Monday, April 26, 2010

பதின்ம வயது குறிப்புகள் - [ தொடர்பதிவு ]



என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் ரகுவுக்கு நன்றி!

சென்னை வேப்பேரியில் உள்ள 'பெயின்ஸ் பாப்டிஸ்ட்' என்ற மெட்ரிக் பள்ளியில் படித்தேன். படிப்பில் சூப்பர் இல்லையென்றாலும், சுமாராக படிப்பேன். ஆனாலும், கடைசி பெஞ்சில்தான் என்னை உட்கார வைத்தார்கள். காரணம், நான் உயரம் அதிகம். லாஸ்ட் பெஞ்ச்-ல் அமர்ந்ததால் சில சௌகரியங்கள்தான். நன்றாக அரட்டையடிக்க முடிந்தது. பல தலைப்புகளில் அரட்டை அடித்து அடித்து அங்கேதான் 'உலகப்பொது அறிவு!?!?' விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போது, கராத்தே கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் பள்ளியில் கராத்தே வகுப்பில் சேர்ந்தேன். 3 வாரம் கடுமையான பயிற்சிகள். 'ஹே ஹே' என்று ஆக்ரோஷமாக குரல் எழுப்பி காற்றில் கைகளை குத்திக்கிழித்து கொண்டு கம்பீரமாக நடந்துக்கொண்டிருந்த அந்த 3 வாரமும் மனதில் நல்ல ஒரு உத்வேகம். எப்படியும் கராத்தேவில் பெரியா ஆளாய் வரலாம் என்று நினைத்திருந்தேன், ஆனால், எனது கராத்தே மாஸ்ட்டர் திடீரென்று 3 நாட்களுக்குமேல் வகுப்புக்கு வரவில்லை... எப்போது கேட்டாலும், லீவ்... என்றார்கள். என்ன ஏது என்று தெரியாமல், சீனியர் ஒருவர் வழிநடத்த, வெறுமே 'ஹேய் ஹேய்' என்று சற்று டல்லாக நின்று கத்திக் கொண்டிருந்தோம். பிறகுதான் ஒரு உண்மை தெரியவந்தது, எங்களது கராத்தே மாஸ்ட்டர், தனது காதலியுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டதாக சொன்னார்கள். கராத்தே வகுப்பு கேன்ஸல்... அவர் காதலியை இழுத்துக்கொண்டு மட்டும் ஓடவில்லை..! நான் வருங்காலத்தில் கராத்தேவில் வாங்கவிருந்த 'கருப்பு பெல்ட்'டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்..! இல்லையென்றால் நானும் இன்று ஒரு கராத்தே மாஸ்ட்டராகி, அநியாயங்களை தட்டி கேட்கும் ஒரு ஹீரோவாக இருந்திருப்பேன்.

இது தவிர என் நினைவுக்கு வருவது, நண்பர்களுடன் க்ரிக்கெட் ஆடி, ஒருமுறை ஒரு நண்பனின் கண்பட்டி கிழிந்து, ரத்தம் சொட்ட சொட்ட அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற நாளிலிருந்து பேட்-ஐயும் பந்து-ஐயும் பரங்குமேல் தூக்கி போட்டது. இன்னொரு சம்பவம், நண்பனின் காதலி ஒருத்தி திடீரென்று மொட்டை அடித்துவர, அவன் அழுது புலம்பி பிறகு காதலியை மறந்த வேடிக்கையான சம்பவம், இதை ரொம்ப நாளாக நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம். 'உன் காதலுக்கு கண்ணு மட்டுமில்லடா... முடியுமில்ல..' என்று கூறி ஓட்டிக்கொண்டிருந்தோம். இருந்தாலும் அவன் காதல் ஒரு 6 மாதம் பொறுத்திருக்கலாம்..!

சினிமா சினிமா..
இது எல்லாவற்றையும்விட என்னுள் நிகழ்ந்த இன்னொரு முக்கியமான மாற்றம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நான் விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் மட்டுமே பார்த்து வந்த சினிமா என்கிற விஷயம், என் ஆழ்மனதில் பதிந்து ஒரு அங்கமாக மாறிய ஒரு முக்கிய சம்பவம் அது. அதற்கு காரணம் நான் பார்த்து மிகவும் மலைத்துப் போன ஒரு படம்.

திரைப்படம் பார்க்க என் பெற்றோர்களுடன் தியேட்டருக்கு போவது மட்டுமே வழக்கமாக இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு அனுமதி வாங்கி, முதல்முறையாக நான் ஒரு படத்திற்கு என் நண்பர்களுடன் சென்றேன். படம் : 'ஜூராஸிக் பார்க்'. என் வீட்டுக்கு அருகில் இருந்த, 'புரசைவாக்கம் வசந்தி' தியேட்டருக்கு சென்றேன். அரங்கின் உள்ளே... ஒரு 2.15 மணி நேர ஆச்சர்யம், அந்த படம் முழுவதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. அன்று இரவு முழுவதும் அந்த படத்தை பற்றியே நினைப்பாக இருந்தது. எனக்கு ஜூரம் வந்துவிட்டது. என் பெற்றோர்கள் பயந்துவிட்டார்கள்... நான் பயந்துவிட்டேனோ என்று அலறினார்கள். ஆனால் ஜூரத்தின் காரணம், பயம் அல்ல, அந்த படத்தின் பாதிப்புதான் என்று எனக்கு தெளிவாக புரிந்தது. ஒரு படத்தை இந்தளவுக்குக் கூட ஈர்ப்புத்தன்மையோடு எடுக்க முடியுமா என்று மலைத்துப் போனேன். இதன்பிறகு நான் திரைப்படம் பார்த்த கண்ணோட்டம் மாறியது. ஒவ்வொரு படத்திலும் நான் ஜூராஸிக் பார்க்கின் ஈர்ப்புத்தன்மையை தேடினேன். வெகு சில படங்களிலேயே அது கிடைத்தது.

