் அந்த பெரியவரை பார்த்ததும், கையெடுத்து கும்பிட்டபடி...

'வணக்கம் சார்.. என் பேரு தசரதன்... உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். காருக்குள்ள ஏறுங்களேன் ப்ளீஸ்...?'

'மன்னிக்கனும் தம்பி... காருக்குள்ள வேண்டாம்... நாம வேணும்னா அந்த குளத்துக்கரையில உக்காந்து பேசுவோமே..' என்று அவர்கேட்க, தாஸ் மறுக்காலமல் புன்னகைத்தபடி காரிலிருந்து இறங்கினான். மூவரும் குளத்துக்கரையை சமீபித்து ஒரு நல்ல இடம்தேடி அமர்ந்தனர்.

அந்த பெரியவர், கோவிலைப் பற்றி கூறினார்...

'இந்த அயனாவரத்துக்கு ஒரு காலத்துல 'பிரம்மபுரி'ன்னு பேரு... இதோ இந்த குளத்துக்கு இப்போகூட பிரம்மதீர்த்தம்-னுதான் சொல்வாங்க... புராணக்கதைப்படி பிரம்மா முருகனோட தண்டனைக்கு ஆளானதால அதுக்கு பிராயசித்தம் தேட இங்க வந்து வழிப்பட்டதா சொல்லுவாங்க... பழைய கோவிலுன்னு சொல்றதுக்கு ஆதாரமா... உள்ளே இருக்கிற முருகர் சிலையை பல்லவர் காலத்து சிற்பம்-னு வல்லுனர்கள்லாம் வந்த பாத்து வியந்துட்டு போனாங்க...'

'ஐயா... இந்த கோவில்ல... பிரம்ம சித்தர்-னு ஒரு சித்தரோட சமாதியிருக்கிறதா எங்க தாத்தா சொன்னாரு... அது உண்மையா..?' என்று தாஸ் நேரடியாக விஷயத்துக்கு வந்தான். அந்த பெரியவர், அருகிலிருந்த தனது மகனை ஒருமுறை ஏறிட்டு பார்க்க...

அவன், 'அப்பா இவரு எழுத்தாளராம்ப்பா. நம்ம கோவிலைப் பத்தி கதையில எழுதப்போறாராம் அதான் விசாரிக்கிறாரு... தைரியமா சொல்லு...' என்றதும், அவர் மீண்டும் தாஸை பார்த்து...

'உண்மைதான் தம்பி... ஆனா, அவர் பிரம்ம சித்தர்-னு நீங்க சொல்லித்தான் தெரியும். ஆனா, இங்க ஒரு சித்தரோட உடம்பு கிடைச்ச கதையை எங்க முன்னோர்கள் வாய்வழியா சொல்லி வந்திருக்காங்க...'

'அது என்ன கதைங்க..?' என்றதும் அந்த பெரியவர், தனக்கு பின்புறம் தெரியும் அந்த கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபடி, தனக்கு தெரிந்த அந்த கதையை கூற ஆரம்பித்தார்...

'அது சோழ ராசா காலமாம்... அப்போ ஒரு தடவை, இந்த கோவில் நகைகளை ஒரு திருடன் திருடிக்கிட்டு இரவு நேரத்துல ஓடப்பாத்திருக்கான்... அவனை துரத்திட்டு வந்தவங்ககிட்டருந்து தப்பிக்க அப்போயிருந்த கோவில் கோபுரத்துல ஏறி உள்பக்கமா உச்சியில போய் ஒளிஞ்சி உக்காந்திட்டானாம். இதை எப்படியோ கண்டுபிடிச்சு, சிப்பாய்கள் அவனை பிடிக்கா கோபுரத்துக்குள்ள ஏறியிருக்காங்க... ஆனா, அவனை பிடிக்க போன இடத்துல... அதாவது கோபுர உச்சியில, உள்புறமா சுவரோட சுவரா ஒட்டினமாதிரி, ஒரு வயசான சித்தரோட உடம்பு உக்காந்த நிலையில கிடைச்சிருக்கு... அந்த உடம்புல நகமும், முடியும் அப்பவும் வளர்ந்திட்டு இருந்திருக்கு. உடம்புல சூடும் இருந்திருக்கு. இதைப் பாத்த சிப்பாய்கள் சோழராசா கிட்ட சொல்ல... அவரும் வந்து பாத்துட்டு என்ன செய்றதுன்னு தெரியாம குழம்பிட்டு இருந்தாராம். அப்போ அவரு கனவுல வந்த அந்த சித்தர்... தன்னோட உடம்பை இன்னொரு இடத்துல பத்திரமா வைக்கும்படி சொன்னாராம். ஆனா, அவரோட உடம்பு சுவரோட ரொம்பவும் ஒட்டியிருந்ததால, அந்த சித்தர் உடம்பை எடுக்க முடியாம தவிச்ச ராசா, அந்த கோபுரத்தை உடைச்சி அவர் உடம்பை தனியா எடுத்தாராம். ஆனா, இது எதுவுமே மக்களுக்கு தெரியாம இருக்கிறதுக்காக, கோபுரத்தை செப்பணிடுறோம்னு சொல்லி அவர் உடம்பை இன்னொரு இடத்துல மறைச்சி வச்சாராம்...' என்று அந்த பெரியவர் தனக்கு தெரிந்த உண்மைகளை கூறிமுடிக்க...தாஸ் ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்தான்.

'இது ஏதாவது கல்வெட்டுல இருக்காங்க..?'

'இல்லைங்க தம்பி... இதைப் பத்தின எந்த குறிப்பும் யாருக்கும் இதுவரைக்கும் கிடைக்கலை... இது உண்மையா பொய்யான்னு கூட எனக்கு தெரியாது... எங்கப்பா எனக்கு சொன்னாரு... நான் என் மவனுக்கு சொன்னேன்... இப்படி இது வெறும் வாய்வழியா வந்து கதை...' என்று கூற... தாஸ் அந்த தந்தை-மகன் இருவரையும் நன்றியுடன் பார்த்தான். கல்வெட்டுகளும், ஓலைகளும், சாசனங்களும் மட்டும் வரலாறுகளல்ல... இதுபோன்ற தலைமுறை தகவல்களும் நமக்கு வரலாற்று களஞ்சியம்தான் என்று அவனுக்குள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது...

'ஐயா... அந்த சித்தரோட உடம்பை அந்த ராஜா எங்கே ஒளிச்சி வச்சாருன்னு தெரியுமா..?' என்று தாஸ் கேட்டுவிட்டு, அந்த பெரியவர் கொடுக்கப் போகும் பதிலுக்காக ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

(தொடரும்...)


Signature

Monday, September 13, 2010

"கேணிவனம்" - பாகம் 13 - [தொடர்கதை]இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------

பாகம் - 13

தாத்தா, தாஸ் தன்னிடம் கேட்ட அந்த சித்தரைப் பற்றி தொடர்ந்தார்...

'அந்த சித்தரோட பேரு என்னன்னு இன்னும் சரியா தெரியலப்பா... ஆனா, நாம தேடின மாதிரி, பிரம்மா கடவுளை உபாசகம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த ஒரு சித்தரோட சமாதி இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கு..' என்று கையில் ஒரு புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து கட்டிபிடித்தபடி சொன்னார்.

'எப்படி தெரிஞ்சுது தாத்தா..?'

'18ஆம் நூற்றாண்டுல, பூலித்தேவ ராசா காலத்து ஓலைச்சுவடிகள்ல சில சுவடிகள் சித்தர்களோட சமாதிகளை பத்தி சொல்லுது... அந்த சுவடிகளை அடிப்படையா வச்சி எழுதப்பட்ட  'சித்த சமாதிகள்'ங்கிற இந்த புத்தகத்துல, நாம தேடிக்கிட்டிருக்கிற சித்தரை பத்தின ஒரு குறிப்பும் கிடைச்சிருக்கு...' என்று தன் கையிலிருந்த, பழைய பைண்டிங் உடைந்த புத்தகத்தில் ஒரு பக்கத்தை தாஸிடம் காட்டினார்.

அவர் காட்டிய பக்கத்தில் கீழ்காணும் பாடல் இருந்தது...

வங்கமண் டலக்கரையிலே
முருக்குவனத்தி லொருதடாக முண்டு
அதனருகேய ழுகிடாமண் பிடியில்
பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்
பிரம்ம சித்தனயனாண்ட
புரத்தே


'என்ன தாத்தா இது... இதுல பிரம்ம சித்தர்-னு போட்டிருக்கு... இதுதான் அவரோட பேரா இருக்குமோ..?'

'இருக்கலாம்... உனக்கு இந்த பாட்டுல சொல்லியிருக்கிற இடம் என்னன்னு தெரியுதா..?'

'வங்கமண்டலக்கரை-னா..? வங்காள விரிகுடா கரைதானே..?'

'ஆமா... வங்களா விரிகுடாவில - தொண்டை மண்டலப் பகுதி.. அதைத்தான், வங்கமண்டலக்கரை-னு சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன்...'

'முருக்குவனத்தில் ஒரு தடாகம் உண்டு - அது எங்கேயிருக்குன்னு எப்படி தாத்தா கண்டுபிடிக்கிறது..?' என்று தாஸ் மிகவும் குழம்பவே, தாத்தா அவனுக்கு உதவும் விதத்தில் தனக்கு தெரிந்த தகவலை அவனுடன் பரிமாறிக் கொண்டார்...

'எனக்கு தெரிஞ்சு... முருக்கு மரத்துக்கு, பலாச மரம், புரசை மரம் அப்படின்னும் பெயரிருக்கு...'

'அப்படின்னா பலாசவனம்...  புரசைவனம்... புரசைவனம்..' என்று மீண்டும் மீண்டும் கூறவே தாஸுக்குள் ஒரு இடத்தை பற்றி பொறி தட்டியது...

'தாத்தா, எனக்கு ஒரு இடம் தோணுது.. ஆனா, அது எந்தளவுக்கு சாத்தியம்னுதான் தெரியல...'

'என்ன இடம்னு சொல்லுப்பா... இந்த பாட்டுல சொல்லியிருக்கிற குறிப்புக்கு பொறுந்துதான்னு பாப்போம்..'

'சொல்றேன்... அதுக்கு முன்னாடி ஒரு சந்தேகம்..! தொண்டை மண்டலத்துல என்னன்ன ஊர் வருது சொல்லுங்க.?'

