Wednesday, August 11, 2010

"கேணிவனம்" - பாகம் 04 - [தொடர்கதை]


கிணற்றுக்குள் இருந்த அந்த பாடலையே பார்த்துக் கொண்டிருந்த தாஸ், சற்று நேரத்தில் இயல்புக்கு திரும்பியவனாய், தனது மொபைல் ஃபோன் வெளிச்சத்தில் அந்த பாடலை ஃபோட்டோ எடுத்துக் கொண்டான்.

மொபைலில் பேட்டரி இன்னும் இரண்டு புள்ளிகளே இருந்ததால், கருவறைக்கு வெளியே வந்து மொபைல் லைட்டை ஆஃப் செய்தான்.

குணா, தனது புலம்பலை நிறுத்திவிட்டு, நெருப்புக்கு அருகில் அமர்ந்திருந்தான். மூட்டிய தீ எப்போதும் அணைந்துவிடும் என்ற நிலையில் அரைகுறையாக எரிந்துக் கொண்டிருந்ததை அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

'என்ன தாஸ், வேலையெல்லாம் முடிஞ்சுதா..? இப்பவாவது வந்து தூங்குங்க...' என்று கூற, தாஸ் வந்து அவனுக்கருகில் அமர்ந்தான். தனது மொபைலில் எடுத்த ஃபோட்டோவை காண்பித்தான்.

'என்னதிது..?'

'கிணத்துக்குள்ள எழுதியிருந்தது...'

குணா, அதை ஆச்சர்யமாக பார்த்தான்.

'ஒண்ணும் புரியல... ஆனா தமிழ்னு மட்டும் தெரியுது... எப்படி கர்நாடகா காட்டுக்குள்ள தமிழ்ல எழுதியிருக்கு..?'

'ஏன், திருபபதி கோவில் சுவத்துலக்கூடதான் தமிழ்ல எழுதியிருக்கு... இந்த மாநிலம், வட்டம், மாவட்டம் இதெல்லாம் நாம ரொம்ப சமீபத்துல கோடு பிரிச்சிக்கிட்டதுதானே... அப்போல்லாம் அப்படியில்லியே.. எந்த ராஜா வந்து, சண்டைபோட்டு ஜெயிக்கிறானோ.. அந்த ஊரு... ராஜாவோட ஊரு... அவன் என்ன மொழி பேசுறானோ... அந்த மொழிதான் அந்த ஊரோட மொழி... அடுத்து இன்னொருத்தன் வந்தா அவன் கைக்கு மொத்தமும் மாறிடும்.'

'அதுசரி, இதுல என்ன எழுதியிருக்குன்னு உங்களுக்கு தெரியுதா..?'

'ஏதோ சித்தர் பாடல் மாதிரி இருக்கு.. அவங்கதான் தெளிவா புரியாதமாதிரி எழுதுவாங்க... இதுவும் அப்படித்தான் இருக்கு... என்னன்னு தெளிவா தெரியல...' கொஞ்சம் நிதானத்தோட பாக்கணும்..!' என்று மீண்டும் அந்த பாடலை குணாவிடமிருந்து ஃபோனை வாங்கிப் பார்த்தான்.

துஆரமது ந்தூரமா ய்ங்காலமதுங்
காணா மற்போகுவதுக்கொரு
கேணி யதுமுண்டெ நவுரைப் பதக்கேளு
இதயுள்ளடங்குவ் ஆனுக்குவ அட்ருப் போம்கோளு


முடிந்தவரை பாட்டை புரிந்துக் கொள்ள முயற்சித்தான்.

குணா, தாஸ் சிரம்ப்படுவதை பார்த்து, 'சரி விடுங்க... தாஸ்... நீங்க நிதானத்துல இல்ல..!'