இந்தப்படம் பார்ப்பதற்கு முன்வரை, நான் எனது Career குறித்து சொந்த கருத்தாக எந்தவொரு முடிவும் எடுத்ததில்லை... அம்மா டாக்டராக வேண்டும் என்பார்கள், அப்பாவும் சம்மதிப்பார், உறவினர்கள் சிலர் வேறு சில ஐடியாக்களை சொல்வார்கள். நானும் சரி ஆயிட்டாப்போச்சு என்று தலையாட்டுவேன். ஆனால், இந்த படம் பார்த்தபிறகு எப்படியாவது நாமும் ஒரு திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது. பிறகு எப்படி சும்மா இருக்க முடியும்..! நண்பர்களிடம் சில புனைவு கதைகளை கூற ஆரம்பித்தேன்! பாவம், எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ..! ஆனால், 'நல்லாயிருக்கு கதை' என்று உற்சாகப்படுத்தினார்கள்.

நடிகன்
இந்த நேரத்தில் பள்ளி ஆண்டுவிழாவில், ஒரு நாடகம் இயக்க விண்ணப்பத்திருந்தேன். ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை..! வேண்டுமானால் நாடகத்தில் நடி' என்று கேட்டார்கள். சரி என்று ஒப்புக்கொண்டேன். என்ன கதாபாத்திரம் கிடைக்கும், எப்படி நடிக்கலாம், என்று என்னென்னமோ என் எண்ணங்கள். ஆனால், நடிக்க கிடைத்த கதாபாத்திரம் என்ன தெரியுமா, ஒரு பிணத்தை தூக்கிச்செல்லும் நால்வரில் ஒருவன். இங்கும் உயரம்தான் காரணம். மற்ற மூவரும் என் உயரம் என்பதால் எனக்கு இந்த பாத்திரம்தான் கிடைத்தது.

பித்து கம்பெனி
பத்தாவது படிக்கும்போது, பார்த்தசாரதி என்ற இன்னொரு நண்பனும் இதே போல் இயக்குனராக வேண்டும் என்ற பித்துபிடித்து அலைவதாக (அப்படித்தான் அறிமுகப்படுத்தினார்கள்) கூறி என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார்கள். நானும் அவனும் சேர்ந்து பித்துபிடித்து அலைந்தோம். லாஸ்ட் பெஞ்சில் உட்கார்ந்துக் கொண்டு கதை கதையாக பறிமாறிக்கொண்டோம். எங்கள் இருவரின் ஆர்வம் பள்ளிக்கே தெரிந்தது. ஏதோ, படிப்பில் கோட்டைவிடாமல் இருந்தால் சரி, என்று விட்டுவிட்டார்கள்.

முதல் படப்பூஜை
பத்தாம் வகுப்பு, பப்ளிக் எக்ஸாம் நெருங்கும் சமயம், நானும் பார்த்தசாரதியும்... ஒரு முடிவுக்கு வந்தோம். பப்ளிக் எக்ஸாம் முடிந்ததும், விடுமுறையில் ஒரு படத்தை எடுத்துவிடலாம் என்று... முடிவுசெய்தோம். ஆர்வமிகுதியால் ஏற்ப்பட்ட முடிவுதான். கதை தயார் செய்தோம், ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் கதை, 'இடைக்கண்' என்று பெயர் வைத்தோம், படத்திற்கு, நண்பன் பார்த்தசாரதி வீட்டிலேயே பூஜை போட்டோம். நண்பர்கள் பலரும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஜெயமுருகன் என்று ஒரு நண்பன் தனது அப்பா அட்வர்டைஸிங் துறையில் இருப்பதாகவும், அவரிடமிருந்து நல்ல ஒரு கேமிராவை வாங்கி வருவதாக வாக்களித்தான். நான் கீ-போர்டு வாங்கி கற்றுக்கொண்டிருந்த சமயம் என்பதால், நானே இசையையும் கவனிப்பதாக முடிவானது. தீம் மியூஸிக் ரெடி செய்தோம், அதை ஒரு ரெக்கார்டிங் கடைக்கு போய் கேஸட்டில் பதிவு செய்து நண்பர்களின் பெற்றோர்கள், எங்களை ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் என்று பலருக்கும் போட்டுக்காட்டி பாராட்டுக்களை பெற்றோம்.