'கரெக்டா எது எதுன்னு தெரியல... பொதுவா சொல்லனும்னா, காஞ்சிபுரம், ஆற்காடு, சென்னை... இப்படி சில இடங்கள் வருது..'

'ஆங்... சென்னை வருதுல்ல... அப்ப நான் சொல்ற இடமா கூட இருக்க வாய்ப்பிருக்கு தாத்தா..?'

'என்ன இடம்னு சொன்னாதானேப்பா தெரியும்..' என்று தாத்தா ஆர்வம் தாளாமல் கேட்க...

'சென்னையில புரசைவாக்கம்-னு ஒரு இடமிருக்கு... ஆனா பயங்கர பிஸி கமர்ஷியல் ஏரியா... ஒருவேளை... இந்த இடத்தைத்தான் இந்த பாட்டுல முருக்குவனம்-னு சொல்லியிருப்பாங்களோ..?'

'ஹா... ஹா...' என்று மெலிதாக சிரித்தபடி தாத்தா தொடர்ந்தார்

'நல்ல யூகம்தான்..! இருக்கலாம்..! சென்னை, இப்ப வேணும்னா, ஒரு ஹைடெக் ஊரா இருக்கலாம், ஆனா ஒரு காலத்துல அதுவும் ஒரு புனிதமான காடுதானே..! நீ சொல்ற மாதிரியே இருந்தாலும், பிரம்ம சித்தன்... அயனாண்டபுரத்தே-னு இன்னும் சில குறிப்புகளும் இந்த பாட்டுல இருக்கே..? இந்த குறிப்பு எப்படி பொருந்தும்...?' என்று தாத்தா மீண்டும் கேள்வியெழுப்ப... தாஸ் எங்கேயோ பார்த்துக் கொண்டு ஏதோ மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டிருந்தான்... திடீரென்று ஏதோ தோன்றியவன்... 'யெஸ்...' என்று குதூகலத்துடன் எழுந்து...

'தாத்தா, கண்டுபிடிச்சுட்டேன்...' என்று கூற

'என்ன..?' என்று தாத்தா ஆர்வமாக அவனை பார்த்தபடி கேட்டார்

'தாத்தா... அயனாண்டபுரத்தே-னு இன்னொரு இடத்தையும் சொல்லியிருக்காங்கள்ல...'

'ஆமா..'

'அது... அயன் ஆண்ட புரம்.. அதாவது... அயன்புரம்... இப்போ சென்னையில இந்த ஏரியாவை அயனாவரம்-னு சொல்லுவாங்க... இந்த இடம் புரசைவாக்கத்துக்கு பக்கத்துலதான் இருக்கு... இப்போ பொருந்துதுல்ல..?'

'என்னமோ... எனக்கு சென்னைய அவ்வளவா தெரியாது... நீ சொல்றது இந்த குறிப்புக்கு கிட்டதட்ட ஒத்துப்போகுது... நீ எதுக்கும் அங்கே போய் கேட்டுப்பாரு...'

'என்னன்னு தாத்தா சொல்லி கேக்கிறது..?'

'அதான் இந்த பாட்டுல நடு இரண்டு வரியில, அழுகிடாமண்பிடியில் பரசுரா மனீஸ்வர னடிகிடக்கிறான்-னு தெளிவா சொல்லியிருக்கே... அதாவது... பரசுராம ஈசுவர அடியில கிடக்கிறான். இந்த பேருல ஏதாவது கோவில் இருந்ததுதா... இல்ல இருக்குதா...ன்னு விசாரிச்சேன்னா... தெரியப் போகுது..' என்று தாத்தா கூற...

'ஆமா தாத்தா, அப்போ, நான் நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமாவே சென்னைக்கு கிளம்புறேன்...' என்று கூறியதும், தாத்தாவின் முகம் மிகவும் வாடிப்போகிறது...

அவர் சுதாரித்துக் கொண்டு பெருமூச்சுவிட்டபடி, 'சரிப்பா..! உன் சௌகரியப்படியே செய். நான் வேற நேரம் காலம் தெரியாம உன்னை வந்து பாதி ராத்திரியில வந்து எழுப்பிட்டேன்.' என்று வருத்தபட்டார்.

'இதுல என்ன தாத்தா இருக்கு... ஒரு பயனுள்ள தகவல் கிடைச்சுதே இது பெரிய விஷயமில்லியா..?'

'சரிப்பா, அதான் கிடைச்சிடுச்சே... நீ தூங்கு... நீ நாளைக்கும் பிரயாணப்படவேண்டியவன்' என்று தான் கையில் கொண்டு வந்திருந்த புத்தகத்தை கட்டிபிடித்தபடி எடுத்துக் கொண்டு, தாத்தா தாஸின் அறையிலிருந்து வெளியேறினார். அவரையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ் அவர் சென்றதும், கதவை தாழிட்டுக் கொண்டு, மீண்டும் வந்து படுக்கையில் பொத்தென்று விழுந்தான். விரைவில் உறங்கிப்போனான்.

-----------------------------------------------------------------------------------

காலை 7 மணி...

சென்னை போலீஸ் ஸ்டேஷனில், முன்னாள் இரவு அரெஸ்ட் செய்து, ஒரு அறையில் அமர்த்தப்பட்டிருந்த சந்தோஷ்... சரியாக தூங்காததினால் விழிகள் சிவந்து காணப்பட்டான்.

சந்தோஷ்-ற்கு சிறுவயதுமுதல் போலீஸ் என்றாலே மிகவும் பயம். இது இயல்பான பயம்தான்,  ஆனால், இதுவரை அவன் போலீஸ் ஸ்டேஷனில் இப்படி இரவை கழித்ததில்லை... இதுதான் முதல்முறை... அந்த சூழல் அவன் பயந்ததுபோல், எதுவும் இல்லைதான். ஆனாலும், அவனுக்குள் ஒருவித பயம் ஆக்கிரமித்திருந்ததை உணர்ந்தான்.

ஒரு கான்ஸ்டபிள் அவனுக்கு அருகில் இருந்த மேஜையில், டீ கொண்டு வந்து அவனுக்கு முன்னால் வைத்தார்...

அதை எடுத்து பருக ஆரம்பித்தான். அந்த சூழலுக்கு மிகவும் இதமாக இருந்தது... டீ, அளவு மிகவும் கம்மியாக இருந்ததை எண்ணி உள்ளுக்குள் வருந்தினான். பசித்தது... ஆனால் யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் விழித்திருந்தான்.

தயங்கியபடி, அவனுக்கு டீ கொடுத்த கான்ஸ்டபிளிடம் 'சார்..?' என்றான்...

'என்னய்யா..?' என்று அவர் கடுப்பாக கேட்க...

'இன்ஸ்பெக்டர் எப்போ சார் வருவாரு...'

'இப்போதானய்யா 7 மணி ஆகுது...வருவாரு... எதுக்கு அவர் அவரை கேக்குறே..?'

'நான் நிரபராதி சார்.. அவர்கிட்ட சொல்லிட்டு கிளம்பிடுறேன் சார்...'

'அதெப்படிப்பா கிளம்ப முடியும்... அவன் உன் பேர்ல கம்ப்ளைண்ட் எழுதி கொடுத்திருக்கானே..?'

'யாரு சார், குணாவா...'

'பேரெல்லாம் தெரியாது.. நேத்திக்கு உன்னிய அரெஸ்ட் பண்ண சொன்னானே அவன்தான்...'

'என்னன்னு சார் கம்ப்ளைண்ட் எழுதியிருக்கான்...?'

'அதெல்லாம் உனக்கெதுக்குய்யா..?'

'சார்... ப்ளீஸ்... சொல்லுங்க சார்..' என்று கேட்க அவர் கடுப்பாக முன்னாள் இரவு சந்தோஷ் மீது குணா எழுதிக் கொடுத்த புகார் கடித்தத்தை எடுத்து அவனிடமே கொடுத்தார்...

'நீயே படிச்சிக்க...' என்று வீசி எறிய...

அதை எடுத்து சந்தோஷ் ஆவலாய் படித்தான்... கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. அதன் தமிழாக்கம்

'வணக்கம் ஐயா,

நான் குணசேகர், வயது 29,  நெ.14, G2, சீதாமேத்தா தெரு, தி-நகர், சென்னை-17 என்ற முகவரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கிறேன். நான் கே.ஸி.ஆர். இன்ஃபோடெக் என்ற பன்னாட்டு கணிணி நிறுவனத்தில், மென்பொருள் பரிசோதகனாக பணியாற்றி வருகிறேன்.

எனது வசீகரமான தோற்றத்தினாலும், சம்பளம் அதிகம் பெறுபவன் என்ற காரணத்தினாலும், அவ்வப்போது என்னை சில பெண்கள் காதலிப்பதாக சொல்வதுண்டு, அப்படி சில நாட்களுக்கு முன் லிஷா என்ற ஒரு பெண் என்னை காதலிப்பதாக என்னிடம் கூறினாள். நான் சமுதாயத்தில், மிகுந்த பொறுப்புடன் வாழ்பவன் என்பதாலும், பிறருக்கு தவறான உதாரணமாய் போய்விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தினாலும், அவளது காதலை நான் ஏற்றுக்கொள்ளவில்லை... ஆனால், அவள் என்னை வீழ்த்துவதற்கு, சில கீழ்த்தரமான விஷயங்களை கையாண்டாள். அப்போதும, நான் எனது கொள்கையிலிருந்து தவறாமல் இருந்ததால், நாளடைவில் அவள் என்னை அணுகுவதை நிறுத்திவிட்டாள்.

இதற்குப்பின் ஒரு நாள், சந்தோஷ் என்ற ஒரு வாலிபன் எனக்கு அவ்வப்போது என் கைப்பேசியில் அழைத்து, எனக்கு மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தான். அவன் லிஷாவின் தற்போதைய காதலன் என்று எனக்கு பின்னர் தெரியவந்தது. இந்த சந்தோஷ், என்னையும் லிஷாவையும் இணைத்து சந்தேகப்பட்டுக் கொண்டு அவ்வப்போது என்னிடம் அவளைப் பற்றி அந்தரங்கமாக விசாரிப்பான். நான் எதனையோ முறை அவனுக்கு உண்மையை உணர்த்தியும், என்னை தொந்தரவு செய்ய வேண்டம் என்று எச்சரிக்கை விடுத்தும், அவன் இச்செயலை தொடர்ந்தவண்ணம் இருந்தான்.

