Sunday, February 28, 2010

ஜீவசமாதி - [சிறுகதை]3 நிமிடம் முன்புவரைக்கூட நான் ஆத்திகனாகத்தான் இருந்தேன். திடீரென்று எனக்கு நாத்திக எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணம், எனக்கு வந்த ஃபோன்கால்கள்தான்.

2 ஃபோன்கால்கள் என்னை நாத்திகனாக்கிவிட்ட  கொடுமையை நான் என்னென்று சொல்வது.

1 வரிகளில் என்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன். நான் நரேந்திரன். சராசரி மனிதன். ஒரு வருடத்திற்கு முன்புதான் கல்யாணமாகியது.

விவேகானந்தரின் இயற்பெயரில் பாதி கொண்டிருந்ததாலோ என்னவோ எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவரைப் போலவே பல சாதனைகள் செய்வேன் என்று எனது சிறுபிராயத்தில் எண்ணியிருந்தேன். ஆனால் 9 to 5 வேலை, மதியம் டிஃபன் பாக்ஸில் வீட்டு சாப்பாடு, மாதமானால் கிரெடிட் கார்டு பில் பிரச்சினை என்று சாதாரண வாழ்க்கையை என்னால் தவிர்க்க முடியவில்லை. சரி, இதுதான் வாழ்க்கை என்று சகித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.

அந்த வாழ்க்கைக்கும் உலை வைப்பது போல் எனக்கு வந்த ஃபோன்கால் என்னை உலுக்கிப் போட்டுவிட்டது.

என்னதான் ஃபோன்கால் அது என்று நீங்கள் கோவப்படுவது தெரிகிறது..? சொல்லிவிடுகிறேன்..!

என் மனைவிக்கு முதல் பிரசவம். இன்று அதிகாலை வலிகண்டு, தனது சொந்த ஊரில் அவளது பெற்றோர்களால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படாள். சிசேரியன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட்டார்களாம்.

நான் அன்புச்சித்தர் சுக்கிலநாத சுவாமிகள்-இன் பரம பகதன். வாழ்வில் பலமுறை எனக்கு இன்னல்கள் ஏற்பட்டபோதெல்லாம் அவரது ஜீவசமாதிக்கு போய்த்தான் ஆறுதலடைந்திருக்கிறேன். எப்போதும் அவரது ஜீவசமாதியின் ஃபோட்டோ எனது பர்ஸில் வைத்திருக்கிறேன்.

இன்று காலை எனக்கு ஃபோனில் தகவல் வந்தபோது முதலில் அவரைத்தான் வேண்டிக்கொண்டேன். குழந்தை நல்லபடியாக பிறந்து தாயும் சேயும் நலமுடன் இருந்தால் அவரது சமாதிக்கோவிலுக்கு 10 பல்புகள் வாங்கி போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டு தெம்புடன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன்.

இப்போதும் நான் ஆஸ்பத்திரிக்கு போகவில்லை, அவரது ஜீவசமாதிக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். எனக்கு எல்லாமே அவர்தான் என்று எண்ணியிருக்கும் இந்த நேரத்தில்தான் எனக்கு முதல் ஃபோன்கால் வந்தது.

முதல் ஃபோன்கால்

'ஹலோ..'

'மாப்ள நான்தான்' என் மாமனார் பேசினார்.

'சொல்லுங்க மாமா, தேவிக்கு இப்போ எப்படியிருக்கு..'

'மாப்ள, டாக்டருங்க என்னென்னமோ சொல்றாங்க... ஆப்பரேஷன் பண்ணுமாம்.. குழந்தை ஏடாகூடமா இருக்குதாம். சிசேரியன் பண்ணித்தான் எடுக்கணுமாம். நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க மாப்ள...'

'பயப்படாதீங்க மாமா... நான் சுக்கிலநாத சுவாமியோட ஜீவசமாதிக்குத்தான் போயிட்டிருக்கேன்... நான் நல்லபடியா வேண்டிக்கிட்டு வந்துர்றேன். நீங்க தைரியமா இருங்க... அத்தைக்கும் தைரியம் சொல்லுங்க... எல்லாம் சாமி பாத்துப்பாரு..'

'மாப்ள..?'