பப்ளிக் எக்ஸாம் முடிந்தது...

என்னையும் என் நண்பன் பார்த்தசாரதியையும் தவிர, எங்களுடன் சுற்றிக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் அனைவரும், மிகக்குறைந்த மதிப்பெண் வாங்கி தேறியிருந்தார்கள்.

செம்ம டோஸ்..! எல்லா வீட்டிலிருந்தும் எங்கள் படத்துக்கு கோர்ட் நோட்டீஸ் இல்லாமலே தடை அறிவிக்கப்பட்டது, எப்படியோ நானும் பார்த்தசாரதியும், வீட்டில் டோஸ் வாங்காமல் தப்பித்தோம். ஆனாலும், வீட்டில் எங்கள் கலைக்கனவுக்கு, முன்பு கொடுத்த ஒத்துழைப்பு இல்லாமல் போனது. நானும் என் பெற்றோர்களை சமாதானம் செய்து, 'சரி போனாபோவுது, நான் டாக்டரே ஆயிடுறேன்' (என்னமோ! டாக்டர் சீட்டு சும்மா கொடுக்கிறமாதிரி) என்று  அவர்களுக்கு சமாதானம் சொல்லும்விதயாம் கமிட் செய்துகோண்டேன். ஆர்வம் குறைந்ததே தவிர ஆசை குறையவில்லை, +2 தேர்வில், நல்ல மதிப்பெண்தான் ஆனால், வெட்னரி டாக்டர் சீட்டுக்குக்கூட அந்த மார்க் போதவில்லை. என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துப் பார்க்க, நாளை நாம் எடுக்கப்போகும் படத்துக்கு ஸ்க்ரிப்ட் டைப் செய்யவும், டைட்டில் கிராஃபிக்ஸ் போன்ற கிராஃபிக்ஸ் சமாச்சாரங்களை செய்யவும், போஸ்ட்டர் டிஸைன் செய்யவும் என்று இப்படி பல விஷயங்களுக்கும் சாதகமாக இருப்பது கம்ப்யூட்டர் கல்விதான் என்று தோன்றியதால், BSc. Computer Scienceல் சேர்ந்தேன்.

என் வீடு 'திருநின்றவூர்'இல் (ஆவடிக்கு அருகில்), என் கல்லூரியோ மீஞ்சூரில்(அங்கேதான் சீட் கிடைச்சுது), வீட்டிலிருந்து கல்லூரிக்கு 2 மணி நேரத்துக்குமேல் இரயிலில் பயணம்.

பயணத்தில் பொழுதுபோகவேண்டுமே என்று புத்தகங்களை மூர்மார்க்கெட்டில் வாங்கி படிக்கும் பழக்கம் ஏற்பட்டது, ராஜேஷ்குமார், ப.கோ.பி, இந்திரா சௌந்தர்ராஜன், (சுஜாதா புத்தகங்கள் மட்டும் ஏனோ அப்போது மூர்மார்க்கெட்டில் கிடைக்கவில்லை) என்று புத்தகத்தம் பக்கம் கவனம் திரும்பியது. இதுநாள்வரை மிகவும் சுருங்க சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறோம் என்று எனக்கு இந்த புத்தகங்கள் உணர்த்திக்கொண்டிருந்த காலக்கட்டம். கல்லூரியில் புதிதாய் கிடைத்த நண்பர்களுக்கு கதை சொல்லி(வேற வழி), அவர்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொண்டிருந்தேன். 'மச்சான், நீ பெரிய ஆளா வருவேடா' என்று திருட்டு தம் அடித்துக்கொண்டே என் நண்பன் ஒருவன் சொன்னதும், சிகரெட் புகையில் 'வருவேடா! வருவேடா வருவேடா!' என்று கிராஃபிக்ஸில் தோன்றியபடி அசரீரி ஒலிக்க, அந்தப்புகை கிராஃபிக்சுடன்  எனது பதின்ம வயது ஃப்ளாஷ்பேக்-ஐ முடித்துக் கொள்கிறேன்.

இன்றளவும் கலைத்துறையில் கால்பதிக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்..!

இப்படியாக, என் பதின்ம வயது நினைவுகளில் பெரும்பாலும் என்னை சினிமாவே ஆட்கொள்கிறது. பல்சுவையான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்து நீங்கள் படிக்க வந்திருந்து உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தால் தயவு செய்து மன்னித்துவிடவும்.

சுவாரஸ்யமான தலைப்பைக் கொண்ட இந்த தொடர்பதிவைத் தொடர இந்த நண்பர்களை அழைக்கிறேன்.




Signature

Friday, April 23, 2010

நகுலன் துப்பறியும் - ஃபோட்டோ - [சிறுகதை]


 
7.30 மணி!

மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்..!

என் ஆபீஸ் கேன்டீனில், பெரிய சுவர் போன்ற கண்ணாடி ஜன்னலில், சென்னை நகரத்து டிராஃபிக்கில் சிக்கி, கலர் கலர் லைட்களில் மின்னியபடி ஊர்ந்து செல்லும் வண்டிகளை வேடிக்கை பார்த்தபடி, டிப்-டீ-யை குடித்துக் கொண்டிருந்தேன். அந்த கேன்டீனின் இரைச்சலிலும் ஒருவித அமைதி blend ஆவதை உணர்ந்துக் கொண்டிருந்தபோது, என் மாடர்ன் தியானத்தை கலைத்தபடி ஒரு குரல் கேட்டது...