நேற்று இரவு, என் வீட்டிற்குள் வந்து, நானும் லிஷாவும் சேர்ந்து வாழ்ந்ததை நிரூபிக்கும் ஆதாரம் என் வீட்டில் ஏதாவது கிடைக்குமா என்று தேடி என்னை மிரட்டி அடிக்கவும் செய்தான். இதனால் நான் மனதளவிலும், உடலளவிலும் பெருத்த வேதனைக்குட்பட்டவாயிருக்கிறேன். இதனால், அவனை காவல்துறை கைது செய்து அவன்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

இவண்
குணசேகரன்...' என்று அக்கடிதம் முடிந்தது.

இதைப் படித்த சந்தோஷ் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தான்...

------------------------------------------------

கந்தன் கொள்ளை கிராமம்... தாத்தா வீட்டில்....

பகல் 11 மணிக்கு, தாஸும், லிஷாவும் காரில் ஏறிக்கொண்டு கிளம்ப ஆயத்தமாகயிருந்தனர்...

அப்போது, வீட்டு கேட்-ஐ திறந்துக் கொண்டு சுசீலாம்மா கையில் ஒரு நாட்டுக்கோழியை பிடித்தபடி உள்ளே நுழைந்தாள். காரில் தாஸும் லிஷாவும் அமர்ந்திருப்பதை பார்த்ததும்...

'என்ன தம்பி, நீங்க அசைவம் கேட்டீங்கன்னு, கோழிய கொண்டுவந்தேன்... சாப்பிட்டுட்டு அப்புறமா கிளம்பவேண்டியதுதானே..?' என்று உரிமையாக கேட்க...

'இல்ல சுசீலாம்மா... இன்னிக்கி நீங்க கொண்டு வந்த கோழிக்கு ஆயுசு கெட்டி... நான் அர்ஜெண்ட்டா சென்னைக்கு போயாகணும்... இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுக்கிறேன்...' என்று கூறிவிட்டு... அருகில் நின்றிருந்த தாத்தாவிடம் திரும்பி...

'தாத்தா... நான் கண்டிப்பா சீக்கிரம் திரும்பி வந்து உங்க கூட தங்குறேன்... ப்ராமிஸ்... வருத்தபடாதீங்க ப்ளீஸ்...' என்று கெஞ்ச... அவர் தன் முகத்தில் சோகத்தை மறைத்துக் கொண்டு, சிரித்தபடி...

'எனக்கென்னப்பா கவலை... நான் நல்லாத்தான் இருக்கேன்... நீ சந்தோஷமா கிளம்பு... ஏதாச்சும் சந்தேகம்னா ஃபோன் பண்ணு... கிழவனை மறந்துடாதே...'

'மறப்பேனா..' என்று கூறியபடி அங்கிருந்து காரை கிளப்பினான்.

லிஷாவும் அனைவருக்கும் டாட்டா காட்டியபடி விடைபெற்றாள்.

சற்று நேரத்தில் அந்த இடத்தில், கார் கிளம்பிய புழுதியடங்கி, மீண்டும் அமைதி வந்து குடியேறியது...

ஹைவேயில் காரில்...

'என்ன தாஸ்... தாத்தாவும் பேரனுமா சேர்ந்து, நைட் பயங்கர ரிசர்ச் பண்ணியிருக்கீங்க போல...' என்று கேட்க...

'அதெல்லாம் ஒண்ணுமில்ல... அந்த சித்தர் சமாதி எங்கேயிருக்குன்னு தெரிஞ்சது அவ்ளோதான்... அவர் அந்த பழைய புக்-ஐ எடுத்துட்டு வந்து காட்டினதால எல்லாம் கிடைச்சுது..'

'இருந்தாலும், நீங்கதான் அயனாவரம்-னு கரெக்டா கெஸ் பண்ணீங்கன்னு உங்க தாத்தா சொன்னாரு..?'

'கெஸ் பண்ணது நானாயிருந்தாலும், அதுக்கு கரெக்டா முருக்குவனம்-னா புரசைக்காடுன்னு க்ளூவைச் சொன்னது தாத்தாதானே..?'

'க்ளூ பெருசா இல்ல சொல்யூஷன் பெருசா..?' என்று லிஷா அவனை மடக்க முயல...

'க்ளூதான் பெருசு... இப்ப உதாரணத்துக்கு... நீ கூகிள்ல தேட வேண்டிய விஷயத்துக்கு கரெக்டான கீ-வேர்டு (குறிச்சொல்) கொடுத்தாத்தானே அது உனக்கு ரிசல்ட் கரெக்டா கொடுக்கும்....'

'அதுசரி, உங்க தாத்தாவை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே...' என்று தாஸை பார்த்தபடி சொல்ல

'அவருதாம்மா எனக்கெல்லாம்...'

'உங்களுக்கு உங்க தாத்தா பேரையே வச்சது கரெக்டா இருக்கு... அவரை மாதிரியேதான் நீங்களும்...' என்று சிரித்துக் கொள்ள

'தேங்க்யூ..' என்று தாஸ் அவள் கருத்தை பெருமையாக ஏற்றுக்கொள்கிறான்.

'ஆமா... அந்த சமாதி எந்த கோவில்ல இருக்குன்னு சொன்னீங்க..?'

'பரசுராம ஈசுவரன் கோவில்...! ப்ச் பிரச்சினை என்னன்னா... அந்த கோவில் இப்ப இருக்கா... இல்லை அதுக்கு மேல, ஷாப்பிங் காம்பளெக்ஸோ, அபார்ட்மெண்ட்டோ, இல்லை தியேட்டரோ கட்டிட்டாங்களான்னு தெரியல...' என்று கவலையாக ரோட்டைப் பார்த்து வண்டி ஓட்டியிருக்க...

'இதுக்கு ஏன் கவலைப்படணும், இப்பவே செக் பண்ணி பாத்துட்டா போச்சு..' என்று லிஷா தனது செல்ஃபோனை எடுத்தாள்

'எப்படி..?' என்று தாஸ் ஆர்வமாய் கேட்க

'என் ஃபோன்ல GPRS இருக்கு... Google Map-ல செக் பண்ணி பாத்தா தெரிஞ்சிடப் போகுது..'  என்று கூறியபடி, தனது மொபைல் ஃபோனை எடுத்து, அதில் கூகிள் வலைப்பக்கத்தை திறந்து, மேப்ஸ் என்ற பாகத்தை க்ளிக் செய்து, அதில் 'பரசுராம ஈசுவர கோவில் - அயன்புரம்' என்று தட்டச்சினாள்.

அதில்...

(தொடரும்...)Signature

Thursday, September 09, 2010

"கேணிவனம்" - பாகம் 12 - [தொடர்கதை]இக்கதையின் இதர பாகங்களை படிக்க

பாகம் - 01          பாகம் - 02          பாகம் - 03          பாகம் - 04          பாகம் - 05
--------------------------------------------------------------------
பாகம் - 12

ப்ரொஃபெஸர் கணேஷ்ராம், ஃபோனில் தாஸிடம், தான் ஓவியத்தில் கண்டுபிடித்த மூன்றாவது நபர் பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

'அந்த மூணாவது நபர், அரசருக்கு பக்கத்துல, உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு... ஒரு அரசன் நின்னுட்டிருக்கும்போது, பக்கத்துல உக்கார்ற தகுதி ரொம்ப சிலருக்குத்தான் இருக்கும்... அந்த வகையில பாக்கும்போது, ஒண்ணு யாராவது ஒரு பெரிய புலவரா இருக்கலாம்... இல்லன்னா யாராவது ஒரு முனிவராவோ இல்லை சித்தராவோ இருக்கலாம்..'

'நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?'

'எனக்கு தெரிஞ்சு அது புலவரா இருக்க வாய்ப்பில்லை..!'

'ஏன்..?'

'ஏன்னா, புலவர்னா, சரியான தோரணையில நேரா உக்காந்துட்டிருந்திருக்கனும். ஆனா, இந்த உருவம், ஒரு காலை மடக்கி இன்னொரு காலை தரையில வச்சமாதிரி, கிட்டத்தட்ட ஒரு அரை சப்பணம் போட்டு உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு... அதனால, இது முனிவரோ இல்லை சித்தரோவாத்தான் இருக்கணும்..'

'நல்ல கெஸ்ஸிங் சார்... எனக்கும் அது சித்தரா இருக்கணும்னுதான் எதிர்பார்க்குறேன்..! சார்? இந்த ஓவியம் எந்த நூற்றாண்டுதுன்னு தெரிய வந்துதா..?'

'ஆமாய்யா..! நீ என்கிட்ட ஒரிஜினல் ஓவியத்தையா கொடுத்தே..? வெறும் நகல் எடுத்து அனுப்பிட்டு எந்த நூற்றாண்டுன்னு கண்டுபிடின்னா... நான் நகலை வச்சிக்கிட்டு, கார்பன் டேட்டிங்-ஆ பண்ண முடியும்..? இதுவரைக்கு தெரிஞ்சதே பெருசுய்யா..!'

'அய்யோ சார் கோச்சுகாதீங்க... ஜஸ்ட் ஏதாச்சும் கெஸ் பண்ணீங்களான்னுதான் கேட்டேன்..'

'அநேகமா இது சோழர் காலத்து ஓவியமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா ஓவியத்துல தஞ்சை ஓவியங்களுக்கான டச் எதுவும் இல்ல... அதே சமயம், பாறையில வரைஞ்சி, கோவில் ரூஃப்ல ஏத்தியிருக்காங்கன்னு வேற நீ ஃபோட்டோ எடுத்துட்டு வந்திருக்கே....ரொம்பவு குழப்பமா இருக்குய்யா..! உள்ளே சில இடங்கள்ல 'நாடி, விநாடி, தற்பரை'ன்னு கால அளகுகள் பத்தி சில ஹிண்ட்ஸ் வேற தெரியுது..! எழுத்துக்கள் பிராமியோ, வட்டெழுத்தோன்னா கண்டிப்பா 7ஆம் நூற்றாண்டுக்கு முன்னாடின்னு சொல்லலாம்... ஆனா தெளிதமிழ்ல எழுத்துக்கள் இருக்கிறதால, கண்டிப்பா சோழர்காலத்துதோ இல்ல அதுக்கப்புறமாவோ வரைஞ்சதா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா, எதுவும் கன்ஃபர்மா சொல்ல முடியல...'

'சரி சார்.. தகவல்களை பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி..!'