'இல்ல குணா... ட்ரெயினை மிஸ் பண்ண்து, காட்டுக்குள்ள வந்தது, இந்த கோவிலை பாத்ததுன்னு, நடந்ததையெல்லாம் பாக்கும்போது... நாம இங்க வந்து எதேச்சையா மாட்டலன்னு தோணுது, இங்க என்னமோ இருக்கு... அதை தெரிஞ்சுக்கிறதுதான் சாமர்த்தியம்.. '

குணா சற்றே பயம் கலந்த புன்னகையுடன், 'நீங்கதான் கிணத்துக்கடியில புதையல் இருக்கும்னு பில்டப் கொடுத்தீங்க..?  அதென்னடான்னா,  அநியாயத்துக்கு பள்ளமா இருக்கு... உள்ள என்ன இருக்குன்னு இறங்கியா பாக்க முடியும்..?' என்று கூற... தாஸ் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு, குணாவை ஏறிட்டு பார்த்து புன்னகைத்தான்.

'நல்ல ஐடியா கொடுத்தீங்க..'

'ஹலோ... என்ன விளையாடுறீங்களா..? நான் சும்மா எதேச்சையா சொன்னேன்... எத்தனை நாளா அந்த கிணறு மூடியிருந்துதோ தெரியல.. உள்ள பாம்பு தேள்கூட வாழ மறந்துருக்கு... அங்க போய் இறங்குறேன்னு சொல்றீங்க..? இப்பதான் தெளிவா புரியுது..?'

'என்னன்னு..'

'நீங்க நிதானத்துல இல்லன்னு..?'

'இல்ல குணா, கோவிச்சுக்காதீங்க... இறங்கிப் பாக்காம எதுவும் புரியாது...' என்று அவன் எழுந்தேவிட்டான்.

குணா, அவனைத் தொடர்ந்து வேண்டாமென்று சொல்வது போல் கெஞ்சிக்கொண்டே பின்தொடர்ந்து வந்தான்.

'தாஸ், சொன்னா கேளுங்க.. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா..'

'என்னைப் பத்தி கவலைப்படாதீங்க..'

'இல்லங்க, உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் தனியாளாயிடுவேன். எனக்கு சத்தியமா இந்த காட்டை விட்டு தனியாளா உயிரோட வெளியே போக முடியும்னு தோணலை, நீங்க கூட இருந்தீங்கன்னா..' என்று வெளிப்படையாக சுயநலமாக பேச, தாஸ் நின்று... திரும்பி அவனைப் பார்த்தான்.

'குணா, மே பி இந்த கிணறுதான் நாம வெளியே போறதுக்கான வழியோ என்னமோ..?' என்று கூறிவிட்டு மீண்டும் கருவறையை நோக்கி நடந்தான். குணா, தாஸ் சொன்னதைக் கேட்டு அப்படியே நின்றிருந்தான்.

'எப்படி சொல்றீங்க..?' என்று குணா நின்ற நிலையில் கேட்க,

'ஒரு வேளை இது சுரங்க பாதையா இருந்து, ஏதாவது ஒரு ஊரோட கோவில்ல வெளியே வந்தாலும் வரலாம்' என்று பதிலளித்து கொண்டே கருவறைக்குள் நுழைந்தான்.

குணா அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

'இன்னும் மொபைல்ல பேட்டரி இரண்டு புள்ளிதான் இருக்கு...' என்று வருத்தப்பட்டுக்கொண்டே, பழை நிலையில் மொபைல் லைட்டை ஆன் செய்து, தனது கழுத்து காலரில் ஹூக்கை மாட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்க காலெடுத்து வைத்தான்.

குணா, அருகில் ஓடிவந்து...

'தாஸ், இதை நீங்க கண்டிப்பா செஞ்சாகணுமா..?'

'ஏன் செய்யக்கூடாது..?'

'ஒரு வேளை உள்ள ஒண்ணுமே இல்லன்னா..?'

தாஸ் சற்று யோசித்து விட்டு தீர்மானமாக, 'குணா... நான் ஒரு ரைட்டர்... உள்ள ஒண்ணுமே இல்லன்னா கூட, இந்த சம்பவத்தை அடிப்படையா வச்சி, குறைஞ்சபட்சம் ஒரு கதையாவது எழுதுவேன்.' என்று கூறி கண்சிமிட்டிவிட்டு  உள்ளே இறங்கினான். குணா அவனை தடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

உள்ளே கால் வைக்க தோதாக ஒரு கல்லை தேடிப்பிடித்து தாஸ், உள்ளே பத்திரமாக இறங்க ஆரம்பித்தான்.