'இப்ப நான் என்னங்க செய்றது..?'

'.....'

'சரி..'

'.....'

'நீங்க லீவ் போட்டுட்டு வரமுடியாதா..?'

'.....'

'ப்ச்... சரி... நானே பாத்துக்குறேன்..'

'.....'

குரலுக்கு உரியவர் எனது சக-ஊழியர்.... மிஸஸ். கீதா குமார்... அவரது கணவர் UKயில் வேலை செய்கிறார். அவரிடம்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

ஃபோனை வைத்துவிட்டு, என் டேபிளில் எதிர்சேரில் வந்து சலிப்புடன் அமர்ந்தார்...

'என்ன கீதா... என்னாச்சுங்க..?'

'இல்ல சதீஷ்.. ஒரு புது மாதிரியான ப்ராப்ளம்..?'

'என்ன ப்ராப்ளம்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?'

'லாஸ்ட் வீக், வீட்ல, என் பையன் வினய்-யோட 7th பர்த்டே கொண்டாடினேன்ல..!'

'ஆமா..?'

'அந்த பங்ஷன்ல எடுத்த ஃபோட்டோஸை, என் ஃப்ரெண்ட்சுங்க எல்லாருக்கும் மெயில் பண்ணியிருந்தேன்..'

'சரி..!'

'அதுல என் ஃப்ரெண்டு ஒருத்தி, ஒரு அவுட் ஆஃப் போகஸ்ல விழுந்த ஒரு ஃபோட்டவைப் பாத்து, அதுல இருக்கிறது யாருன்னு கேட்டா..?'

'சரி..'

'ஆக்சுவலா.. அந்த ஃபோட்டோ, பார்ட்டிக்கு அடுத்த நாள் என் பையன் சும்மா வீட்டை சுத்தி சுத்தி எடுக்கும்போது க்ளிக் பண்ணியிருக்கான்..'

'அதனாலென்ன..?'

'அந்த ஃபோட்டோவுல யாரோ நிக்கிற மாதிரி ஒரு உருவம் விழுந்திருக்கு..'

'......'

' நோ இட் சவுண்ட்ஸ் ஸ்டுப்பிட்...! ஆனா, அந்த ஃபோட்டவுக்கான சரியான விளக்கத்தை என்னால சொல்லமுடியல... அந்த ஃப்ரெண்டு வேற, நிறைய திகில் நாவலா படிக்கிறவ, அவகிட்ட இந்த ஃபோட்டோ எடுத்த சிச்சுவேஷனை விளக்கி சொன்னதும், அது ஏதோ அமானுஷ்ய உருவம்தான்னு முரண்டு பிடிக்கிறா...!'

'இவ்வுளவுதானேங்க விஷயம்.. இதுக்கு போய் ஏன் ரொம்ப வேதனைப்படுறீங்க.. அது ஜஸ்ட் ஒரு இல்யூஷன் ஃபோட்டோன்னு விட்டுடவேண்டியதுதானே..?'

'இல்ல... என் ஃப்ரெண்டு சொன்னதை என்னால முழுசா மறுக்கமுடியல... கொஞ்சம் ஸ்பூகியாத்தான் இருக்கு... நம்புறதா வேண்டாமான்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு..'

'விடுங்க கீதா... ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க..?... கொஞ்சம் இருங்க வர்றேன்..' என்று எழுந்து சென்று, ஒரு டீ-யை வாங்கிக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.

'தேங்க்ஸ் சதீஷ்..'

'இதைத்தான் உங்க ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லி அவரையும் டென்ஷன் படுத்திக்கிட்டிருக்கீங்களா..?'
'ஆமா.. எனக்கு வேற ஆப்ஷன் தெரியல...'

'அந்த ஃபோட்டோ இப்ப வச்சிருக்கீங்களா..?'

'இருக்கு' என்று கூறி தனது செல்ஃபோனை எடுத்து அதில் அந்த ஃபோட்டோவை காண்பித்தார்...

உண்மைதான், அந்த ஃபோட்டோவில், யாரோ ஒருவர் புகை உருவமாய் நிற்பதைப் போல் துல்லியமாகத் தெரிந்தது. அதுவும் ஒரு 3 வயது குழந்தை நின்று வெறித்துப் பார்ப்பதுபோல் கொஞ்சம் தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும், இன்னும் இந்த புகைப்படத்தை பெரிதாகப்பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...

'இதைவிட பெரிய சைஸ்ல இல்லியா..?'

'என் மெயில்ல இருக்கு...'

'எனக்கு ஃபார்வெட் பண்ணிவிடுங்க... நான் இதுக்கு வேற ஒரு சொல்யூஷன் சொல்றேன்..'

'என்ன சொல்யூஷன்?' என்று கேட்டார்...