'நன்றியெல்லாம் இருக்கட்டும்... இதையெல்லாம் வச்சிக்கிட்டு என்ன செஞ்சிக்கிட்டிருக்கேன்னு சொன்னேன்னா இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்ல முடியும்...'

'அது... வந்து சார்... ஒரு கதை எழுதுறதுக்காக...!' என்று தாஸ் கூறிமுடிக்கும்முன்பே ப்ரொஃபெஸர் மறுத்தபடி...

'கதை எழுதுறதுக்காகன்னு சொல்லி என் காதுல பூவை சுத்தாத... நான் நம்பமாட்டேன்... நீ என்னமோ பண்ணிட்டிருக்கிறே... இதுல என்னென்னமோ விஷயம் அடங்கியிருக்குன்னு தெரியுது... என்னன்னுதான் சொல்லேன்... கேட்டுக்குறேன்..'

'சார்... நான் கூடிய சீக்கிரம் உங்ககிட்ட சொல்றேனே..! அதுவரைக்கும் எதுவும் கேக்காதீங்க சார் ப்ளீஸ்..'

'சொல்லமாட்டியே நீ..! சரி... சொல்லும்போது சொல்லு... கேட்டுக்குறேன்... வச்சிடுறேன்யா..!' என்று சற்று அலுப்பாகவே ப்ரொஃபெஸர் ஃபோனை வைக்கிறார்...

தாஸ், உடனே தாத்தாவிடம் திரும்பி...

'தாத்தா... இந்த ஓவியத்துல, சித்தர் ஒருத்தர் இருக்கிறதாவும் தெரிய வந்திருக்கு... அதுவும், அரசனுக்கு பக்கத்துல உக்காந்துட்டு இருக்கிற மாதிரியாம்..' என்று கூறியபடி தனது லேப்டாப்பிலிருக்கும் அந்த ஓவியத்தில், ப்ரொஃபெஸர் சொன்ன அந்த சிதைந்த பகுதியை சூம் (ZOOM) செய்து காட்டுகிறான். அதில் ஒரு பாதம் ஆசனத்திலும், இன்னொரு பாதம் தரையில் வைத்தபடியும், மிகவும் மங்கலாக இருப்பது தெரிகிறது. தாத்தா அந்த ஓவியத்தை மேலும் உற்று நோக்குகிறார்.

லிஷாவும் ஓவியத்தில்  அந்த பகுதியை உற்றுப் பார்த்தபடி, 'தாஸ், அப்படின்னா, ஒரு சித்தரோட சொல்முறைப்படி, ஒரு அரசன், தன்னோட ஆளுங்களை வச்சி இந்த சாங்கியத்தை இந்த ஓவியத்துல நடத்திட்டிருக்கான்... இல்லையா..?'

'ஆமா லிஷா..?'

'ஒரு வழியா இப்பத்தான் இந்த ஓவியத்தை பத்தி மொத்த விஷயங்களும் தெரிய வந்திருக்குன்னு நினைக்குறேன்..' என்று லிஷா சந்தோஷப்பட

'ஆனா இன்னும் அந்த சித்தர் யாருன்னு தெரிய வரலியே லிஷா..?' என்று தாஸ் வருத்தப்பட்டான்.

தாத்தா இருவரையும் பார்த்தபடி, 'இந்த சித்தர் யாருன்னு கண்டுபிடிக்க இன்னொரு சுலபமான ஒரு வழியிருக்கு..' என்று கூற...

'என்ன வழி தாத்தா' என்று தாஸ் அவரை ஆர்வமாக பார்த்தபடி கேட்டான்.

'சித்தர்கள்ல பெரும்பாலானவங்க, சிவபெருமானை கும்பிடுறவங்கதான் இருக்காங்க... சில பேர் முருகப்பெருமானை கும்பிடுறவங்க... இன்னும் சில பேர் பெருமாளையும் கும்பிடுறவங்க... ஆனா... நாம தேடிட்டிருக்கிற சித்தர்... பிரம்மாவை கும்பிட்டவருன்னு தோணுது...' என்று தாத்தா கூறவும், தாஸுக்கும் விஷயம் புரிகிறது...

'அட ஆமா...? இந்த ஓவியத்துலயும், பிரம்மாவை நடுவுல வச்சிதானே சுத்தி வழிபடுறாங்க... இந்த சாங்கியத்தை வழிநடத்துறவருன்னா இந்த சித்தரும் பிரம்மாவை கும்பிடுறவராத்தானே இருக்கணும்...' என்று கூற, தாத்தா தொடர்கிறார்...

'ஆமா... பிரம்மா கடவுளுக்கு உலகத்துலியே கோவில் விரல் விட்டு எண்ணுற அளவுக்குத்தான் இருக்கு.. அதே மாதிரி, அவரை கும்பிட்ட சித்தரும் ரொம்ப சிலர்தான் இருப்பாங்க... இந்த வகையில ஃபில்டர் பண்ணி தேடுனா... அந்த சித்தர் யாருன்னு ஈஸியா தெரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன்.'

'எப்படி தாத்தா கண்டுபிடிக்கிறது..?' என்று தாஸ் தயக்கமாய் கேட்க...

தாத்த எழுந்து சென்று அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறார்... வெளியே நிலா வெளிச்சத்தில் வயல்வெளிகள் அமைதியாக தெரிகிறது...

அவர் திரும்பி லிஷாவையும், தாஸையும் மாறி மாறி பார்க்கிறார்...

'நீ அவரை தேடவேணாம் தாஸ்... அவர்தான் அந்த காட்டுக்கோவில் மூலமா உன்னை தேடி கண்டெடுத்திருக்காரு... அந்த சித்தரே தன்னை அடையாளம் காட்டிக்குவாரு... நீங்க ரெண்டு பேரும் பயணக்களைப்புல இருப்பீங்க... ரொம்பவும் மண்டையப் போட்டு குழப்பிக்காம போய் தூங்குங்க... நான் என்னால முடிஞ்சளவுக்கு அந்த சித்தரை பத்தி எங்கிட்ட இருக்கிற புத்தகங்கள்ல தேடிப்பாக்குறேன்... எதுவாயிருந்தாலும் விடிஞ்சதும் பேசிக்குவோம்' என்று அவர் நம்பிகைக்கையாய் கூறுவதை தொடர்ந்து இருவரும் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

சிறிது நேரத்தில், தாஸ், பால்கணியில் நின்றபடி, ஒரு சிகரெட்டை பற்ற வைக்கிறான்.

லிஷா நைட் ட்ரெஸ்ஸில் அங்குவந்து அவனுக்கருகில் நிற்கிறாள்.

'என்ன தாஸ், உங்க தாத்தா... நீங்க சிகரெட் பிடிக்கிறதை பாத்து திட்டமாட்டாரா..?'

'சே! சே! அவரு ஜெண்டில்மேன்..! தெரிஞ்ச மாதிரி காட்டிக்கமாட்டாரு..'

'நீங்களும்தான்..! உங்க தாத்தா முன்னாடி ஒரு குழந்தை மாதிரி விஷயங்களை கேட்டுக்குறீங்க... தெரிஞ்சாலும், தெரியாதமாதிரி அவரையே விஷயங்களை சொல்லவிட்டு அழகுபாக்குறீங்க..?'

'ஹாஹா... எனக்கு அவர் சொல்லி கொடுத்து, விஷயங்களை தெரிஞ்சிக்கிறது பிடிச்சிருக்கு... சின்ன வயசுலருந்து என்னை பக்குவமா நடந்துக்க சொல்லிக்கொடுத்தது அவருதான்... அவர் முன்னாடி எனக்கு இது தெரியும், அது தெரியும்னு என்னால சொல்லிக்கமுடியலை...'

'ஹ்ம்ம்... Thats so nice of you...' என்று கூற, அவன் சிரித்தபடி புகைவிடுகிறான். லிஷா மீண்டும் தொடர்கிறாள்...

'தாஸ், மறுபடியும் அந்த காட்டுக்கோவிலுக்கு, நாம எப்போ போவப்போறோம்..?'

'கூடிய சீக்கிரம் கிளம்பியாகணும்..! ஏன் கேக்கறே..?'

'இல்ல... நம்மகிட்டதான் போதுமான தகவல் இருக்கே..! நாம ஏன் இன்னும் லேட் பண்ணிட்டிருக்கோம்னு கேட்டேன்..!'

'இல்ல லிஷா... போன தடவை அங்க போனப்போ, நான் எந்த ஒரு ப்ரிப்பேரேஷனும் இல்லாம போயிட்டேன். இந்தவாட்டியும் அப்படி போயிட்டா நல்லாயிருக்காது... அதான், முடிஞ்சவரைக்கும், தகவல்களை திரட்டிட்டு போலாம்னு பாக்குறேன்...'

'அடுத்த தடவை நீங்க அந்த கேணிவனத்துக்கு போகும்போது, என்னையும் சந்தோஷையும் கூட்டிக்கிட்டு போவீங்களா..?' என்று கேட்க

'இதென்ன கேள்வி லிஷா... கண்டிப்பா நாம மூணுபேரும்தான் போறோம்... இன்னொரு முறையும் குணா மாதிரி ஒரு ஆளோட போய், தனியா மாட்டிக்கிற ஐடியா எனக்கில்ல..!' என்று அவனே மெலிதாக சிரித்தபடி சிகரெட்டின் கடைசி மூச்சை இழுத்து புகைவிட்டபடி... 'குட் நைட் லிஷா...'  என்று சிகரெட்டை அணைத்துவிட்டு அங்கிருந்து நகர...

'குட்நைட் தாஸ்..' என்று அவனை வழியனுப்பிவிட்டு, அந்த பால்கணியில் லிஷா இப்போது தனியாக நின்றிருந்தாள்...

அவளுக்கு சந்தோஷின் நினைவு வருகிறது. அவன் குணாவைப் பற்றி விசாரித்துவிட்டு, இரவு ஃபோன் செய்வதாக கூறியும், இன்னும் அவனிடமிருந்து எந்த ஃபோன்காலும் வராதது குறித்து கவலை கொள்கிறாள்.

---------------------------------

அதே நேரம்

குணா அவனது அறைக்குள் மேலே சுழலும் ஃபேனை பார்த்தபடி, ஒரு பீர்பாட்டிலை கையில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.

டிவியில், கார்டூன் ஓடிக்கொண்டிருந்தது...

அவன் மனதிற்குள் அன்று ஏதோ சாதித்து முடித்தது போல் உணர்ந்துக்கொண்டிருந்தான்.