குணா அவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம்... கொஞ்சமாக... தாஸ் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, தாஸ்-ன் உருவம் இருட்டில் மறைந்து அவனது மொபைல் டார்ச் மட்டும் புள்ளி வெளிச்சமாக குணாவிற்கு காட்சியளித்துக் கொண்டிருந்தது.

கிணற்றுக்கு உள்ளே...

தாஸ், இறங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தான். அவன் நினைத்ததை விட சீக்கிரமே அவன் தளர்ந்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான். நீண்ட நேரமாக உணவு  எதுவும் உட்கொள்ளாததினால் கை கால் தசைகள் சக்தி இல்லாமல், பயங்கர வலி கொடுத்துக் கொண்டிருந்தன...

சீக்கிரமாக தரை தட்டுப்பட்டால் நல்லது என்ற நிலையில் இருந்தான். மனதில் என்னென்னமோ நினைவுகள் வந்து போய்க்கொண்டிருந்தது.

ஒருவேளை குணா கூறியதை கேட்டிருக்க வேண்டுமோ... இறங்கியிருக்கக் கூடாதோ... சற்று நேரத்திற்குமுன் ஒரு கல்லை இந்த கிணற்றுக்குள் தூக்கியெறிந்தபோது, அது தரைதொட்டு சத்தம் எழுப்பும் என்று நினைக்க, சத்தம் வராமல் போனது நினைவுக்கு வந்தது. அய்யோ, ஒரு வேளை தப்பு செய்கிறோமோ.. என்று வெவ்வேறு எண்ணங்கள் அவனை பயமுறுத்திக் கொண்டிருந்தன.

'தாஸ்..', மேலிருந்து, சத்தமாக குணாவின் குரல் எஃகோ எஃபெக்டில் கேட்டது.

ஆனால், திருப்பி பதிலளிக்க முடியாத நிலையில் தாஸ் இறங்கிக்கொண்டிருந்தான். பதிலுக்கு குரல் எழுப்பினால், தன் உடம்பில் சக்தி இன்னும்  குறைந்து கைகளில் பிடி தளர்ந்துவிடுமோ என்று அஞ்சினான்.

'தாஸ்..' என்று மீண்டும் குணாவின் குரல் கேட்டது.

இன்னும்... இன்னும்... உள்ளே இறங்கிக் கொண்டிருந்தான். பிடி தளர ஆரம்பித்தது. கைகள் நடுக்கம் காட்டியது. கால் தசைகளும் ஓய்வு வேண்டும் என்று கெஞ்சியது... சற்று நேரம் அப்படியே நின்றான்.

முழுமையான ஓய்வு இல்லையென்றாலும்... தசைகள் கொஞ்சம் வலுபெற்றது.

'தாஆஆஆஸ்...' மீண்டும் குணாவின் குரல்...

இம்முறை அந்த குரல், அவனுக்கு எச்சரிக்கை மணியாக கேட்டது. 'வந்துடு தாஸ் இல்லன்னா செத்துடுவே' என்பது போல் அது மாயை காட்டியது...

தாஸ் மனதில் பயம் வந்துவிட்ட நிலையில் அவன் இன்னமும் உள்ளே இறங்க விரும்பவில்லை... இது ஜஸ்ட் ஒரு பாழடைந்த கிணறு அவ்வளவுதான்... இதில் ஏன் இறங்கி பார்ப்பானேன்... என்று மனது ஏடாகூடமாக குழம்பியதை அவன் விரும்பவில்லை...

சரி... இறங்கியது போதும்... திரும்பி ஏறிவிடுவோம் என்று முடிவெடுத்தான்.

காலை உயர்த்தி மேலே வைத்து, இரண்டு கைகளிலும் வலுவைப் போட்டு மூச்சைப்பிடித்துக் கொண்டு எழும்ப... ஹூம்ம்ம்ம்ம் என்று முக்கிக்கொண்டு எழும்பினான்... கைகள் ஏற்கனவே வலுவிழந்திருந்த நிலையில் பிடியை தானே விடுவித்துக் கொண்டது...