மனதில் எனது நண்பனும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளனுமான நகுலன்- நினைத்துக் கொண்டு 'முதல்ல அந்த ஃபோட்டவை அனுப்புங்க நான் சொல்றேன்...' என்றேன்.

- - - - - -

அடுத்த நாள்...

10 மணிக்கு  நகுலனுக்கு ஃபோன் செய்தேன்...

'சொல்றா சதீஷ்...?!'

'ஹே மச்சான், ஒரு ஹெல்ப்டா...?'


'அது எப்பவோ சரியாயிடுச்சுடா..'

'வேறென்ன பிரச்சினை..?'

'உன்னை நேர்ல மீட் பண்ணனும்...'

'அதான் சண்டே என் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே..?'

'அது வேற, கண்டிப்பா வர்றேன்... இது வேற ப்ராப்ளம்.. உன் ஃபீல்டுதான்'

'சரி, எங்க மீட் பண்லாம் சொல்லு..?'

'என் வீட்டுக்கு வர்றியா..'

'ம்ம்ம்... வேற எங்கேயாவது..?'

'சரி, அப்ப ஒண்ணு பண்ணு, என் ஆபீஸ்க்கு வந்துடு.. இங்கேயே ஃபுட் கோர்ட் இருக்கு.. மீட் பண்ணிக்கிலாம்...'

'ஓகே... உன் ஆஃபீஸ்ல எங்க இருக்கு..?'

சொன்னேன்...

'சரி... வந்துடுறேன்..'

- - - - - -

என் ஆபீஸின் டெரஸ்-இல் அமைந்திருந்த ஓபன் ஃபுட் கோர்ட்-ல் இருவரும் அமர்ந்துக் கொண்டிருந்தோம்....

நான் டீயும், நகுலன் டொமேட்டோ சூப்பும் குடித்துக்கொண்டிருந்தான்.

ஃபோட்டோ விஷயத்தை கூறி, அவனிடம் அந்த ஃபோட்டோவின் ப்ரிண்ட்அவுட்- காண்பித்தேன்.

சூப் குடித்துக்கொண்டே ரசனையுடன் ஆழ்ந்து அந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

அவன் மனதை படிக்க முடியாமல், 'வாட் டு யு திங்க்' என்று கேட்டேன்..?

'இந்த ஃபோட்டோ என்ன டைம் எடுத்தது..?'

மதியம் 3 மணியிருக்கும்னு கீதா சொன்னாங்க.

'இவங்க சன் பேரு என்ன சொன்னே..?'

'ம்ம்ம்... ஆங்.. வினய்..'

'நீ அந்த பையனோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தியா?'

'இல்ல.. அப்போ ஷிஃப்ட் இருந்தது..'

'சரி, அவங்க இந்த ஃபோட்டோவைப் பார்த்து பயப்படறதுக்கு காரணம் என்ன..? மீன்... ஜஸ்ட் ஒரு ஃபோட்டோதானேன்னு விடாம ஏன் அவங்க டிஸ்டர்ப் ஆகுறாங்க..?' என்று கேட்டான்.

'மச்சான் பிரச்சினை என்ன தெரியுமா..? அவங்க அந்த வீட்டுக்கு சமீபத்துலதான் ஷிஃப்ட் ஆயிருக்காங்க.. இதுக்கு முன்னாடி அந்த வீட்ல, இந்த ஃபோட்டோவுல இருக்கிற மாதிரியே ஒரு 3 வயசு குழந்தை இருந்திருக்கு... அவங்க காலி பண்ணதுக்கப்புறம்தான் இவங்க இங்க குடியேறியிருக்காங்க..'

'ம்ம்ம்... ஸ்பூக்கி..' என்று மீண்டும் அந்த ஃபோட்டோவை பார்த்தபடி என்னிடம். 'டேய் இன்னொரு கப் சூப் சொல்லுடா..?' என்றான்.

என்ன இவன் சீரியஸாக இல்லாமல் சூப் கேட்கிறானே என்று சலிப்புடன் எழுந்து இன்னொரு கப் சூப் வாங்கி வந்தேன்.

குடித்துக்கொண்டே... 'இப்ப நீ ஃப்ரீயா..?' என்றான்.

'இல்ல... ப்ரேக்ல வந்திருக்கேன்.. எதுக்கு.?'

'நான் இந்த வீட்டுக்கு போய் இந்த ஃபோட்டோ எடுத்த இடத்தை பாக்கணும்' என்றான்

'டேய்... என்னால இப்ப வரமுடியாதுடா?' என்றேன்

'சரி, நீ வராத, எனக்கு அந்த வீட்டை பார்க்க ஏற்பாடு பண்ணு..'

'நான் ஃபோன் நம்பர் தர்றேன், இன்னிக்கி கீதா லீவ்லதான் இருக்காங்க... நீயே போய் பாரு.. நான் ஃபோன் பண்ணி பேசிடுறேன்' என்றான்.