கார்டூனில் வரும் சின்ன சின்ன நகைச்சுவைக்கும் அதீதமாக சிரித்தபடி பீர் குடித்துக்கொண்டிருந்தான்.

பாட்டிலில் பீர் காலியாகிவிடவே... எழுந்து சென்று ஃப்ரிட்ஜை திறந்து இன்னொரு பாட்டில் பீரை எடுத்து ஃப்ரிட்ஜை மூட... ஃப்ரிட்ஜ் கதவுக்கு அந்தபக்கம் சந்தோஷ் நின்றிருந்தான்.

'என்ன குணா... எப்படியிருக்கே..?' என்றவன் கேட்க... அவனை சற்றும் எதிர்பார்க்காத குணா சத்தம் போட ஆரம்பித்தான்...

'ஏய்... ஏய்... நீ எப்படிடா இங்க வந்தே..? போடா வெளியே..?' என்று நிதானமிழந்து சத்தம் போட்டான்...

'போயிடுறேன் குணா... ஆனா, நீ இன்னிக்கு எங்க போயிருந்தேன்னு மட்டும் சொல்லிடு... அதுக்கப்புறம் எனக்கு இங்க என்ன வேலை..?'

'டேய்.. நான் ஏண்டா உங்கிட்ட சொல்லணும்... என் இஷ்டம் நான் எங்கே வேணா போவேன்... எங்கேவேணாம் வருவேன்... அதைக்கேக்க நீ யாருடா..?' என்று அரைபோதையில் சத்தம் போட்டான்.

'குணா... நீ ஏதோ தப்பு பண்றே... அந்த கேணிவனத்தை பத்தி எங்கே போய் சொல்லியிருக்கேன்னு சொல்லு...?'

'ஆங்.. B.B.C.ல சொல்லியிருக்கேன். நாளைக்கு நியூஸ்ல வரும் போய் பாத்துக்கோ..' என்று ஏளனம் செய்ய... சந்தோஷ் பொறுத்துக்கொள்ள முடியாமல், அவனை தள்ளி சுவரோரமாய் நிறுத்தி, அவன் சட்டைக் காலரை பிடித்து மிரட்டினான்...

'டேய்... குணா... மரியாதையா உண்மைய சொல்லு... கேணிவனத்தைப் பத்தி எங்கேயாவது, இல்ல யார்கிட்டயாவது சொல்லியிருக்கியா..?' என்று மிரட்ட.. அவன் சந்தோஷைப் பார்த்து சிரித்தான்...

'ஏன்.. சொல்லக்கூடாதா... டேய்... நானும் அந்த கிணத்துல இறங்கியிருக்கேன்டா... எனக்கும் உரிமையிருக்கு...' என்று கூற, சந்தோஷ் அவன் பொறுமையை இழந்தவனாக, குணா கையிலிருந்த பீர்பாட்டிலை பிடுங்கி, சுவற்றில் இடித்து உடைத்தான்....

அந்த சிலீர் என்ற சத்தத்துடன் ஒடிந்தது... அந்த கண்ணாடி துகள் ஒன்று, குணாவின் கன்னத்தை பதம் பார்த்தது.. கன்னம் கீறி ரத்தம்வழிய ஆரம்பித்தது...

'ஆ....', குணா கத்தினான்.

அந்த கத்தலில், சந்தோஷ் பிடியை தளர்த்தவே, குணா அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு அருகிலிருந்து ஸ்விட்-ஐ அணைக்க, ரூமிலிருந்த லைட் அணைந்து இருட்டு பரவியது...

சந்தோஷ், தடுமாறி கீழே விழுந்திருந்தான். எழுந்து தடவி தடவி ஸ்விட்சை போட... அறையில் குணா இல்லை...

எங்கே போயிருப்பான் என்று அந்த வீட்டிற்குள் வெவ்வேறு அறைகளில் தேடிப்பார்த்தான். அவனை எங்கும் காணவில்லை...

சரி... அவன் எங்காவது போகட்டும் என்று அவனை விட்டுவிட்டு, அந்த அறையில் வேறு ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காக, அந்த அறையை எல்லாப் பக்கமும் துழாவ ஆரம்பித்தான்.

மிகவும் குப்பை போன்ற அறை என்பதால், சந்தோஷ்-ற்கு தேடிப்பார்க்க மிகவும் நேரம் பிடித்தது.

சுமார் 15 நிமிட தேடல்களுக்கு பிறகு, மேஜைக்கு அருகில், சுருட்டிவைக்கப்பட்டிருந்த செல்ஃபோன் சார்ஜருக்கு அடியில், ஒரு விசிட்டிங் கார்டு கிடைத்தது...

சந்தோஷ் அதையெடுத்து ஆவலாய் படித்துப் பார்த்தான்.

'மிஸ்டர் இளங்கோவன்... மிஸ்ட்ரி டிவி...' என்றிருந்தது.

இந்த கார்டு இவனிடம் எதுக்கு வந்தது... ஒரு வேளை இவன் இந்த கேணிவனத்தைப் பற்றி மிஸ்ட்ரி டிவிக்கு சொல்லியிருப்பானோ...? என்று சந்தோஷ் மனதிற்குள் கணித்துக் கொண்டிருந்த சமயம், வாசலில், போலீஸ் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது... சந்தோஷ் தன் நிலையை உணர்ந்து, அங்கிருந்து வெளியேறிவிட நினைத்து வாசலை நெருங்க...

அங்கே ஒரு போலீஸ் உள்ளே நுழைந்துக்கொண்டிருந்தார்...

'யோவ்... இவன்தானேயா..?' என்று போலீஸ் தன்னுடன் வந்து நின்றிருந்த குணாவைப் பார்த்து கேட்க... அவன் 'இவனேதான் சார்..?' என்று கூற... சந்தோஷ் இருவரையும் மாறி மாறி பார்த்தான்...

போலீஸ் சந்தோஷைப் பார்த்து முறைத்தபடி, 'ஏய்.. லவ்வு மேட்டருக்காக வீட்டுக்குள்ள புகுந்து ஆளை அடிக்கிற அளவுக்கு பெரிய ரவுடியா நீ..? வாடா ஸ்டேஷனுக்கு..' என்று அவனை ஜீப்பில் ஏற்றினார்...

---------------------------------------------

தாஸ், கேணிவனத்தில் அந்த காட்டுக்கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தான்... குளிருக்காக மூட்டிய தீயில் குளிர்காய்ந்தபடி அமர்ந்திருக்க... அவனுக்கு அருகே லிஷா நைட்ட்ரெஸ்ஸில் அமர்ந்திருந்தாள்.... அவள் முகம் மிகவும் பதட்டமாயிருந்தது...

'ஏன் லிஷா ஒரு மாதிரியிருக்கே..?'

'இல்ல..!? சந்தோஷை இன்னும் காணோம்... அதான் பயமாயிருக்கு..? இந்த காட்டுக்கோவிலுக்கு தனியா வந்துடுவானா இல்ல அவனுக்கு ஏதாவது ஆயிடுமான்னு பயமாயிருக்கு..' என்றவள் அழுவதுபோல் கூற... அவள் பயத்தை ஊர்ஜிதப்படுத்தும் விதமாய் தூரத்தில் புலியின் உறுமல் ஒன்று கேட்கிறது.

இருவரும் பயந்து அந்த சத்தத்தை கேட்டுக்கொண்டிருக்கும் சமயம், கோவில் கருவறையில் கற்கள் நகரும் சத்தம் அவர்கள் கவனத்தை கலைக்கிறது... எழுந்து சென்று தாஸ் அந்த கருவறைக்குள் நுழைகிறான். சுவரைச் சுற்றிலும், அம்புக்குறிகள் வெவ்வேறு திசையை சுட்டிக்காட்டியபடி இருக்கு... கருவறை சிலையின் அடியிலிருக்கும் அந்த கல் மீண்டும் சத்தம் எழுப்புகிறது... அந்த கல்லை, தாஸ் மிகுந்த சிரமத்துடன் நகர்த்துகிறான்.

உள்ளே... குணா கிணற்றில் தொங்கியபடி புலம்புகிறான்...

'யோவ் ரைட்டர்... என்னை காப்பாத்து... உன்னாலதானே நான் இப்படி ஆனேன்... ப்ளீஸ் என்ன காப்பாதுய்யா..' என்று புலம்பிக்கொண்டிருக்க... நீண்ட குழப்பத்தில் தாஸ் அவனை காப்பாற்ற கைக்கொடுக்கிறான். உடனே குணா அவன் கையை பிடித்து தாஸையும் அந்த கிணற்றுக்குள் இழுத்துக் கொள்கிறான்....

தாஸ் அந்த கிணற்றுப் பள்ளத்தில் விழுகிறான்... அவன் கண்களுக்கு எதிரே... வட்டவடிவத்தில் தீப்பந்த வெளிச்சத்தில் கருவறை தெரிகிறது... அதில், லிஷாவின் முகம் எட்டிப்பார்த்தபடி அழுதுக்கொண்டிருக்கிறது...'

டப் டப் டப் என்று ஏதோ பலத்த சத்தம் கேட்கவே... தாஸ் பதறியடித்து எழுகிறான்...

நள்ளிரவு 1.00 மணி...

கண்டது கனவு என்று நம்ப சிறிது நேரம் பிடிக்கிறது... மீண்டும் டப் டப் டப்... என்ற கதவு தட்டப்படும் சத்தம்...

எழுந்து சென்று கதவை திறக்க... தாத்தா நின்றிருந்தார்...

'என்ன தாத்தா இந்நேரத்துல..?'

'அந்த சித்தர் யாருன்னு கண்டுபிடிச்சுட்டேன்... அதான் சந்தோஷம் தாளல... வந்து உன்னை எழுப்பிட்டேன்..!'

'யாரு தாத்தா அந்த சித்தர்..?' என்று தாஸும் ஆர்வமாய் கேட்டான்...

(தொடரும்...)Signature

Monday, September 06, 2010

"கேணிவனம்" - பாகம் 11 - [தொடர்கதை]பாகம் - 11

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில்... CTH ரோட்டில்.... ஒரு கார் சீறிக்கொண்டிருந்தது. உள்ளே.... தாஸ் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் லிஷா அமர்ந்திருந்தாள்.

'இன்னும் எவ்வளவு தூரம் போகணும்...'

'ஆல்மோஸ்ட் தேர்... ஏன் லிஷா? சந்தோஷ் இல்லாம போரடிக்குதா..?'