ஃபோன் கட் செய்யப்பட்டது. நான் தெம்பாகத்தான் இருந்தேன். இருந்தாலும் ஆபரேஷன் செய்யவேண்டும் என்ற செய்தி என்னை கொஞ்சம் உலுக்கிவிட்டது. உடனே பர்ஸை எடுத்து சுவாமி சுக்கிலநாத சித்தரின் புகைப்படத்தை பார்த்துக் கொண்டேன். அவர் மரத்தடியில் உட்கார்ந்தபடி சிரித்துக் கொண்டிருந்தது எனக்கு தெம்பாக இருந்தது. இன்னும் 3 ஸ்டாப்பிங்கில் கோவில் வந்துவிடும்.

இந்த நேரத்தில்தான் எனக்கு அடுத்த ஃபோன்கால் வந்தது.

இரண்டாம் ஃபோன்கால்

'ஹலோ'

'மாப்ள..' மாமாவின் குரல் மிகவும் நடுங்கியபடி இருந்தது.

'சொல்லுங்க மாமா.. என்னாச்சு..?'

'மாப்ள, 2 உசுருல ஒரு உசுரைத்தான் காப்பாத்த முடியுமாம். டாக்டருங்க முடிவா சொல்லிட்டாங்க...'

'அய்யோ.. என்ன மாமா சொல்றீங்க...?'

'மாப்ள நீங்க சீக்கிரம் வாங்க மாப்ள. பயமாயிருக்க... டாக்டருங்க என்னென்னவோ கேக்குறாங்க... எனக்கும் உங்க அத்தைக்கும் ஒண்ணும் புரியல...' என்று ஃபோனை வைத்தார்.

இந்த இரண்டாவது ஃபோன்கால்தான், நான் என்னவோ தப்பு செய்கிறேனோ என்று என்னை யோசிக்க வைத்தது. நான் ஆபத்து நேரத்தில் அவர்களுக்கு உதவி புரியாமல் இப்படி ஜீவசமாதிக்கு போகத்தான் வேண்டுமா..? அப்படி இந்த சித்தரை நம்பி என்னத்தான் பிரயோசனம். நான் இவ்வளவு வேண்டியும் ஒரு உசுரைத்தான் இவரால் காப்பாற்ற முடிந்ததா? என்று எனக்குள் நாத்திக எண்ணங்கள் உதயமாகிய நேரத்தில் கண்டெக்டர் கூச்சல் போட்டார்.

'சமாதிக்கோயில்லாம் இறங்கு..'

நான் இறங்கினேன்.

அருகில் செல்லச்செல்ல அவரது கோவில் மிகவும் காலியாக இருந்தது. எனக்கு இவரிடம் வேண்டலாமா? வேண்டாமா? என்று மாறுபட்ட எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

'அருள்மிகு அன்புச்சித்தர் சுக்கிலநாத சுவாமிகள் அவர்களின் ஜீவசமாதிக்கோவில்' என்று போர்டு என்னை வரவேற்றது.

நான் இந்த சித்தரைப் பற்றி எனது நண்பர் ஒருவரின்மூலம் தெரிந்துக் கொண்டேன். இவர் 50 ஆண்டுகளுக்கு முன் இங்கிருந்த மரத்தடியில் தங்கியிருந்தாராம். அம்மணமாகத்தான் இருப்பாராம். ஒரு நாள் திடீரென்று தன்னை ஒரு குழிக்குள் போட்டு மூடும்படி கூறினாராம். மக்களும் அவ்வாறே செய்ய, இன்னமும் குழிக்குள் அவர் உயிருடன் சமாதியாய் இருந்தபடி அனைவருக்கும் அருள்பாலிக்கிறாராம்.

இதையெல்லாம் நினைவுக்கூர்ந்தபடி நான் அவரது ஜீவசமாதியை நெருங்கினேன். மீண்டும் மாமாவிடமிருந்து ஃபோன் வந்தது.

'..ஹலோ..'

'மாப்ள..' அழுகுரலில் தொடர்ந்தார்... 'இப்பத்தான் நர்ஸ் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளருந்து வந்துட்டு போனாங்க...'

'..என்...என்னவாம்... என்ன சொன்..னாங்க..?'

'ரெண்டு உசுரையும் காப்பாத்தறது கஷ்டம்னு டாக்டருங்க பேசிக்கிட்டாங்களாம்..'

'அய்யோ..'
'மா..ப்ள...' தொடர்ந்து அழுதபடி 'என் பொண்ணுக்கு ஏதாவதுன்னா, நானும் உங்க அத்தையும் உயிரோட இருக்கமாட்டோம்..'

'மா..மா.... ..ழா..தீங்க...' என்றபோது என் குரலும் நடுங்குவதை  உணர்ந்தேன்.