'ஓகே..' என்று அருகில் இருந்த மினரல் வாட்டர் பாட்டல் எடுத்து ஒரே மடக்கில் முழு பாட்டிலையும் குடித்துமுடித்தான். நான் அவன் குடித்ததையே பார்த்துக் கொண்டிருத்தை கவனித்து என்னைப் பார்த்து, 'இது நான் அதிகமா குடிச்ச சூப்- டைல்யூட் பண்ணிடும்' என்று என்னிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

- - - - - -

நான் மீண்டும் ஆஃபீசில் உட்கார்ந்து வேலை செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தாலும், என் மனம் முழுவதும், நகுலன் என்ன மாதிரி இந்த கேஸை இன்வெஸ்டிகேட் செய்யப்போகிறான் என்று ஆவலாக இருந்தது. சிறு வயதில் நான் படித்த நாவல்களில் ஒவ்வொரு ஏரியாவாக சென்று, தடயங்களைத் தேடி, புதுப்புது மனிதர்களை சந்தித்து பேசும் கதாநாயகர்களை யூகித்து மலைத்திருக்கிறேன்.

ஆனால், அவர்களெல்லாம் க்ரைம் துப்பறிவாளர்கள். ஆனால், இவன் அமானுஷ்ய ஆராய்ச்சியாளன் என்பதுதான் நகுலனின் மீது எனக்கு அதிக ஈர்ப்பு வருவதற்கு காரணம். அதுமட்டுமன்றி, இவன் என் பள்ளி நண்பன். ஒரே பெஞ்ச்சில் அமர்ந்து இவனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது ஆளே ஸ்டைலாக மாறிவிட்டான். எப்படி திடீரென்று இப்படி ஒரு தொழிலுக்கு வந்தான். இவன் வாழ்வில் ஏதோ நடந்திருக்கிறது. என்னவென்று ஞாயிறன்று கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இப்படி நான் நகுலனை நினைத்துக் கொண்டு வெறுமனே மாணிட்டரை பார்த்துக் கொண்டிருக்க, என் செல்ஃபோன் ஒலித்தது.

நகுலன்தான்...

'சொல்லுடா..?'

'மச்சான் நான் அவங்க வீட்டுக்கு போய் பாத்தேன்..'

'என்ன ஆச்சு..?'

'அந்த ஃபோட்டோ எடுத்த ரூம்ல நான் சந்தேகப்பட்டமாதிரி, எதுவுமே இல்ல, நோ ரிஃப்ளக்ஷன், நோ ஃபோட்டோ ஃப்ளோஅப்ஸ்... இது வேற ஏதோன்னுதான் எனக்கும் தோணுது...'

'நானும் அப்படித்தான்டா நினைச்சேன்..'

'என்னன்னு நினைச்சே..?'

'இல்ல, அந்த ஃபோட்டோவுல இருக்கிற, அந்த 3 வயசு பையன், அந்த வீட்டை காலி பண்ணதுக்கு அப்புறம் இறந்திருப்பானோ, அவனோட ஸ்பிரிட் ஏதாவது, அங்க சுத்திக்கிட்டிருக்கோன்னுதான் தோணுது..' என்று எனது கணிப்பை கூறினேன்.

'ம்ம்... சேன்ஸஸ் இருக்கு..! இதுக்கு முன்னாடி அந்த வீட்ல குடியிருந்தவங்களோட அட்ரஸ் வாங்கியிருக்கேன். இப்போ அங்கதான் போயிட்டிருக்கேன்.. உனக்கு எப்ப ஆஃபீஸ் முடியும்..'

'டேய்.. எனக்கும் உங்கூட வரணும்போல இருக்குடா.. ஆனா, ஆஃபீஸ் எனக்கு 8மணிக்குதான் முடியும்..'

'ம்ம்... சரி, நானே போய் பாத்துட்டு வர்றேன்..' என்று ஃபோனை வைத்தான்.

- - - - - -

இரவு 10.45 மணிக்கு நானும் நகுலும் எனது ஃப்ளாட்டில் உட்கார்ந்திருந்தோம்.

டிவியில் க்ரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. நகுலன் ஆர்வமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'டேய்.. நகுல்?'

'இருடா..! எதுவா இருந்தாலும் மேட்ச் முடிஞ்சதும் பேசுவோம்..' என்றான்.

சரிதான், இவனுக்கு க்ரிக்கெட் பேய் பிடித்திருக்கிறதுபோல என்று நினைத்து அமைதிகாத்தேன். எனக்கும் க்ரிக்கெட் பிடிக்கும்தான், ஆனால், ரொம்ப தீவிர ரசிகனெல்லாம் கிடையாது. பள்ளிநாட்களில் தீவிரமாக ஆடியதோடு சரி... இப்போது தூரத்திலிருந்து ஆதரவு மட்டும் கொடுத்து வருகிறேன்.

சில நிமிடங்களில் மேட்ச் முடிந்ததும், என் பக்கம் திரும்பினான்.

'என்னடா, நீ இன்னிக்கு என்ன இன்வெஸ்டிகேட் பண்ணேன்னு கேட்கலாம்னு பாத்தா, இப்படி மேட்ச் பாத்துக்கிட்டு உட்கார்ந்துட்டே..?'

'ஹே! கூல் டவுன்! ரிசல்ட் சொல்றதுக்காகத்தானே இங்க வந்திருக்கேன்... ஏன் இப்படி அவசரப்படுறே..?'