ஏ...ஏஏ...ஏஏஏய்ய்ய்ய்... என்று கதறிக்கொண்டு சரிந்தான்... அ..ஆ.ஆஆஆஆஆஆஆஆஆஆ என்று சத்தம் அந்த கிணற்றுக்குள் எஃகோ எஃபெக்டில் கேட்டது...

தரையை முட்டாமல் தான் நெடுநேரம் ஒரு அதள பாதாள குழிக்குள் விழுந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து மனம் படபடக்க ஆரம்பித்தது...

ஐயோ... என்னென்னமோ நினைத்து இந்த கிணற்றில் இறங்கியது வீணானதே... என்று எண்ணியபடி விழுந்துக் கொண்டிருந்தான்.

ஒரு சமயத்துக்குமேல், என்ன இது? இன்னும் விழுந்துக் கொண்டே இருக்கிறோம் என்று தோன்றியது... உடம்பு ஏற்கனவே வலித்துக் கொண்டிருத்தால், காற்றில் ஒரே சீரில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு சமயத்தில் சுகமாக மாறியது... வலியும், சோர்வும் சேர்ந்து அவனுக்கு தூக்கம் வருவது போல் தோன்றியது...

அது தூக்கமா! இல்லை மயக்கமா! என்று மனம் ஆராயும் நிலையில் இல்லாததால் அப்படியே தூங்கிப் போனான்...

அமைதி....

.
.
.
.
.
.
.
.
.

சிறிது நேரத்தில் எங்கோ விழுந்ததுபோல் உணர்ந்து பயந்து கண்விழித்து சட்டென்று எழுந்தான்... தலையில் டங் என்று ஏதோ முட்டியது...

பின்னனியில் இரயில் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது...

அந்த ரயிலுக்குள், சைடு அப்பர் பர்த்-ல் மேலே தான் படுத்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான்.

பலரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள்...

இது எப்படி ரயிலுக்குள் வந்தோம் என்று குழம்பிக்கொண்டிருந்தான்.


குழப்பம்... எப்படி..? எப்படி..? என்று இதயத்துடிப்பு கேள்வி கேட்டபடி துடித்துக் கொண்டிருந்தது.

கனவா..? ஆம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டான். ஆனால், உடம்பில் இன்னும் அந்த சோர்வும், தசைகளில் அந்த வலியும் இருக்கிறதே... என்று நினைத்துக் கொண்டான்.

சிலமுறை கனவில் அப்படித்தான்... விழுந்ததுபோல் கனவு வந்தால், எழுந்து பார்த்தால் அது உண்மையிலேயே மனதளவில் ஸிமுலேட் ஆகியிருக்கும்...

உடம்பு அந்த அதிர்ச்சிகளை உணர்ந்ததுபோலவே இருக்கும்... அப்படியென்றால் இது கனவுதான்... ஹஹ்ஹஹ்ஹ.... என்ன ஒரு கனவு... என்று நினைத்தபடி பர்த்-லிருந்து கீழே இறங்கினான்...

ரயிலில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்...

நேரே நடந்து கதவருகிலிருக்கும் வாஷ்பேஸினில் முகம் கழுவினான். கொஞ்சம்போல் தெம்பாக் இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்தான்.

முகத்தில் சிறு சிறு கீறல்கள் இருந்தது. இது எப்படி கனவில் கீறல்கள் கூட விழுமா... உடைகளை பார்த்தான். அதிலும் ஆங்காங்கே கீறல்கள்... மேலும் அவன் கழுத்துக் காலரில் மொபைல் மாட்டப்பட்டு இருந்தது. ஆனால் அணைந்திருந்தது.

அப்படியென்றால்... அது கனவில்லையா..? என்று குழம்பியவன் வயிற்றில் மீண்டும் பயம் தொற்ற ஆரம்பித்தது.

தனது பர்ஸை எடுத்துப் பார்த்தான்.