மாமா ஃபோனை வைத்துவிட்டார்.

என்ன வாழ்க்கை இது..?
எனக்குமட்டும் ஏன் இப்படி நடக்கிறது?
இது சரியல்ல... நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன்எனக்கு இவ்வாறு நடப்பது மிகவும் அநியாயம்.

இப்போது அந்த ஜீவசமாதியை நெருங்கியிருந்தேன். இந்தக் கோவில் திறந்த மைதானத்தில் அமைந்திருந்தது. பொதுவாக வாரத்தில் வியாழன் மட்டும்தான் இந்த சமாதியில் கூட்டம் கூடும். வியாழன்தான் சித்தர் சமாதியான நாள். மற்ற நாட்களில் யாருமே இருக்க மாட்டார்கள். இன்று செவ்வாய் என்பதால் வெறிச்சோடித்தான் இருந்தது.

சுற்றிலும் யாருமே இல்லை... எனக்கு பயங்கர கோபம். சுக்கிலநாத சுவாமியிடம் அழலாம் என்றும் இருந்தது. அதே நேரம் அவர்மேல் கோபமும் வந்தது. அவரை நேரில் நிற்கவைத்து நாலு வார்த்தை நறுக்கென்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. நேரில் அவரிடம் எப்படி கேட்பது அவர்தான் சமாதிக்குள் ஒளிந்திருக்கிறாரே! என்று கோபம் வந்தது. இன்ஸ்டால்மெண்ட்டில் கோவில் கட்டுமானப்பணி தொடர்ந்து நடந்துக்கொண்டிருப்பதால் கோவிலுக்குள் மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு, செங்கல் என்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.

எனக்குள் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது!

சமாதிக்குள் உண்மையாகவே சித்தர் உயிருடன் உட்கார்ந்திருக்கிறாரா..? இல்லை இவ்வளவு நாட்களாக நான்தான் அப்படி மடத்தனமாக நம்பியிருந்தேனா..? சமாதியை உடைத்துப் பார்த்தால் என்ன..?

உள்ளே அவர் உயிருடன் இருந்தால் உரிமையோடு கேள்வி கேட்கலாம். இல்லாமல் வெறும் எலும்புக்கூடு இருந்தால், இதுநாள் வரை அவரை நம்பியிருந்த பக்தர்கள் அனைவரும் மூடர்கள் என்று நிரூபிக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்றுதான் சமாதியை உடைக்க ஏற்ற நாள். மற்ற நாட்களில் கூட்டமிருக்கும். நான் சமாதியை உடைக்க நினைத்தாலே என்னை வெட்டிக் கூறுபோட்டுவிடுவார்கள்.

மனிதன் கோவப்படும்போது பைத்தியமாகிவிடுவான் என்பார்களே! அப்படித்தான் என் நிலையும் இருந்தது. பைத்தியக்காரனாகவே இருந்துவிட்டுப் போவோமே... என்று நான் கோவிலுக்குள் வந்து கதவைச் சாத்திக் கொண்டேன். வெளியில் சற்று தூரத்திலிருந்த பூக்கடைக்காரர் என்னைப் பார்த்தார். நான் இங்கு அடிக்கடி வருபவன் என்பதால் அவர் என்னை அடையாளம் கண்டுக்கொண்டார். நான் தியானம் செய்யப்போவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார்.

உள்ளே வந்ததும்... தாமதிக்காமல் கடப்பாரையை எடுத்தேன். ஜீவசமாதி என்று இதுநாள்வரை நான் வணங்கிக்கொண்டிருந்த அந்த இடத்தில் குத்தினேன். ஏனோ எனக்கு அழுகைதான் வந்தது. இருந்தாலும் தொடங்கிய காரியத்தை நிறுத்த மனமில்லை. மீண்டும் குத்தினேன். சில நிமிடங்களில் சமாதி மூடிய நிலையில் தெரிந்தது. சுற்றிலும்  மணல் சூழ்ந்திருந்தது. மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மண்வாறினேன். கொஞ்சம் கொஞ்சமாக ஜீவசமாதியின் மூடி தட்டுப்பட்டது. அதைத்திறக்க முற்படும்போது...

மீண்டும் ஃபோன் வந்தது.

பயந்தேன். என்ன செய்தியாக இருக்குமோ. என்று எண்ணியபடி எடுத்து தயக்கமாக...

'...லோ..'