'இல்லடா... ஒரு ஆவல்தான்’

‘என்ன ஆவல்..?’

உன் லைஃப்ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்குடா.. எனக்கும் உன்கூட இன்வெஸ்டிகேஷன்ல கூட வரணும்னு ஆசையா இருக்கு..'

'அப்ப ஒண்ணு பண்ணு, எனக்கு அஸிஸ்டெண்ட்டா வந்து ஜாய்ன் பண்ணிக்கோ... ஓகேவா..?' என்று சிரித்தபடி கேட்டான்.

'வேலையை விட்டுட்டு... இப்ப...' என்று இழுத்தேன்.

'சும்மாதான் கேட்டேன்... விடு.. இன்னிக்கு மிஸஸ்.கீதா குமாரோட வீட்டுக்கு போய் ஃபோட்டோ எடுத்த அறைக்குள்ள EMF மீட்டர் வச்சி செக் பண்ணிப் பாத்தேன்..'

'EMF மீட்டர்னா..?'

'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டு மீட்டர்... இதை GHOSTMETERனும் சொல்லுவாங்க..'

'சரி.. இதை வச்சி அந்த இடத்துல என்ன பண்ணே..?'

'அந்த இடத்துல எதாவது ஹாண்டிங்கா இருந்தா, ரீடிங் தாறுமாறா ஏறும் இறங்கும். ஆனா அந்த ரூம் ரொம்பவும் நார்மலாத்தான் இருந்தது.'

'சரி, காலிபண்ணிட்டுப் போன அந்த 3 வயசுப் பையனோட ஃபேமிலியை மீட் பண்ணப் போனியே என்னாச்சு..?' என்று நான் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்க, எனது ஃப்ளாட்டில் திடீரென்று கரண்ட் கட் ஆனது... என் ஏரியாவில் இது சகஜம். அடிக்கடி ஒரு 15 நிமிடத்திற்கு பவர் கட் செய்துக் கொண்டே இருப்பார்கள்.

'இருடா, நான் போய் கேண்டில் எடுத்துட்டு வர்றேன்..'

'வெளியில பால்கனியில உட்கார்ந்துப்போமா..?'

'இல்லடா, இங்க ஈவினிங்ல கொசுத்தொல்லை அதிகம். சோ... ஒரு 15 மினிட்ஸ் உள்ளவே உக்காந்திருப்போம்..' என்றேன். நல்லவேளையாக ஏஸி இவ்வளவு நேரம் ஓடிக்கொண்டிருந்ததால் ரூம் சற்று ஜில்லென்றே இருந்தது. புழுக்கமில்லை..

கேண்டில் ஒலியில் இருவரும் என் அறையில் அமர்ந்திருக்க, நகுலன் அந்த புகைப்பட மர்மத்தை விளக்க ஆர்ம்பித்தான்.

'சதீஷ்...! அந்த புகைப்படத்துல இருக்கிறது ஆவிதான்.' என்று நகுலன் கூற, எனக்கு கொஞ்சம் கிலியாக இருந்தது.

'அப்படின்னா அந்த 3 வயசுப்பையன் இறந்துட்டானா..?'

'இல்ல.. உயிரோடத்தான் இருக்கான்!'

'என்னடா குழப்புறே..?'

'அந்த ஃபோட்டோவுல விழுந்திருக்குற உருவம் ஒரு ஆவிதான் ஆனா, அது உயிரோட இருக்கிற ஒரு குழந்தையோட ஆவி..'

'உயிரோட இருந்தா எப்படிடா ஆவியாகமுடியும்..'
'முடியும்..'

'இதை ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஷன்-னு சொல்வாங்க..'

'அப்படின்னா..?' என்று கேட்டேன்

'ஒரு இடத்துல இருந்துக்கிட்டு, நம்ம ஆன்மா மட்டும் வேற இடத்துக்கு ட்ராவல் பண்ணும். ஆனா, இப்படி டிராவல் பண்ற ஆன்மாக்களை பெரும்பாலும் யாராலயும் பாக்க முடியாது. யாராவது ஒருசிலர் மட்டும் இதை உணருவாங்க. அதுவும், இந்த ஆற்றல் பெரிய பெரிய யோகிகளுக்கு மட்டுமே வசப்படும்.'

'சரி, பெரிய பெரிய ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியப்படுற இந்த ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஷன் 3 வயசு குழந்தைக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்..?'

'குழந்தைக்குத்தான் எல்லாமே தெரியும்.. ஆனா, அந்த குழந்தை வளர வளர அது தனக்கு தெரியாதுன்னு நம்ப ஆரம்பிச்சிடுது..' என்று கூறினான். எனக்கு புரிந்ததுபோலும், புரியாததுபோலும் இருந்தது. கேண்டில் ஒளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'மச்சான் சாரி, கொஞ்சம் புரியும்படியா சொல்லுடா..?' என்று கேட்டேன்.