'அப்படியில்ல... சும்மாதான் கேட்டேன்..' என்று பேசியவள், சற்று தயங்கி...

'உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..?'

'என்ன லிஷா..?'

'நேத்து, நீங்க சந்தோஷ்கிட்ட பேசும்போது இந்த வார்ம்ஹோல் எங்கேயிருக்குன்னு வெளிநாட்டுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க..?'

'ஆமா..?'

'அப்ப ஏன், நம்ம நாட்டு விஞ்ஞானிங்ககிட்ட சொல்லக்கூடாது..? சொன்னீங்கன்னா, உங்க பேருகூட ஃபேமஸ் ஆகுமில்லியா..?'

'சொல்லலாம்... ஆனா உடனே, அந்த ஸ்பாட்-ஐ மிலிட்டரிக்காரங்க சீஸ் பண்ணிடுவாங்க... அப்புறம் அது மிலிட்டரி சீக்ரெட் ஏரியாவாயிடும்..'

'அதனாலென்ன..?'

'அப்புறம் அந்த கேணிவனத்தை பத்தி, நம்மளால முழுசா தெரிஞ்சுக்க முடியாம போயிடும்... அட்லீஸ்ட் அதைபத்தி முழுசா தெரிஞ்சிக்கிற வரைக்குமாவது, இந்த சீக்ரெட்டை வெளியே சொல்லாம இருக்கணும்... எனக்கு என் பேரு ஃபேமஸ் ஆகுறதைவிட, அந்த கேணிவனத்தோட ரகசியங்களை தெரிஞ்சுக்கனும்னுதான் அதிகம் விருப்பப்படுறேன்' என்று தாஸ் கூற, லிஷாவின் செல்ஃபோன் ஒலித்தது.

SANDY என்று டிஸ்ப்ளேயில் தெரிந்தது...

ஃபோனை எடுத்த லிஷா சந்தோஷிடம் மிகவும் ஆர்வமாக, 'ஹே.. சேண்டி (Sandy)' என்று கொஞ்சினாள்...

'ஹே லிஷா டார்லிங்... என்னைவிட்டுட்டு ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்பிட்டீங்க... எனக்கு நீ இல்லாம எவ்வளவு போரடிக்குது தெரியுமா..?'

'எனக்கும்தாண்டா...' என்று அவளும் பரிதாபமாக கூற, தாஸ் இதை புரிந்து கொண்டு வண்டி ஓட்டியபடி மெலிதாக சிரித்துக் கொண்டான்.

'சரி பாஸ்கிட்ட ஃபோனைக்கொடு..'

'ஹே தாஸ் வண்டி ஓட்டுறாருல்ல...! வண்டி ஓட்டும்போது ஃபோன் பேசுறதும் தப்பு, வண்டி ஓட்டுறவங்களுக்கு, தெரிஞ்சே ஃபோன் பண்றதும் தப்பு... என்கிட்ட சொல்லு நானே சொல்லிடுறேன்..' என்று லிஷா கேட்க...

'சரி, நான் இந்த குணாவை தேடி அவன் ஆஃபீசுக்கு வந்தேன்... ஆனா, அவன் இன்னிக்கு ஆஃபீஸுக்கு வரலியாம்... இன்ஃபாக்ட், மும்பை போயிட்டு வந்ததுலருந்து, இன்னும் ஆஃபீசுக்கே வராததாலே இவங்கல்லாம் ரொம்பவும் அப்செட்டா இருக்காங்க... எங்கே போனான்னே தெரியல... ஆளு என்னமோ பண்ணிட்டிருக்கான்னு மட்டும் தெரியுது... என்ன பண்றான்னுதான் தெரியல... அப்புறம் ஒரு மேட்டர்... இந்த ஆஃபீஸ்ல, H.R. டிபார்ட்மெண்ட்ல, சாந்தினி-ன்னு ஒருத்தியிருக்கா, அந்த பொண்ணு, என்னோட ஸ்கூல்மேட்தான்... ஆளு சூப்பரா இருப்பா... அவளைப்பாத்து, பேசி, ஞாபகப்படுத்தி அப்படி இப்படின்னு கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன்.' என்றதும்...

லிஷா கோபமாக... 'டேய்... சேண்டி..?' என்று அவனை மிரட்ட...

'ஹே... என்னை சந்தேகப்படாதேமா... அவகிட்ட பேசி அந்த குணாவோட வீட்டு அட்ரஸை கேட்டிருக்கேன்..! எம்ப்ளாயிஸ் டீடெய்ல்ஸ் வெளியில கொடுக்க, அவங்க கம்பெனி பாலிஸி ஒத்துக்காதுன்னு சொன்னா..! ஆனா, எப்படியாவது ட்ரை பண்ணி, இன்னிக்கி ஈவ்னிங்குக்குள்ள தர்றேன்னு சொல்லியிருக்கா...  அதான் இங்கேயே வெயிட் பண்ணிட்டிருக்கேன். இன்னிக்கு மதியம் இதே ஆஃபீஸ் ஃபுட்கோர்ட்ல, சாந்தினிகூடதான் லஞ்ச் சாப்பிடப்போறேன்... உண்மையை மறைக்காம உங்கிட்ட சொல்லிட்டேன். வேற ஏதாவது தகவல் இருந்தா சொல்றேன்.. இந்த குணாவைப்பத்தின தகவல்-ஐ பாஸ்கிட்ட சொல்லிடு... ஐ மிஸ் யூ டார்லிங்' என்று கூறிமுடித்து ஃபோனில் ஒரு முத்தம் கொடுத்தான்...

'ஐ மிஸ் யு டூ-டா...' என்று லிஷா சிரித்தபடி ஃபோனை கட் செய்து, தாஸிடம் விஷயத்தை கூறினாள்....

தாஸ் அதை கேட்டு குணாவைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் இருக்க...

'கந்தன் கொள்ளை' என்ற போர்டு அவர்களை வரவேற்றது...

லிஷா அந்த போர்டை படித்தபடி... 'கந்தன் கொள்ளை... வாவ்... உங்க கிராமத்தோட பேரு அருமையா இருக்கு தாஸ்..' என்று அந்த போர்டு, காரைக்கடந்து போவதை பார்த்தபடி சொன்னாள்...

தாஸ், அந்த பலகையை தாண்டி இடதுபக்கமாக காரை திருப்பினான். சீரான மண்ரோட்டில் 2 கி.மீ உள்ளே நுழைந்ததும், வயல்களுக்கு நடுவே ஒரு தனி வீடு, அவர்களை வரவேற்றது.

'வாவ்.... ப்யூட்டிஃபுல் ஹவுஸ்..' என்று லிஷா மீண்டும் குழந்தையாய் அந்த வீட்டை ரசித்தாள்.

'ஆமா... இவ்ளோ அழகான ஒரு சூழலை விட்டுட்டு... ப்ச்... சிட்டில இருக்கேன்பாரு...' என்று தாஸ் அலுத்துக் கொண்டான்.

கார் வீட்டின் உள்ளே நுழைந்தது...

காம்பவுண்டு பில்லரில், 'தசரதன் சக்கரவர்த்தி..' என்று ஒரு பெயர்ப்பலகை இருந்தது...

'என்ன உங்க பேரு போட்டிருக்கு..?'

'என் தாத்தா பேரும் தசரதன்தான்... அவர் பேரைத்தான் எனக்கு வச்சியிருக்காங்க..' என்று தாஸ் கூறியபடி வண்டியை உள்ளே நுழைத்து நிறுத்தினான்.

இருவரும் இறங்கி அந்த வீட்டை அண்ணாந்து பார்க்க... மாடியில் பால்கணி வழியாக ஒரு வயதானவர் எட்டிப்பார்த்தார்...

'ஹே... தாஸ்... மை யங் ஃப்ரெண்டு..' என்று அவர் கையசைத்தபடி... 'இருப்பா கீழே வர்றேன்..' என்று கூறி விறுவிறுவென்று பால்கணியிலிருந்து உள்ளே நுழைந்து மறைந்தார்.

'தாஆத்ததாஆ.... பாத்து வாங்க... மெதுவா ஒண்ணும் அவசரமில்ல...' என்று கத்தியபடி அவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

'வா லிஷா...' என்று கூற, லிஷாவும் கையில் ஒரு சின்ன பையுடன் உள்ளே நுழைந்தாள்.

வீடு பிரம்மாண்டமாக இருந்தது. உயர்ந்த சீலிங்... பெரிய ஜன்னல்கள் உயரத்தில் அதிகம் இருந்தன... அவற்றில் வெட்டிவேரால் நெய்யப்பட்ட பாய்வகை திரைச்சீலைகள் ஜன்னலை மூடியிருந்தது. இதனால், உள்ளே ஹாலில் வெட்டி வேரின் வாசம் மிகவும் மிதமாக வீசிக் லிஷாவின் பயணக் களைப்பை மறக்கடித்துக் கொண்டிருந்தது. எந்த ரூம் ஃப்ரெஷ்னருக்கும் இப்படி ஒரு தன்மை இருந்ததில்லையே என்று ரசித்தாள்.

தாஸின் ஆஃபீசில் இருந்தது போலவே, சில அரிய வகை சிற்பங்களும், சில அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்களும், மெடாலியன்களும் சுவற்றிலும், வாயிலிலும் தொங்கிக் கொண்டிருந்தது.

தாஸை இப்படி ரசனைக்குள்ளாகும்படி கெடுத்தது இவர் தாத்தாதான் போல... என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

தாத்தா படியிறங்கிக் கொண்டிருந்தார்... வெள்ளை வேஷ்டியும், வெள்ளை பைஜாமாவுமாக மிகவும் கம்பீரமாக இருந்தார். கைத்தடியெல்லாமில்லாமல் தெம்பாகவே நடந்தார். கண்ணாடி அணிந்திருந்தார். லிஷா அவரை ஆர்வமாக பார்த்தாள். அவர் படியிலிருந்து இறங்கி  வந்து தாஸை கட்டிக்கொண்டார்...

'எப்படிப்பா இருக்கே..?'

'பர்ஃபெக்ட் தாத்தா... எனக்கென்ன...'

'இது..?' என்று லிஷாவைப் பார்த்து கேட்க...