'மாப்ள, நாம கும்பிட்ட கடவுள் நம்மளை கைவிடலை, தாயும் சேயும் நலம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க... அழகான ஆண்குழந்தை பொறந்திருக்கு மாப்ள... வாழ்த்துக்கள். நான் ஃபோனை வைக்கிறேன். இன்னும் சம்மந்திக்கு ஃபோன் பண்ணணும்' என்று கூறி ஃபோனை கட்செய்துவிட்டார்.

எனக்கு எப்படி ரியாக்ட் பண்ணுவது என்றே தெரியவில்லை. சே! என்ன காரியம் செய்திருக்கிறோம். இப்படியா நடந்துக் கொள்வது. பைத்தியக்காரத்தனத்தின் உச்சக்கட்டம் இது... என்று எண்ணியபடி ஃபோனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சமாதியின் மூடியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்துக் கொண்டிருந்தது. சுவாமி சுக்கிலநாத சித்தரை எண்ணிப் பூரித்துப் போனேன்.

சமாதி மூடி மீண்டும் கண்களை உறுத்தியது.

தோண்டியது தோண்டினோம். திறந்து பார்த்துவிடலாமா..! இல்லை... இல்லை... நம்பிக்கையில்லாமல் இல்லை... சுவாமியை நேரில் பார்த்து நன்றி சொல்லலாமே என்று ஒரு எண்ணம் தோன்றியது. அவர் என்னை சபித்தாலும் பரவாயில்லை... பஸ்பமாக்கினாலும் பரவாயில்லை... நான் அவருடைய பக்தனாக சாகவும் தயார். சுவாமியை எப்படியும் நேரில் பார்த்துவிடுவது. என்று எண்ணியபடி அந்த மண்மூடியை அகற்றினேன்.

உள்ளே...

என்று அத்துடன் அந்த பேப்பரில் இருந்த கதை முடிந்தது. தீபா அந்த பேப்பரைத் திருப்பிப் பார்த்தாள். ஒரு நடிகையின் படம்தான் இருந்தது.

கடற்கரையில் சுண்டல் மடித்துக் கொடுத்த பேப்பரில் இப்படி ஒரு கதை இருக்கும் என்று தீபா நினைக்கவேயில்லை... ப்ச்... முடிவு படிக்க முடியாமல் போய்விட்டதே என்று வருந்தினாள். தன்னருகில் அமர்ந்திருந்த சுந்தரிடம்.

'ஹே சுந்தர், சூப்பர் கதைடா... END படிக்க முடியில..'

'ஏன் என்னாச்சு..'

'END வேற பேப்பர்ல போயிடுச்சு...'

'உன்னை யாரு சுண்டல் மடிச்சு கொடுத்த பேப்பரெல்லாம் படிக்க சொன்னது.'

'ஹே, எப்படியாவது அந்த சுண்டல்காரனை தேடிப்பிடிச்சி இந்த பேப்பரோட அடுத்தபக்கத்தை கொண்டுவாடா.. ப்ளீஸ்..'

'விளையாடுறியா..! அவன் இந்நேரம் எங்கே இருக்கிறானோ... சுத்திப்பாரு ஆயிரக்கணக்கான கூட்டம் நடமாடுது... நான் எங்கேன்னு போய் அவனைத் தேடுறது.. அப்படியே தேடிப்பிடிச்சாலும் அவன் அந்த பேப்பரை வேற யாருக்குன்னா மடிச்சி கொடுத்துருப்பான்...' என்று சுந்தர் ப்ராக்டிக்கலாக பதிலளித்தான்.

'ஒரு காதலிக்காக இதுக்கூட செய்யமாட்டியா... அவனவன் வானவில்லை வலைச்சு தர்றேங்கிறான்... நிலாவை உடைச்சு ஒரு துண்டு கொண்டு வந்து தர்றேங்கிறான்... நீயும் இருக்கியே..' என்று புலம்பினாள்.

'அந்தமாதிரி டைலாக்கெல்லாம் எனக்கு வராது... டைம் ஆகுது பாரு... போலாம் வா..' என்று எழுந்தான்.

தீபாவும் எழுந்தாள். இருவரும் கைகோர்த்தபடி மணலில் நடந்து செல்ல, கடற்கரையில் மக்கள் போடும் கூச்சலில் அலையின் சத்தத்தோடு சேர்ந்து அந்த கதை கொஞ்சம் கொஞ்சமாக தீபாவுக்கு மறந்து போனது...- நீங்க மறந்துடாதீங்க -


Signature
There was an error in this gadget

Popular Posts