'சொல்றேன்... ஒரு குழந்தை தனக்கு பசிக்குதுங்கிறதை தன் தாய்க்கு தெரிவிக்கும்...! எப்படி..? மொழிமூலமாயில்லாம எண்ண அலைகள் மூலமா தெரிவிக்கும். தாயும், தன் குழந்தையப் பத்தியே யோசிச்சிக்கிட்டிருக்கிறதால, அந்த குழந்தை எண்ண ட்ரான்ஸ்மிட் பண்ணுதுன்னு அவங்களும் புரிஞ்சிக்கிட்டு குழந்தைக்கும் உணவு கொடுப்பாங்க... இதைத்தான் ஸ்பிரிச்சுவல் சைன்ஸ்ல டெலிபதின்னு சொல்றோம். ஆனா, அதே குழந்தை வளர்ந்து ஏதாவது ஒரு மொழியை கத்துக்கிட்டதும், எண்ண அலைகள் மூலமா தாய்கிட்ட பேசுறதை மறந்துட்டு மொழியில பேச ஆரம்பிச்சுடுது. டெலிபதின்னா என்னன்னு கேட்கும்'

'சரி..?'

'அதே மாதிரிதான், ஒருத்தர் தியானத்துல இருந்தபடி ஆஸ்ட்ரல் பாடியில டிராவல் பண்ற மாதிரி, அந்த 3 வயசுக் குழந்தை தூங்கும்போது, சர்வசாதாரணமா தான் வாழ்ந்து வளர்ந்துட்டிருந்த அந்த பழைய வீட்டுக்கு தேடி வந்திருக்கு... அப்போ அங்க ஃபோட்டோ எடுத்து விளையாடிக்கிட்டு இருந்த வினய் எடுத்த புகைப்படத்துல சிக்கிடுச்சு..'

'தூங்கும்போதுகூட இப்படி ஆவியா வரமுடியுமா..?'

'ஏன் முடியாது..? குழந்தைங்க தூங்கிறதை பாத்திருக்கியா... தெளிவான தூக்கம், கடன் தொல்லையில்ல... கேர்ள் ஃப்ரெண்டு நினைப்பில்ல... கடவுள் நினைப்பில்ல... இதுவே ஒருமாதிரி தியானம்தான்டா... குழந்தைங்க மட்டுமில்ல, கோமாவுல இருக்கிற சிலரோட ஆவியும் அங்கங்க உலாத்துனதா நான் கோர்ஸ் படிக்கும்போது சில விஷயங்களை கேள்விப்பட்டிருக்கேன். இந்த கேஸிலும் அந்தமாதிரிதான் நடந்திருக்கு..'

‘என்னது கோமாவுல இருக்கிறவங்களோட ஆவியா..?’

‘ஆமா... தேடிப்பாரு... இந்த இன்ஸிடெண்ட்ஸ் ரெக்கார்டாயிருக்கு..’

'சரி பாக்குறேன்... அப்போக்கூட அந்த ஆவி ஃபோட்டோவுல எப்படி விழுந்திருக்கும்..'

'நான் ஏற்கனவே சொன்னமாதிரி இது எல்லாரோட கண்ணுக்கும் தெரியாது... சில ரேர் கோ-இன்ஸிடென்ஸ்ல சிலரோட கண்ணுக்கு சிக்கும்..'

'அந்தமாதிரி அந்த வினய் கண்ணுக்கு சிக்கியிருக்குங்கிறியா..?'

'இல்ல... அவன் கையில இருந்த கேமிராவோட லென்சுக்கு சிக்கியிருக்கு.. நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்... ஏன் தெரியுமா..?'

'ஏன்..?'

'ஏன்னா நீயும் வளந்துட்டே..! உனக்குள்ள இருக்கிற சக்தியை மறந்துட்டே... அடுத்தவங்கிட்ட இருக்குன்னாலும் உன்னால நம்பமுடியாது... But nothing to worry about that photo சதீஷ்... நாளைக்கு காலையில, உங்கிட்ட சொன்னதையெல்லாம் இமெயில்ல என் ரிப்போர்ட்டா அனுப்புறேன்.. மிஸஸ்.கீதா குமார்-கிட்ட கொடுத்துடு..' என்று கூறிமுடித்து கிளம்புவதற்காக எழுந்தான்.

கரண்ட் இன்னும் வரவில்லை...

'இங்கேயே ஸ்டே பண்ணிட்டு காலையில போயிடேன்.. எதுக்கு நைட் டைம்ல வண்டி ஓட்டிட்டு போறே..?'

'இல்லை, எனக்கு சென்னையில நைட் டிரைவிங் ரொம்ப பிடிக்கும்.. நான் கிளம்புறேன்.. சண்டே வீட்டுக்கு வா' என்று கிளம்பினான். போவதற்கு முன் தனது பேக்-இலிருந்து ஒரு ஸ்மைலி பால் எடுத்து கொடுத்தான்.

'இதை அந்த வினய் கிட்ட கொடுத்துடு..'

'புரியுது.. நீ கேஸ் கம்ப்ளீட் பண்ணதுக்கு அடையாளமா, உன் சிக்னேச்சர்தானே..?' என்றேன்... பதில் கூறாமல் சிரித்துக்கொண்டே கிளம்பினான்.

- முடிந்தது ஆனால் தொடரும் -


Signature

Popular Posts