அதில் விசிட்டிங் கார்டுகள் இன்னமும் ஈரப்பதத்துடன் இருந்தது. முன்னாள் மாலை காட்டில் நனைந்ததின் அடையாளமது... வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் குறைவாக இருந்தது... தீ மூட்ட அந்த பணத்தை உபயகோகித்தது ஞாபகம் வந்தது. சந்தேகமே இல்லை... அது கனவே இல்லை... காடும், காட்டுக் கோவிலும், அந்த கிணறும் நிஜம்..

ஐயோ... அப்படியென்றால் நான் எப்படி இங்கே வந்தேன்...? என்று குழம்பியிருந்தபோது, ரயில் ஒரு ஸ்டேஷனில் வந்து நின்றது...

குழப்பத்துடன் இறங்கினான். பயங்கரமாக பசியெடுத்தது... அருகே இருக்கும் ஒரு ரயில்வே கடையில் அவசர அவசரமாக ஒரு காஃபி வாங்கி குடித்தான். பசிக்கு மிகவும் தெம்பாக இருந்தது. இன்னொரு காஃபி வாங்கினான்.... கடைக்காரன் அவனை ஆச்சர்யமாக பார்த்தான். குடித்தபடி அண்ணாந்து எதையோ பார்க்க... அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

அங்கிருக்கும் சிகப்பு கலர் LED டிஜிட்டல் கடிகாரத்தில் 5.30 மணி என்றும் 23ஆம் தேதி என்றும் காட்டிக்கொண்டிருந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ட்ரெய்ன் ஹார்ன் எழுப்பி மீண்டும் கிளம்பவே... ஓடிச்சென்று அதில் ஏறிக்கொண்டான். வாசலில் நின்றபடி, மீண்டும் அந்த கடிகாரத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போதுதான் விஷயம் புரிந்தது...

அந்த கிணற்றுத் துவாரத்திற்குள் விழுந்ததில்... அவன், கிட்டத்தட்ட 30 மணி நேரம் பின்னுக்கு கடந்து வந்திருப்பதை உணர்ந்தான்.

(தொடரும்...)



Signature

25 comments:

க ரா said...

அய்யா ராசா... ஹரிஷ் பின்றீங்க.. படிக்க படிக்க தலைய சுத்துது... கலக்கல் :)

அருண் பிரசாத் said...

தல, கலக்குது கதை + வயிறும் தான். செம த்ரில்லர்

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு வரியை வாசித்து முடித்ததும் மேலிருக்கும் புகைப்படத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன் . முகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

hamaragana said...

அன்புடன் நண்பரே suspense தாங்க முடியலை சீக்கிரம் அடுத்த களத்துக்கு வாங்க

VampireVaz said...

சிலிரிக்க வைக்கும் த்ரில்

நாடோடி said...

க‌தை ரெம்ப‌ திரில்லிங்க‌ போகுது ஹ‌ரீஸ்... அடுத்த‌ பாக‌த்திற்கு வெயிட்டிங்.

Kiruthigan said...

வெய்ட்டிங் சர்ர்...

Anonymous said...

Really Very Interesting........

அகல்விளக்கு said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... வயத்தக் கலக்குது...

ரொம்ப த்ரில்லிங் நண்பா.... :)

Unknown said...

என்ன இண்ட்ரஸ்டா எழுதறீங்க ஹரீஷ்.. ரொம்ப நல்லாயிருக்கு.. ரொம்ப நாள் கழிச்சு ஒரு தொடர்கதையை ஆர்வமாய் படிக்கறேன்.. ரொம்ப பவர்புல்லா இருக்கு உங்க எழுத்துக்கள்.. சூப்பர்.. சூப்பர்..

Raghu said...

உண்மையா என்ன‌ நினைக்க‌றேன்னு சொல்ல‌ட்டா ஹரீஷ்..உங்க‌ ச‌ட்டைய‌ புடிச்சு உலுக்க‌ணும் போல‌யிருக்கு ;))

ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ நான் ப‌டிச்ச‌துல‌யே (பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள்/ப‌திவ‌ர்க‌ள் உட்ப‌ட‌)‌ இதுதான் பெஸ்ட் த்ரில்ல‌ர்! ஏன், இதுவ‌ரைக்கும் நீங்க‌ எழுதின‌துலேயே இதுதான் டாப்.........இப்போதைக்கு ;))

Ramesh said...