'இவ லிஷா... என் அஸிஸ்டெண்ட்... ரொம்ப ஸ்மார்ட்டான பொண்ணு... என் கதைக்கு தேவையான எந்த ஒரு தகவல் கேட்டாலும், அதை எப்படியாவது கலெக்ட் பண்ணி தந்துடுவா... இவ ஹெல்ப் இல்லன்னா... நான் புத்தகம் எழுதுறது ரொம்பவும் கஷ்டம்..' என்று கூறிவிட்டு... 'தாத்தா... நீங்க பேசிக்கிட்டிருங்க... நான் போய் கொஞ்சம் ரிஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடுறேன்... வந்ததும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..' என்று கூறி முடித்து, அவன் படியில் ஏறிப்போகிறான்...

தாத்தா லிஷாவிடம் திரும்பி...

'என்னம்மா பிரயாணம்லாம் சௌகரியமா இருந்துதா..?'

'இருந்தது சார்...'

'சாரெல்லாம் எதுக்கு... உனக்கும் மாடியில ரூம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்..! சந்தோஷ் வரலியா..?' என்று கேட்க... லிஷா குழப்பத்துடன்

'சந்தோஷ் உங்களுக்கெப்படி தெரியும்..?'

'தெரியும்மா... தாஸ் ஃபோன்ல சொல்லியிருக்கான்... அவன்தானே உன் லவ்வர்..?'

'அந்தளவுக்கு சொல்லிட்டாரா..?'

'எப்ப கல்யாணம்..?'

'கூடிய சீக்கிரம்..! உங்களை வந்து இன்வைட் பண்றேன்..' என்று வெட்கப்பட்டாள்...

'நீ வெட்கப்படுறதிலியே... அந்த பையன் மேல உனக்கு எவ்வளவு காதல்னு தெரியுது... வாழ்த்துக்கள்-ம்மா... சரி... சரி... நீயும் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடு... அப்புறமா..! சாப்டுக்கிட்டே பேசலாம்.. மேல.. இடதுபக்கம் ரெண்டாவது ரூம் யூஸ் பண்ணிக்கோம்மா... ' எனறு தாத்தா கூற, லிஷாவும் படியேறி சென்றாள்.

-----------------------------------

சற்று நேரத்தில் மூவரும் டைனிங் ஹாலுக்கு வந்தனர்.

தாஸ் வேஷ்டி சட்டை அணிந்திருந்து வித்தியாசமாக வந்திருந்தான். லிஷா அவனை பார்த்து மெலிதாக சிரித்துக் கொண்டாள்.

'என்ன லிஷா, எங்க தாத்தா கூட எனக்கு இந்த கெட்-அப்-ல இருந்தாதான் சௌகரியமா இருக்கு...'

'ஐயோ தாஸ், நான் உங்களை எதுவுமே சொல்லலியே..! நான் சந்தோஷ் இங்கே வந்திருந்தான்னா எப்படி இருந்திருப்பான்னு யோசிச்சி சிரிச்சேன்... ப்ளீஸ் டோன்ட் மைண்ட்..' என்று கூறினாள்.

அந்த டைனிங் ஹாலில், தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு உயரும் வட்ட வடிவ டைனிங் டேபிளும், அதற்கு கீழே சப்பணமிட்டு அமர்ந்து உண்ணும்படியாக பாயும் விரித்திருந்தது. மூவரும் அந்த டேபிளைச் சுற்றி சப்பணமிட்டபடி உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வாழையிலை விரிக்கப்பட்டிருக்க... அங்கிருந்த பாத்திரங்களும், மண்ணினாலும், பித்தளையினாலும், செப்பினாலும்தான் இருந்தது. லிஷாவுக்கு இந்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. அவள் அந்த சூழலை மிகவும் ரசித்து உண்ண ஆரம்பித்தாள்.

'தாத்தா..! சாப்பாடு சூப்பர்..! சுசீலாம்மா சமையல் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு தாத்தா..?' என்று தாஸ், சமையல் செய்த பெண்மணியை புகழ்ந்து கொண்டிருந்தான்.

'சுசீலா...? கேட்டியாம்மா..? உன்னைத்தான் சொல்றான்..' என்று தாத்தா உரக்க கூற...

'ஆங்... இதோ வந்துட்டேம்ப்பா..?' என்று  உள்ளே கிச்சனிலிருந்து ஒரு நடுத்தர வயது பெண்மணியின் குரல் வந்தது...

'சுசீலாம்மா இங்கேதான் இருக்காங்களா..?' என்று கூறியபடி, சாப்பாட்டு கையுடன் எழுந்து சென்று, கிச்சனிலிருக்கும் அந்த பெண்மணியை தாஸ் சந்திக்க சென்றான்.

தாத்தா, சுசிலாவைப் பற்றி லிஷாவிடம் கூறினார்...

'சுசீலாதான், எங்க வீட்ல ரெகுலர் சமையல்... தாஸ், ஸ்கூலுக்கு போற காலத்துலருந்து சமைச்சி போடுறா... என் சொந்த மக மாதிரி... தாஸ் சிட்டிக்கு போனதுலருந்து, இவதான் எனக்கு ஒரே ஆறுதல்...'

உள்ளே கிச்சனில்

தாஸ் சுசீலாம்மாவைப் பார்த்தபடி ஆர்வமாக சென்று 'எப்படிம்மா இருக்கீங்க...?' என்று கூறி அவள் காலில் விழுகிறான்

'அய்யோ என்னப்பா இதெல்லாம்... நான் நல்லாயிருக்கேன் தம்பி..! நீ எப்படியிருக்கே..?'

'உங்க சமையல் மாதிரியே சூப்பரா இருக்கேன்..'

'என்னப்பா இது... சாப்பிடுற கையோட எழுந்து வந்திருக்கியே.. வா வந்து உக்காந்து நல்லா சாப்பிடு..' என்று அவனை அழைத்து வந்து மீண்டும், டைனிங் டேபிளில் உட்கார வைத்தாள்...

தாஸ் மீண்டும் சாப்பிட்டபடி, 'என்ன சுசீலாம்மா... ஏதாவது நான்-வெஜிடேரியன் ஐட்டம் செய்யக்கூடாதா..?' என்றதும், அவள் தாத்தாவிடம் புகார் செய்தாள்

'அப்பா... கேட்டீங்களா... உங்க பேரனுக்கு அசைவம் வேணுமாம்..'

'விடும்மா... அவனும் என்னை மாதிரி, 45 வயசுக்கு மேல அசைவ சாப்பாட்டையெல்லாம் விட்டுடுவேன்னு சொல்லியிருக்கான்ல..? பாவம், நாளைக்கு ஏதாவது அசைவம் சமைச்சிடு..' என்று கூறுகிறார்

'ஆமா.. நாளைக்கு லன்ச் சாப்டுட்டு கிளம்பிடுவோம்..' என்று சட்டென்று தாஸ் கூற... தாத்தா முகம் வாடுகிறது...

'தாத்தா..? ரொம்ப நாள் உங்ககூட தங்கமுடியாத நிலையில நான் இப்போ இருக்கேன்... நான் இங்கே வந்ததே உங்களை பாத்து, சில தகவல்கள் தெரிஞ்சுக்கிட்டு போலாம்னுதான்..' என்று கூற தாத்தா.. முகத்தை சகஜமாக்கிக்கொண்டு....

'ஹ்ம்ம்.... இந்த கிழவன்கிட்டருந்து உனக்கு என்ன வேணும்.. கேளு..! தெரிஞ்சா சொல்றேன்..' என்றதும்... தாஸ் சற்று மௌனமாய் இருந்தான். சுசிலாம்மா மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்துவிட... தாஸ் சுதாரித்துக் கொண்டு பேச்சை தொடங்கினான்.

'தாத்தா, நான் ஒரு 4 நாளைக்கு முன்னாடி நான் பாம்பேக்கு ட்ரெயின்ல போயிட்டிருந்தேன்...' என்று நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்...

---------------------------------------------

அதே நேரம்... குணா...

மிஸ்ட்ரி டிவி சேனலின் ஆஃபீஸில்... ஒரு கண்ணாடி பெட்டி போன்ற தனியறையில் குணா அமர்ந்திருந்தான். அந்த அறையிலிருந்த கண்ணாடி வழியாக வெளியில் சேனலில் பணிபுரியும் ஸ்டாஃப்கள் அங்குமிங்கும் மிகவும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பதை பார்த்து பார்த்து சலித்தபடி அமர்ந்திருந்தான்.

சே..! இந்த அறைக்குள் வந்து அரை மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. இப்பபடி காக்க வைக்கிறார்களே..? குணா... காத்திருக்காதே..! போதும் பொறுமை...  10 வரை எண்ணிப்பார்... யாரும் அறைக்குள் நுழையாவிட்டால், எழுந்து சென்று, இவர்களது காம்படேடிவ் சேனலான 'ட்ரீம் டிவி'க்கு போய்விடு. 1... 2.... 3.... 4.... 5... 6... 7....

உள்ளே ஒருவன் நுழைந்தான்.

'ஹாய்... வெரி சாரி மிஸ்டர் குணா... ஒரு சின்ன மீட்டிங் போயிட்டிருந்தது... அதான் லேட்..!' என்று கைநீட்ட... குணா வேண்டா வெறுப்பாக அவனுடன் கைகுலுக்கினான்.

'ஐ அம் இளங்கோவன்...'

'நைஸ் மீட்டிங்'

'நீங்கதானே நேத்து நைட் ஃபோன் பண்ணியிருந்தீங்க... ஏதோ கேணி... வனம்... னு ஒரு கோவில்..? எங்கேயிருக்குன்னு சொன்னீங்க..?'

'சொல்றேன்... ஆனா ஒரு கண்டிஷன்... உங்க ப்ரோக்ராம்ல, நான் இந்த கோவிலுக்கு உங்க டிவி ஆளுங்களை கூட்டிக்கிட்டு போறமாதிரிதான் ஷூட் பண்ணனும், இதுக்கு ஓகேன்னா... நான் எல்லாத்தையும் சொல்றேன்..' என்று குணா தீர்க்கமாக கூற... இளங்கோவன் சிறிது யோசித்துவிட்டு...

'சரி.. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.. நீங்க அந்த கோவில் எங்கே இருக்குன்னு சொன்னீங்க..?'

'சரியா தெரியாது... நான் ட்ரெயின்ல பாம்பேக்கு போகும்போது, ட்ரெயின் காலையில 11 மணிக்கு சிக்னல்ல நின்னுச்சு... அப்போ நான் பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள சும்மா ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வரலாம்னு போனேன்... அப்போ... ட்ரெயின் மிஸ் பண்ணிட்டேன். உள்ளே சுத்தி சுத்தி வந்ததுல, இந்த கோவிலைப் பாத்தேன்..' என்று கூற, அந்த இளங்கோவன், குணாவை சிறிது நேரம் பார்வையால் அளந்தான்...