செம!..படிச்சு முடிச்சிட்டு..என்னோட..கம்ப்யூட்டர்ல டேட்ட பாக்கறேன்...10.8.2010 ன்னு காமிக்குது...

Unknown said...

///செம!..படிச்சு முடிச்சிட்டு..என்னோட..கம்ப்யூட்டர்ல டேட்ட பாக்கறேன்...10.8.2010 ன்னு காமிக்குது... ///

ஹா ஹா ஹா.. இது கதைய விட பயங்கரமா இல்ல இருக்கு..

DREAMER said...

நன்றி இராமசாமி கண்ணன்... உங்கள் வாழ்த்துக்கும் ஊக்கமும் மேலும் எழுத ஊட்டமளிக்கிறது...

நன்றி அருண்பிரசாத்.... தொடர்ந்து படித்து ஆதரவளிப்பது மிக்க மகிழ்ச்சி

நன்றி பனித்துளி ஷங்கர்... ஒவ்வொரு முறையும், சென்ற அத்தியாயத்தின், காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு படத்தை வடிவமைத்து வருகிறேன். தங்களைப் போன்ற நண்பர்கள் படிப்பதோடல்லாமல், அந்த காட்சியின் மூலமும், கதையை ரசிக்க முடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கையில்...

வாங்க hamaragana... அடுத்த அத்தியாயத்திலிருந்து களம் மாறிடும்...

வாங்க வாஸ்... உங்களைப் போன்ற த்ரில்லர் விரும்பிகள் கதையை ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது...

வாங்க நாடோடி நண்பரே, அடுத்த பாகம் பாதி முடிச்சுட்டேன்... மீதி ரெடியானதும், சுடச்சுட பதிவிடுகிறேன்...

வாங்க CoolBoy கிருத்திகன், வெயிட்டிங்கிற்கு நன்றி... ரொம்ப நாள் வெயிட்டிங்ல போடாம இருக்க, முடிஞ்சவரை வேகமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

வாங்க கார்த்திகேயன். CS, மிக்க நன்றி...

வாங்க அகல்விளக்கு, உங்களைப் போன்ற நண்பர்கள், த்ரில்லிங்-ஐ ரசித்து ஊக்கமளிப்பது மகிழ்ச்சி...

வாங்க அப்துல்லாகாதர், எழுத்துக்கள் பவர்புல் என்று பாராட்டிய அருமை நண்பருக்கு என் வந்தனங்கள்...

DREAMER said...

வாங்க ரகு,
உங்க மறுமொழியைப் படிச்சதுமே, நீங்க என் சட்டையை பிடிச்சு உலுக்குனதா, இல்யுஷனா நினைச்சிக்கிறேன்.

//ச‌மீப‌ நாட்க‌ள்ல‌ நான் ப‌டிச்ச‌துல‌யே (பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள்/ப‌திவ‌ர்க‌ள் உட்ப‌ட‌)‌ இதுதான் பெஸ்ட் த்ரில்ல‌ர்! ஏன், இதுவ‌ரைக்கும் நீங்க‌ எழுதின‌துலேயே இதுதான் டாப்.........இப்போதைக்கு ;)) //

இதைவிட எனக்கு ஒரு அவார்டு வேணுமா..? உங்க ஸ்டைல்ல சொல்லனும்னா, மசக்கலி பாட்டோட, ஆரம்பத்துல வர்ற ஹம்மிங் இப்ப எனக்கு உள்ள கேக்குது...

வாங்க ரமேஷ்,
கதையைப் படிச்சே நீங்க டைம் ட்ராவல் பண்ணிட்டீங்களா...? ஆஹா... மிக்க மகிழ்ச்சி... நண்பர் அப்துல்லாகாதர் சொன்னது போல், கதையைவிட, இது ரொம்ப நன்றாக இருக்கிறது.

-
DREAMER

சீமான்கனி said...