'என்ன இளங்கோவன்..? நான் பொய் சொல்றேனோன்னு பாக்குறீங்களா..?'

'இல்ல... இல்ல... அந்த கோவில்ல என்ன இருக்குன்னு சொன்னீங்க..?' என்று கேட்டபடி... தன் கையிலிருந்த நோட்பேடில், குணா சொல்வதனைத்தையும் இளங்கோவன் குறித்துக் கொண்டிருந்தான்...

-----------------------------------

'கந்தன் கொள்ளை' கிராமத்தில், தாத்தாவின் அறையில், நடந்த அனைத்தையும் கூறிமுடித்திருந்த தாஸ், அவன் கொண்டு வந்திருந்த லேப்-டாப்பில், ஓவியத்தையும், கிணற்றுக்குள் எழுதியிருந்த பாடலின் புகைப்படத்தையும் தாத்தாவுக்கு காட்டிக் கொண்டிருந்தான். லிஷாவும் அருகில் அமர்ந்திருந்தாள்.

தாத்தா அந்த பாடலை வாய்விட்டு சத்தமில்லாமல் முணுமுணுத்தக் கொண்டிருந்துவிட்டு தாஸிடம் திரும்பி...

'சந்தேகமேயில்லப்பா இது சித்தர் பாடல்தான்...' என்று தீர்மானமாக கூற...

'நானும் அப்படித்தான் நினைச்சேன் தாத்தா... மொத்தம் 18 சித்தர்ங்க இருக்கிறாங்கல்ல..? இதுல இது எந்த சித்தரோட பாட்டுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது..?'

'என்னது சித்தருங்க வெறும் 18ன்னு யார் சொன்னது... சித்தருங்க இத்தனை பேருதான் இருக்காங்கன்னு எந்த ஒரு கணக்குமில்ல... இருக்கிற அத்தனை சித்தர்கள்ல, இந்த 18 பேரு ரொம்பவும் குறிப்பிட்டு சொல்லக்கூடியளவுக்கு முக்கியமானவங்க...'

'அப்ப நிறைய சித்தருங்க இருக்காங்களா..?' என்று லிஷா கேட்க...

'ஆமா... உதாரணத்துக்கு, அந்த காலத்துல மன்னர்கள் எத்தனையோ பேர் இருந்தும், மூவேந்தர்கள்னு சேர, சோழ, பாண்டிய மன்னர்களை குறிப்பிட்டு சொல்றோம்... ஆனா, இவங்களுக்கு கீழே எத்தனையோ குறுநில மன்னர்கள் தமிழ் நாட்ல இருந்தாங்க இல்லியா..? அதே மாதிரிதான், எத்தனையோ பெயர் தெரியாத சித்தர்கள் அந்த காலத்துல வாழ்ந்திருக்காங்க... நீ இந்திரா சௌந்தர்ராஜன்-னோட நாவல்கள்லாம் படிக்கிறதில்லியா..? ஒரு நல்ல எழுத்தாளன்-னா மத்தவங்களோட புத்தகத்தையும் ரசிக்க தெரிஞ்சிருக்கனும்ப்பா... சித்தர்கள் பற்றி எத்தனையோ தனி நூல் வந்தாலும், அவர் கதையோட சேத்து, சித்தர்கள் பத்தின பல அரிய தகவல்களை சொல்லியிருக்காரு... ஃப்ரீயா இருக்கும்போது தவறாம படி..' என்று தாத்தா, தாஸுக்கு அன்புக்கட்டளையிட

'சரி தாத்தா...' என்று தாஸ் அதை ஏற்றுக் கொண்டான்.

லிஷா தொடர்ந்தாள்...

'அப்புறம், இந்த ஓவியத்துல, நாடி, விநாடி, தற்பரை-ன்னு நிறைய எழுதியிருக்காங்க...? இதெல்லாம் காலசாஸ்திரத்தோட டைம் யூனிட்ஸ்னு தாஸ் சொன்னாரு...?' என்றவள் கேட்க...

'ஆமாம்மா... கரெக்டாத்தான் சொல்லியிருக்கான்..! ஏன் கேக்குறே..?'

'இல்ல... தமிழ் மொழியில இருக்கிற இந்த டைம் யூனிட்ஸை வச்சிக்கிட்டு, எப்படி டைம் செட் பண்ணி டைம் டிராவல் பண்ண முடியும். ஏன் கேக்குறேன்னா..? தமிழ்ல இருக்கிற இந்த யூனிட்ஸ் எந்தளவுக்கு பர்ஃபெக்டா இருக்கும்னு தெரியல...?'

'ஏம்மா லிஷா, தமிழ்ல இருக்கிற யூனிட்ஸ்ல உனக்கு அந்தளவுக்கு சந்தேகமா..? உன்னை ஒண்ணு கேக்கலாமா..?'

'கேளுங்க..?'

'கோடிக்கு அப்புறம் பணத்துக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியுமா..?'

'பணம் எத்தனை கோடியிருக்கோ, அத்தனை கோடின்னு சொல்லுவாங்க... இல்லியா..?'

'ஹ்ம்ம்... கோடிகூட ஒரு ஆரம்பம்தான்... அதுக்கப்பறும், 10 கோடியை - அற்புதம்னு சொல்லுவாங்க... 10 அற்புத்தை - நிகற்புதம்-னு சொல்லுவாங்க... அதே மாதிரி ஒவ்வொரு பத்துக்கும்... கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், சமுத்திரம்... இப்படி எவ்வளோ இருக்கும்மா...' என்று தாத்தா கூற, லிஷா ஆச்சர்யமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா... நம்ம டைம் யூனிட்ஸ்-ம் அதே மாதிரிதான்... செகண்ட்ஸ்-ஐ அடிப்படையா வச்சி மணியை கால்குலேட் பண்றதெல்லாம் இப்போதான்... அப்போல்லாம், கண் இமைக்கிறதுதான் கணக்கு....' என்றதும், தாஸும், லிஷாவும் தாத்தாவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

'இன்னைக்கும், பல பேரு பேசும்போது, 'கண்ணிமைக்கிற நேரத்துல நடந்துடுச்சி'ன்னு சொல்றதை கேள்விப்பட்டிருப்பீங்க..'

'ஆமா..?'

'அது அந்த காலத்து கால்குலேஷனை நாம நினைவுக்கூறுகிற வாக்கியம்தான்....' என்று கூற இருவரும் இன்னும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தனர்...

'நம்ம ஊருல, எந்த ஒரு விஷயத்திலயும், ஏதாவது ஒரு கடவுளை சம்மந்தப்படுத்திதான் பண்ணுவாங்க... அந்த மாதிரி, இந்த கண் இமைக்கிற கணக்கை, பிரம்மா கடவுளை வச்சி எழுதியிருக்காங்க... அவரோட கண் இமைக்கிறதைத்தான் கால்குலேஷனுக்கு யூஸ் பண்ணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க...'

'தாத்தா... குறிப்பா, பிரம்மா கடவுள் ஏன்..?'

'அவர்தானே, படைக்கும் கடவுள், அதனால இருக்கலாம்...'

'ஓ... சரி..'

'கண்ணிமை, நொடி, கைநொடி, விநாடி, நாழிகை, ஓரை, முகூர்த்தம்... இப்படி இந்த டேபிள் நீண்டுகிட்டே போகுது... கடைசியா 60 ஆண்டு ஒரு வட்டம்-னு சொல்லுவாங்க..' என்றதும், தாஸ் குதூகலமானான். உடனே லிஷாவிடம் திரும்பி...

'லிஷா, நான் சொல்லலை, அந்த பார்டர்ல இருக்கிற ஒவ்வொரு பொஸிஷன்சும், ஒவ்வொரு ஆண்டைக்குறிக்குதுன்னு...? 60 ஆண்டுக்கு, 60 பொஸிஷன் டிராயிங்..' என்று கூறும்போது... தாஸின் செல்ஃபோன் ஒலித்தது.

ரிங்டோன்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
அவன் யாருக்காக கொடுத்தான்...
ஒருத்தருக்கா கொடுத்தான் - இல்லை
ஊருக்காக கொடுத்தான்...

டிஸ்ப்ளேயில், 'ப்ரொஃபெஸர் கணேஷ்ராம்' என்று காட்டியது... தாஸ் மிகவும் ஆர்வமாக ஃபோனை எடுத்தான்...

'ஹலோ சார்..?'

'என்னய்யா... இங்க லைப்ரரியில ஆளில்ல போலருக்கு..?'

'இல்ல சார்... எங்க தாத்தாவை பாக்க அவர் ஊருக்கு வந்திருக்கேன்... ஏதாவது தகவல் கிடைச்சுதா சார்..?'

'எப்படி கிடைக்காம போகும்... நேத்திக்கு நைட்டு முழுக்க கண்முழிச்சி தேடியிருக்கேனேய்யா...'

'என்ன சார் தெரிஞ்சுது..?'

'முதல்ல பெயிண்டிங்-ல இருக்கிற மூலநாயகன் எந்த கடவுள்-னு தெரிஞ்சுதுய்யா...

'எந்த கடவுள் சார்..?'

'பிரம்மா..!'

'நினைச்சேன் சார்... இங்க எங்க தாத்தா பெயிண்டிங்-ஐ பாக்காமலேயே இந்த விஷயத்தை இப்பத்தான் indirectஆ சொன்னாரு...'

'உன் தாத்தாவாச்சே... பின்ன எப்படி இருப்பாரு..! அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் தெரிஞ்சது..?'

'என்னது சார்..?'

'பெயிண்டிங்-ல கடவுள், அரசன்... 2 பேருக்குத்தான் இம்பார்டென்ஸ் கொடுத்திருக்காங்கன்னு சொல்லியிருந்தேன்ல...?

'ஆமா சார்..?'

'அது தப்பு, வலதுபக்கம் பெயிண்டிங் சிதைஞ்சியிருக்கிற இடத்துல, ஒருத்தர் உக்காந்திருக்கிற பொஸிஷன்ல ஒரு பாதம் தெரியுது.. சோ, 3ஆவதா ஒருத்தருக்கும் இம்பார்ட்டென்ஸ் கொடுத்திருக்காங்க..?'

'யாரு சார் அது..?'

(தொடரும்...)Signature
There was an error in this gadget

Popular Posts