ஹரீஷ் நானும் அந்த கேணிக்குள்ளே பயணித்து வந்ததுபோல் ஒரு உணர்வு...நடுவில் ச்சே கனவானு நானும் ஒரு நிமிஷம் எமாத்திடீங்கலேன்னு நினைத்தேன் நல்லவேலை இல்ல...முழுதாய் படிக்க படிக்க ஆர்வம் அதிகமாகுது என்னை போல் ஹாரர் பைத்தியங்களுக்கு நல்லா தீனி திரில் குறையாம நல்லா தொடருங்கள் வாஆஆஆஆஆஆஆஆஆஆஆழ்த்துகள்....சும்மா ஒரு திரில்லுக்காக..

தினேஷ்குமார் said...

வணக்கம் ஹரீஸ்
ஒரு மர்மதேசத்துல பயணிக்கிற மாதிரி இருக்கு நிஜமாவே நம்ம வாழ்க்கைல நடந்தா அப்பா நினைத்து பார்க்கும்போதே ரெக்க முளைத்து பறக்கற மாதிரி இருக்கு
http://marumlogam.blogspot.com
http://mosuinkavi.blogspot.com

DREAMER said...

வாங்க சீமான்கனி நண்பரே...
உங்களது த்ரிஇஇஇஇஇஇல்ல்லாஆஆஆஆன வாஆஆஆஆழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா...

வாங்க தினேஷ்குமார்,
நிஜத்துல இந்த மாதிரி நடந்தா உண்மையிலேயே ரொம்பவும் நல்லாத்தான் இருக்கும்... உங்கள் கவிதைகளை படித்து வருகிறேன்... நல்லாயிருக்கு...

-
DREAMER

Unknown said...

ஆஆஆ.. இன்னும் அடுத்த பாகத்த ரிலீஸ் பண்ணலயா நீங்க.. காலையில ஆபிஸ் வந்தவுடனே நேரா உங்க பிளாக்கதான் ஓப்பன் பண்றேன் இப்போ.. சீக்கிரம் ரிலீஸ் பண்ணிடுங்க..

அப்புறம் ஒரு விசயம்.. என் பேரு அப்துல்காதர்.. நீங்க மறுமொழிகள்ல எல்லாம் அப்துல்லாகாதர்னு எழுதறீங்க..

வேங்கை said...

ஹாய் ஹரிஷ்

குணா என்ன ஆணாரு

சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க

Shanmugam said...

waiting for next episode..
:(

DREAMER said...

@அப்துல்காதர்,
உங்கள் பெயரை, அப்துல்லாகாதர் என்று தவறாக அழைத்ததற்கு மன்னிக்கவும்... அலுவலுக்கு மத்தியில் அடுத்த பாகம் எழுத, கொஞ்சம் அதிகம் நேரம் பிடிக்கிறது... நாளைக்கு சாயந்திரம் அடுத்த பாகத்தை பதிவிடுறேன்...

வாங்க வேங்கை...
அடுத்த பதிவுல, தாஸ் குணா மட்டுமில்லாம இன்னும் சில கதாபாத்திரங்களும் அறிமுகமாகுறாங்க... சீக்கிரம் போட்டுடறேன்...

வாங்க ஷண்முகம்,
Will post the next episode by tommorrow evening... ThanX 4 your patience...

-
DREAMER

செம்மொழியான் said...

அடுத்த பாகத்திற்காக எதிர்பார்ப்புடன் 30 மணி நேரம் முண்ணோக்கி பயணிக்க வேண்டும் போல் உள்ளது....

எதிர்பார்ப்புடன்

செம்மொழியான்

DREAMER said...

வணக்கம் செம்மொழியான்...
ஆஹா, உங்களது இந்த க்ரியேடிவ் கமெண்ட்-ஐ இப்போதான் பார்த்தேன். எனக்கும் ஃபயூச்சர்ல ட்ராவல் பண்ணி, இந்த கதையோட க்ளைமேக்ஸ்-ஐ படிக்கணும்னு ஆசையா இருக்குங்க... கிணத்துக்குள்ள இறங்கிடுவோமா..?

-
DREAMER

சமுத்ரா said...

கலக்கல் :)அது கிணறா? இல்லை warm hole ஆ? Great writing..

Popular Posts